தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன், தாமரையோன் தலை கலனாக் காமரம் முன் பாடி
உண் பலி கொண்டு உழல் பரமன், உறையும் ஊர், நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலய நல்லூர் அதனை,
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன், நாவலர் கோன், ஆரூரன் நாவின் நயந்து உரை செய்
பண் பயிலும் பத்தும் இவை பத்தி செய்து நித்தம் பாட வல்லார், அல்லலொடு பாவம் இலர், தாமே .