பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமறைக்காடு
வ.எண் பாடல்
1

ஓதம் மால் கடல் பரவி உலகுஎலாம்
மாதரார் வலம்கொள் மறைக்காடரைக்
காதல்செய்து, கருதப்படுமவர்
பாதம் ஏத்த, பறையும், நம் பாவமே.

2

பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கம் தான் உடை மா மறைக்காடரோ!
ஆர்க்கும் காண்பு அரியீர்!-அடியார் தம்மை
நோக்கிக் காண்பது, நும் பணி செய்யிலே.

3

புன்னை ஞாழல் புறணி அருகுஎலாம்,
மன்னினார் வலம் கொள் மறைக்காடரோ!
அன்ன மென் நடையாளை ஓர்பாகமாச்
சின்னவேடம் உகப்பது செல்வமே.

4

அட்டமாமலர் சூடி, அடும்பொடு,
வட்டப்புன்சடை மா மறைக்காடரோ!
நட்டம் ஆடியும், நால்மறை பாடியும்,!
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே.

5

நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும்,
மெய்யினார் வலம்கொள், மறைக்காடரோ!
தையல் பாகம் கொண்டீர்!-கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்பு உடன் வைப்பதே?

6

துஞ்சும் போதும் துயில் இன்றி ஏத்துவார்
வஞ்சு இன்றி(வ்) வலம்கொள் மறைக்காடரோ!
பஞ்சின் மெல் அடிப் பாவை பலி கொணர்ந்து
அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே.

7

திருவினார் செல்வம் மல்கு விழா அணி,
மருவினார் வலம்கொள், மறைக்காடரோ!
உருவினாள் உமைமங்கை ஓர்பாகம் ஆய்,
மருவினாய், கங்கையைச் சென்னி தன்னிலே.

8

சங்கு வந்து அலைக்கும் தடங்கானல்வாய்
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ!
கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே
அங்கையில்(ல்) அனல் ஏந்தல் அழகிதே?

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

குறைக் காட்டான், விட்ட தேர் குத்த மாமலை
இறைக் காட்டீ எடுத்தான், தலை ஈர்-ஐந்தும்
மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்;
இறைக் காட்டாய்,-எம்பிரான்!-உனை ஏத்தவே!

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமறைக்காடு
வ.எண் பாடல்
1

பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

2

ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ!
மூண்ட கார்முகிலின் முறிக்கண்டரோ!
ஆண்டுகொண்ட நீரே அருள் செய்திடும்!
நீண்ட மாக் கதவின் வலி நீக்குமே!

3

அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ!
துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ!
பட்டம் கட்டிய சென்னிப் பரமரோ!
சட்ட இக் கதவம் திறப்பிம்மினே!

4

அரிய நால்மறை ஓதிய நாவரோ!
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ!
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ!
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே!

5

மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ!
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ!
விலை இல் மா மணிவண்ண உருவரோ!-
தொலைவு இலாக் கதவம் துணை நீக்குமே!

6

பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கும் தண்பொழில் சூழ் மறைக்காடரோ!
ஆர்க்கும் காண்பு அரியீர்! அடிகேள்!-உமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே!

7

வெந்தவெண்பொடிப் பூசும் விகிர்தரோ!
அந்தம் இ(ல்)லி, அணி மறைக்காடரோ!
எந்தை!-நீ அடியார் வந்து இறைஞ்சிட
இந்த மாக் கதவம் பிணை நீக்குமே!

8

ஆறு சூடும் அணி மறைக்காடரோ!
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ!
ஏறு அது ஏறிய எம்பெருமான்!-இந்த
மாறு இலாக் கதவம் வலி நீக்குமே!

9

சுண்ணவெண்பொடிப் பூசும் சுவண்டரோ!
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ!
அண்ணல், ஆதி, அணி மறைக்காடரோ!
திண்ணமாக் கதவம் திறப்பிம்மினே!

10

விண் உளார் விரும்பி(ய்) எதிர் கொள்ளவே
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

11

அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்று இலீர்; எம்பெருமானிரே!
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ!
சரக்க இக் கதவம் திறப்பிம்மினே!