தெய்வத் தாமரைச் செவ்வியின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்புங் கழலும் அலம்பப் புனைந்து
கூற்றின் ஆற்றல் மாற்றிப்போற் றாது
5
வலம்புரிநெடுமால் ஏன மாகி
நிலம்புக்(கு)
ஆற்றலின் அகழத் தோற்றாது நிமிர்ந்து
பக்தி அடியவர் பச்சிலை இடினும்
முத்தி கொடுத்து முன்னின் றருளித்
10
திகழ்ந்துள தொருபால் திருவடி; அகஞ்சேந்து
மறுவில் கற்பகத் துறுதளிர் வாங்கி
நெய்யில் தோய்த்த செவ்வித் தாகி
நூபுரங் கிடப்பினும் நொந்து தேவர்
மடவரல் மகளிர் வணங்குபு வீழ்த்த
15
சின்னப் பன்மலர் தீண்டிடச் சிவந்து
பஞ்சியும் அனிச்சமும் எஞ்ச எஞ்சாத்
திருவொடும் பொலியும் ஒருபால் திருவடி
நீலப் புள்ளி வாளுகிர் வேங்கைத்
தோலின் கலிங்கம் மேல்விரித் தசைத்து
20
நச்செயிற்றரவக் கச்சையாப் புறுத்துப்
பொலிந்துள தொருபால் திருவிடை இலங்கொளி
அரத்த ஆடை விரித்துமீ துறீஇ
இரங்குமணி மேகலை ஒருங்குடன் சாத்திய
மருங்கிற் றாகும் ஒருபால் திருவிடை
25
செங்கண் அரவும் பைங்கண் ஆமையுங்
கேழற் கோடும் வீழ்திரள் அக்கும்
நுடங்கு நூலும் இடங்கொண்டு புனைந்து
தவளநீ றணிந்ததோர் பவளவெற் பென்ன
ஒளியுடன் திகழும் ஒருபால் ஆகம்
30
வாரும் வடமும் ஏர்பெறப் புனைந்து
செஞ்சாந் தணிந்து குங்குமம் எழுதிப்
பொற்றா மரையின் முற்றா முகிழென
உலகேழ் ஈன்றும் நிலையில் தளரா
முலையுடன் பொலியும் ஒருபால் ஆகம்
35
அயில்வாய் அரவம் வயின்வயின் அணிந்து
மூவிலை வேலும் பூவாய் மழுவுந்
தமருகப் பறையும் அமர்தரத் தாங்கிச்
சிறந்துள தொருபால் திருக்கரஞ் செறிந்த
சூடகம் விளங்கிய ஆடகக் கழங்குடன
40
ஒம்மென்பந்தும் அம்மென் கிள்ளையும்
தரித்தே திகழும் ஒருபால் திருக்கரம்
இரவியும் எரியும் விரவிய வெம்மையின்
ஒருபால் விளங்குந் திருநெடு நாட்டம்
நவ்வி மானின் செவ்வித் தாகிப்
45
பாலிற் கிடந்த நீலம் போன்று
குண்டுநீர்க் குவளையின் குளிர்ந்து நிறம்பயின்று
எம்மனோர்க் கடுத்த வெம்மைநோய்க் கிரங்கி
உலகேழ் புரக்கும் ஒருபால் நாட்டம்
நொச்சிப் பூவும் பச்சை மத்தமும்
50
கொன்றைப் போதும் மென்துணர்த் தும்பையும்
கங்கை யாறும் பைங்கண் தலையும்
அரவும் மதியும் விரவத் தொடுத்த
சூடா மாலை சூடிப் பீடுகெழு
நெருப்பில் திரித்தனைய உருக்கிளர் சடிலமொடு
55
நான்முகம்கரந்த பால்நிற அன்னம்
காணா வண்ணங்கருத்தையுங் கடந்து
சேணிகந் துளதே ஒருபால் திருமுடி,
கடவுட் கற்பின் மடவரல் மகளிர்
கற்பக வனத்துப் பொற்பூ வாங்கிக்
60
கைவைத்துப் புனைந்த தெய்வமாலை
நீலக் குழல்மிசை வளைஇமேல் நிவந்து
வண்டும் தேனும் கிண்டுபு திளைப்பத்
திருவொடு பொலியும் ஒருபால் திருமுடி;
இனைய வண்ணத்து நினைவருங் காட்சி
65
இருவயின் உருவும் ஒருவயிற் றாகி
வலப்பால் நாட்டம் இடப்பால் நோக்க
வாணுதல் பாகம் நாணுதல் செய்ய
வலப்பால் திருக்கரம் இடப்பால் வனமுலை
தைவந்து வருட மெய்ம்மயிர் பொடித்தாங்
70
குலகம்ஏழும் பன்முறை ஈன்று
மருதிடங் கொண்ட மருத வாண
திருவடி பரவுதும் யாமே நெடுநாள்
இறந்தும் பிறந்தும் இளைத்தனம் மறந்தும்
சிறைக்கருப் பாசயம் சேரா
75
மறித்தும் பிறவா வாழ்வுபெறற் பொருட்டே.