இண்டை மலர் கொண்டு, மணல் இலிங்கம் அது இயற்றி, இனத்து ஆவின் பால் ஆட்ட, இடறிய தாதையைத் தாள்
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்தத் தொடர்ந்து அவனைப் பணி கொண்ட விடங்கனது ஊர் வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும், மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி,
கண்டவர்கள் மனம் கவரும், புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்து ஆடும், கலய நல்லூர் காணே .