புண்ணிய புராதன புதுப்பூங் கொன்றைக்
கண்ணி வேய்ந்த ஆயிலை நாயக
காள கண்ட கந்தனைப் பயந்த
வாளரி நெடுங்கண் மலையாள் கொழுந
5
பூத நாத பொருவிடைப் பாக
வேத கீத விண்ணோர் தலைவ
முத்தி நாயக மூவா முதல்வ
பத்தி யாகிப் பணைத்தமெய் யன்பொடு
நொச்சி யாயினுங் கரந்தை யாயினும்
10
பச்சிலை இட்டுப் பரவுந் தொண்டர்
கருவிடைப் புகாமற் காத்தருள் புரியும்
திருவிடை மருத திரிபு ராந்தக
மலர்தலை உலகத்துப் பலபல மாக்கள்
மக்களை மனைவியை ஒக்கலை ஒரீஇ
15
மனையும் பிறவும் துறந்து நினைவரும்
காடும் மலையும் புக்குக் கோடையில்
கைம்மேல் நிமிர்த்துக் காலொன்று முடக்கி
ஐவகை நெருப்பின் அழுவத்து நின்று
மாரி நாளிலும் வார்பனி நாளிலும்
20
நீரிடை மூழ்கி நெடிது கிடந்தும்
சடையைப் புனைந்துந் தலையைப் பறித்தும்
உடையைத் துறந்தும் உண்ணா துழன்றும்
காயுங் கிழங்குக் காற்றுதிர் சருகும்
வாயுவும் நீரும் வந்தன அருத்தியுங்
25
களரிருங் கல்லிலுங் கண்படை கொண்டும்
தளர்வுறும் யாக்கையைத் தளர்வித்(து)
ஆங்கவர்
அம்மை முத்தி அடைவதற் காகத்
தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்;
30
ஈங்கிவை செய்யாது யாங்கள் எல்லாம்
பழுதின் றுயர்ந்த எழுநிலை மாடத்துஞ்
செழுந்தா துதிர்ந்த நந்தன வனத்துந்
தென்றல் இயங்கும் முன்றில் அகத்துந்
தண்டாச் சித்திர மண்டப மருங்கிலும்
35
பூவிரி தரங்க வாரிக் கரையிலும்
மயிற்பெடை ஆலக் குயிற்றிய குன்றிலும்
வேண்டுழி வேண்டுழி ஆண்டாண் டிட்ட
மருப்பின் இயன்ற வாளரி சுமந்த
விருப்புறு கட்டில் மீமிசைப் படுத்த
40
ஐவகை அமளி அணைமேல் பொங்கத்
தண்மலர் கமழும் வெண்மடி விரித்துப்
பட்டின்உட் பெய்த பதநுண் பஞ்சின்
நெட்டணை யருகாக் கொட்டைகள் பரப்பிப்
பாயல் மீமிசைப் பரிபுரம் மிழற்றச்
45
சாயல்அன்னத்தின் தளர்நடை பயிற்றிப்
பெற்றோ ரணத்தைச் சுற்றிய துகிலென
அம்மென் குறங்கின் ஒம்மென் கலிங்கம்
கண்ணும் மனமுங் கவற்றப் பண்வர
இரங்குமணி மேகலை மருங்கில் கிடப்ப
50
ஆடர வல்குல் அரும்பெறல் நுசுப்பு
வாட வீங்கிய வனமுலை கதிர்ப்ப
அணியியல் கமுகை அலங்கரித் ததுபோல்
மணியியல் ஆரங் கதிர்விரித் தொளிர்தர
மணிவளை தாங்கும் அணிகெழு மென்தோள்
55
வரித்தசாந்தின்மிசை விரித்துமீ திட்ட
உத்தரீ யப்பட் டொருபால் ஒளிர்தர
வள்ளை வாட்டிய ஒள்ளிரு காதொடு
பவளத் தருகாத் தரளம் நிரைத்தாங்(கு)
ஒழுகி நீண்ட குமிழொன்று பதித்துக்
60
காலன் வேலும் காம பாணமும்
ஆல காலமும் அனைத்தும்இட் டமைத்த
இரண்டு நாட்டமும் புரண்டுகடை மிளிர்தர
மதியென மாசறு வதனம் விளங்கப்
புதுவிரை அலங்கல் குழன்மிசைப் பொலியும்
65
அஞ்சொல் மடந்தையர் ஆகந் தோய்ந்துஞ்
சின்னம் பரப்பிய பொன்னின் கலத்தில்
அறுசுவை அடிசில் வறிதினி தருந்தா(து)
ஆடினர்க் கென்றும் பாடினர்க் கென்றும்
வாடினர்க் கென்றும் வரையாது கொடுத்தும்
70
பூசுவன பூசியும் புனைவன புனைந்தும்
தூசின் நல்லன தொடையிற் சேர்த்தியும்
ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்து
மைந்தரும் ஒக்கலும் மனமகிழ்ந் தோங்கி
இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை
75
மந்திர எழுந்தைந்தும் வாயிடை மறவாது
சிந்தை நின்வழி செலுத்தலின் அந்த
முத்தியும் இழந்திலம் முதல்வ! அத்திறம்
நின்னது பெருமை அன்றோ! என்னெனின்
வல்லான் ஒருவன் கைம்முயன்று எறியினும்
80
மாட்டா ஒருவன் வாளா எறியினும்
நிலத்தின் வழாஅக் கல்லேபோல்
நலத்தின் வழார்நின் நாமம்நவின் றோரே.