திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாழ்ந்தனம் என்று தாழ்ந்தவர்க் குதவாது
தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்கா(து)
உண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி
அவியடு நர்க்குச் சுவைபல பகர்ந்தே

5
ஆரா உண்டி அயின்றன ராகித்

தூராக் குழியைத் தூர்த்துப் பாரா
விழுப்பமும் குலனும் ஓழுக்கமும் கல்வியும்
தன்னிற் சிறந்த நன்மூ தாளரைக்
கூஉய்முன் நின்றுதன் ஏவல் கேட்குஞ்

10
சிறாஅர்த் தொகுதியின் உறாஅப் பேசியும்
பொய்யொடு புன்மை புல்லர்க்குப் புகன்றும்
மெய்யும் மானமும் மேன்மையும் ஒரீஇ
தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த
நன்மனைக் கிழத்தி யாகிய அந்நிலைச்

15
சாவுழிச் சாஅந் தகைமையள் ஆயினும்

மேவுழி மேவல் செய்யாது காவலொடு
கொண்டோள் ஒருத்தி உண்டிவேட் டிருப்ப
எள்ளுக் கெண்ணெய் போலத் தள்ளாது
பொருளின் அளவைக்குப் போகம்விற் றுண்ணும்

20
அருளில் மடந்தையர் ஆகம் தோய்ந்தும்

ஆற்றல்செல் லாது வேற்றோர் மனைவயின்
கற்புடை மடந்தையர் பொற்புநனி கேட்டுப்
பிழைவழி பாராது நுழைவழி நோக்கியும்
நச்சி வந்த நல்கூர் மாந்தர்தம்

25
விச்சையிற் படைத்த வெவ்வேறு காட்சியின்

அகமலர்ந் தீவார் போல முகமலர்ந்(து)
இனிது மொழித்தாங்(கு) உதவுதல் இன்றி
நாளும் நாளும் நாள்பல குறித்(து)அவர்
தாளின் ஆற்றல் தவிர்த்தும் கேளிகழ்ந்து

30
இகமும் பரமும் இல்லை என்று

பயமின் றொழுகிப் பட்டிமை பயிற்றி
மின்னின் அனையதன் செல்வத்தை விரும்பித்
தன்னையும் ஒருவ ராக உன்னும்
ஏனையோர் வாழும் வாழ்க்கையும் நனைமலர்ந்து

35
யோசனை கமழும் உற்பல வாவியில்

பாசடைப் பரப்பில் பால்நிற அன்னம்
பார்ப்புடன் வெருவப் பகுவாய் வாளைகள்
போர்த்தொழில் புரியும் பொருகா விரியும்
மருதமும் சூழ்ந்த மருத வாண

40
சுருதியும் தொடராச் சுருதி நாயக

பத்தருக் கெய்ப்பினில் வைப்பென உதவும்
முத்தித் தாள மூவா முதல்வநின்
திருவடி பிடித்து வெருவரல் விட்டு
மக்களும் மனைவியும் ஒக்கலும் திருவும்

45
பொருளென நினையா(து)உன் னருளினைநினைந்து
இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர் ஒதுங்கிச்
சின்னச் சீரை துன்னல் கோவணம்
அறுதற் கீளொடு பெறுவது புனைந்து

50
சிதவல்ஓடொன் றுதவுழி எடுத்தாங்(கு)

இடுவோர் உளரெனின் நிலையில்நின் றயின்று
படுதரைப் பாயலிற் பள்ளி மேல் ஓவாத்
தகவெனும் அரிவையைத் தழீஇ மகவெனப்
பல்லுயிர் அனைத்தையும் ஒக்கப் பார்க்கும்நின்

55
செல்வக் கடவுள் தொண்டர் வாழ்வும்

பற்றிப் பார்க்கின் உற்றநா யேற்குக்
குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப்
பிரளய சலதியும் இருவகைப் பொருளும்
ஒப்பினும் ஒவ்வாத் துப்பிற் றாதலின்

60
நின்சீர்அடியார் தஞ்சீர் அடியார்க்(கு)

அடிமை பூண்டு நெடுநாட் பழகி
முடலை யாக்கையொடு புடைபட் டொழுகியவர்
காற்றலை ஏவலென் நாய்த்தலை ஏற்றுக்
கண்டது காணின் அல்லதொன்(று)

65
உண்டோமற்றெனக் குள்ளது பிறிதே.

பொருள்

குரலிசை
காணொளி