மேவிய புன்மயிர்த் தொகையோ அம்மயிர்
பாவிய தோலின் பரப்போ தோலிடைப்
புகவிட்டுப் பொதிந்த புண்ணோ புண்ணிடை
ஊறும் உதிரப் புனலோ கூறுசெய்(து)
5
இடையிடை நிற்கும் எலும்போ எலும்பிடை
முடைகெழு மூளை விழுதோ வழுவழுத்து
உள்ளிடை ஒழுகும் வழும்போ மெள்ளநின்
றூரும் புழுவின் ஒழுங்கோ நீரிடை
வைத்த மலத்தின் குவையோ வைத்துக்
10
கட்டிய நரம்பின் கயிறோ உடம்பினுள்
பிரியா தொறுக்கும் பிணியோ தெரியா(து)
இன்ன தியானென் றறியேன் தெரியா
ஏதினுந் தேடினன் யாதினுங் காணேன்,
முன்னம்
15
வரைத்தனி வில்லால் புரத்தைஅழல் ஊட்டிக்
கண்படை யாகக் காமனை ஒருநாள்
நுண்பொடி யாக நோக்கியண் டத்து
வீயா அமரர் வீயவந் தெழுந்த
தீவாய் நஞ்சைத் திருவமு தாக்கி
20
இருவர் தேடி வெருவர நிமிர்ந்து
பாலனுக் காகக் காலனைக் காய்ந்து
சந்தன சரள சண்பக வகுள
நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது
நவமணி முகிழ்த்த புதுவெயில் எறிப்ப
25
எண்ணருங் கோடி இருடிகணங் கட்குப்
புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த
திருவிடை மருத பொருவிடைப் பாக
மங்கை பங்க கங்கைநா யகநின்
தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
30
மாயப்படலங் கீறித் தூய
ஞான நாட்டம் பெற்றபின் யானும்
நின்பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும்
என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன்
நின்னிலை அனைத்தையும் கண்டேன் என்னே
35
நின்னைக் காணா மாந்தர்
தம்மையுங் காணாத் தன்மை யோரே.