பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவலிவலம்
வ.எண் பாடல்
1

ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி, கள்ளம் ஒழிந்து, வெய்ய
சொல்லை ஆறி, தூய்மை செய்து, காமவினை அகற்றி,
நல்ல ஆறே உன்தன் நாமம் நாவில் நவின்று ஏத்த,
வல்ல ஆறே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

2

இயங்குகின்ற இரவி, திங்கள், மற்றும் நல்-தேவர் எல்லாம்,
பயங்களாலே பற்றி, நின்பால் சித்தம் தெளிகின்றிலர்;
தயங்கு சோதி! சாமவேதா! காமனைக் காய்ந்தவனே!
மயங்குகின்றேன்! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

3

பெண்டிர், மக்கள், சுற்றம், என்னும் பேதைப் பெருங்கடலை
விண்டு, பண்டே வாழ மாட்டேன்; வேதனை நோய் நலிய,
கண்டு கண்டே உன்தன் நாமம் காதலிக்கின்றது, உள்ளம்;-
வண்டு கெண்டிப் பாடும் சோலை வலிவலம் மேயவனே!

4

மெய்யர் ஆகிப் பொய்யை நீக்கி, வேதனையைத் துறந்து,
செய்யர் ஆனார் சிந்தையானே! தேவர் குலக்கொழுந்தே!
நைவன், நாயேன்; உன்தன் நாமம் நாளும் நவிற்றுகின்றேன்;
வையம் முன்னே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

5

துஞ்சும் போதும் துற்றும் போதும் சொல்லுவன், உன் திறமே;
தஞ்சம் இல்லாத் தேவர் வந்து, உன் தாள் இணைக்கீழ்ப் பணிய,
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ? நாளும் நினைந்து, அடியேன்,
“வஞ்சம் உண்டு” என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!

6

“புரிசடையாய்! புண்ணியனே! நண்ணலார் மூஎயிலும்
எரிய எய்தாய்! எம்பெருமான்!” என்று இமையோர் பரவும்
கரி உரியாய்! காலகாலா! நீலமணி மிடற்று
வரி அரவா! வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

7

தாயும் நீயே! தந்தை நீயே! சங்கரனே! அடியேன்
ஆயும் நின்பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது, உள்ளம்;
ஆயம் ஆய காயம் தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார்;
மாயமே என்று அஞ்சுகின்றேன்-வலிவலம் மேயவனே!

8

நீர் ஒடுங்கும் செஞ்சடையாய்! நின்னுடைய பொன்மலையை
வேரொடும் பீழ்ந்து ஏந்தல் உற்ற வேந்தன் இராவணனைத்
தேரொடும் போய் வீழ்ந்து அலற, திருவிரலால் அடர்த்த
வார் ஒடுங்கும் கொங்கை பங்கா! வலிவலம் மேயவனே!

9

ஆதி ஆய நான்முகனும் மாலும் அறிவு அரிய
சோதியானே! நீதி இல்லேன் சொல்லுவன், நின் திறமே;
ஓதி நாளும் உன்னை ஏத்தும் என்னை வினை அவலம்
வாதியாமே வந்து நல்காய் வலிவலம் மேயவனே!

10

பொதியிலானே! பூவணத்தாய்! பொன் திகழும் கயிலைப்
பதியிலானே! பத்தர் சித்தம் பற்று விடாதவனே!
விதி இலாதார் வெஞ்சமணர் சாக்கியர் என்று இவர்கள்
மதி இலாதார் என் செய்வாரோ? வலிவலம் மேயவனே!

11

வன்னி, கொன்றை, மத்தம், சூடும் வலிவலம் மேயவனைப்
பொன்னி நாடன்-புகலி வேந்தன், ஞானசம்பந்தன்-சொன்ன
பன்னு பாடல் பத்தும் வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னு சோதி ஈசனோடே மன்னி இருப்பாரே.

திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவலிவலம்
வ.எண் பாடல்
1

பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;
ஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்
மேவிய திரு உரு உடையவன்-விரைமலர்
மா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.

2

இட்டம் அது அமர் பொடி இசைதலின், நசை பெறு
பட்டு அவிர் பவள நல்மணி என அணி பெறு
விட்டு ஒளிர் திரு உரு உடையவன்-விரைமலர்
மட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே

3

உரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்
வெரு உறு வகை எழு விடம், வெளிமலை அணி
கருமணி நிகர் களம் உடையவன்-மிடைதரு
மரு மலி பொழில் வலிவலம் உறை இறையே.

4

அனல் நிகர் சடை அழல் அவி உற என வரு
புனல் நிகழ்வதும், மதி நனை பொறி அரவமும்
என நினைவொடு வரும் இதும், மெல முடிமிசை
மனம் உடையவர் வலிவலம் உறை இறையே.

5

பிடி அதன் உரு உமை கொள, மிகு கரி அது
வடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர்
கடி, கணபதி வர அருளினன்-மிகு கொடை
வடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.

6

தரை முதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,
விரை மலி குழல் உமையொடு விரவு அது செய்து,
நரை திரை கெடு தகை அது அருளினன்-எழில்
வரை திகழ் மதில் வலிவலம் உறை இறையே.

7

நலிதரு தரை வர நடை வரும் இடையவர்
பொலிதரு மடவரலியர் மனை அது புகு
பலி கொள வருபவன்-எழில் மிகு தொழில் வளர்
வலி வரு மதில் வலிவலம் உறை இறையே.

8

இரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்
இரவணம் நினைதர அவன் முடி பொடி செய்து,
இரவணம் அமர் பெயர் அருளினன்-நகநெதி
இரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.

9

தேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்
ஏனம் அது ஆய் நிலம் அகழ் அரி, அடி முடி
தான் அணையா உரு உடையவன்-மிடை கொடி
வான் அணை மதில் வலிவலம் உறை இறையே.

10

இலை மலிதர மிகு துவர் உடையவர்களும்,
நிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது
தொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்-
மலை மலி மதில் வலிவலம் உறை இறையே.

11

மன்னிய வலி வல நகர் உறை இறைவனை,
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை
தன் இயல் கலை வல தமிழ் விரகனது உரை
உன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.