பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
எய்து மதிக்கலை சூக்கத்தில் ஏறியே எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் எய்தும் கலை போல ஏறி இறங்கும் ஆந்து உய்யது சூக்கத்து ஊலத்த காயமே.
ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கி உள் ஆகின்ற ஈர் எட்டொடு ஆறு இரண்டு ஈர் ஐந்துள் ஏகின்ற அக்கலை எல்லாம் இடைவழி ஆகின்ற யோகி அறிந்த அறிவே.
ஆறாதது ஆம் கலை ஆதித்தன் சந்திரன் நாறா நலம் கினார் ஞாலம் அங்கு அவர் கொளப் பேறு ஆம் கலை முற்றும் பெருங்கால் ஈர் எட்டு மாறாக் கதிர் கொள்ளும் மற்று அங்கி கூடவே.
பத்தும் இரண்டும் பகலோன் உயர் கலை பத்தினொடு ஆறும் உயர் கலை பால் மதி ஒத்த நல் அங்கி அது எட்டு எட்டு உயர் கலை அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே.
எட்டு எட்ட அனலின் கலை ஆகும் ஈர் ஆறுள் சுட்டப் படும் கதிரோனுக்கும் சூழ் கலை கட்டப் படும் ஈர் எட்டாம் மதிக் கலை ஒட்டப் படா இவை ஒன்றோடு ஒன்றாவே.
எட்டு எட்டும் ஈர் ஆறும் ஈர் எட்டும் தீக் கதிர் சுட்டு இட்ட சோமனில் தோன்றும் கலை எனக் கட்டப் படும் தாரகை கதிர் நாலு உள கட்டி இட்ட தொண்ணூற்றொடு ஆறும் கால் ஆதியே.
எல்லாக் கலையும் இடை பிங்கலை நடுச் சொல்லா நடு நாடி ஊடே தொடர் மூலம் செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால் நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே.
அங்கியில் சின்னக் கதிர் இரண்டு ஆட்டத்துத் தங்கிய தாரகை ஆகும் சசி பானு வங்கிய தாரகை ஆகும் பரை ஒளி தங்கு நவ சக்கரம் ஆகும் தரணிக்கே.
தரணி சலம் கனல் கால் தக்க வானம் அரணிய பானு அரும் திங்கள் அங்கி முரணிய தாரகை முன்னிய ஒன்பான் பிரணவம் ஆகும் பெரு நெறி தானே.
தாரகை மின்னும் சசி தேயும் பக்கத்துத் தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத் தாரகை பூவில் சகலத்தி யோனிகள் தாரகைத் தாரகை தான் ஆம் சொரூபமே.
முன் பதினைந்தின் முளைத்துப் பெருத்திடும் முன் பதினைந்தில் பெருத்துச் சிறுத்திடும் அப் பதினைஞ்சும் அறிவல்லார் கட்குச் செப்ப அரியான் கழல் சேர்தலும் ஆமே.
அங்கி எழுப்பி அரும் கதிர் ஊட்டத்துத் தங்கும் சசியால் தாமம் ஐந்து ஐந்து ஆகிப் பொங்கிய தாரகை ஆம் புலன் போக்கு அறத் திங்கள் கதிர் அங்கி சேர்கின்ற யோகமே.
ஒன்றிய ஈர் எண்கலையும் உடல் உற நின்றது கண்டும் நினைக்கிலர் நீதர்கள் கன்றிய காலன் கருத்து உழி வைத்த பின் சென்று அதில் வீழ்வர் திகைப்பு ஒழியாரே.
அங்கி மதி கூட ஆகும் கதிர் ஒளி அங்கி கதிர் கூட ஆகும் மதி ஒளி அங்கி சசி கதிர் கூட அத்தாரகை தங்கிய அதுவே சகலமும் ஆமே.
ஈர் ஆறு பெண்கலை எண் இரண்டு ஆண் கலை பேராமல் புக்குப் பிடித்துக் கொடு வந்து நேராகத் தோன்றும் நெருப்பு உறவே பெய்யில் ஆராத ஆனந்தம் ஆனந்தம் ஆனதே.
காணும் பரிதியின் காலை இடத்து இட்டு மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீர் ஏல் ஆணி கலங்காது அவ் ஆயிரத்து ஆண்டே.
பாலிக்கும் நெஞ்சம் பறை ஓசை ஒன்பதில் ஆலிக்கும் அங்கே அமரர் பராபரன் மேலைக்கு முன்னே விளக்கு ஒளியாய் நிற்கும் காலைக்குச் சங்கு கதிரவன் தானே.
கதிரவன் சந்திரன் காலம் அளக்கும் பொதிரவன் உள்ளே பொழி மழை நிற்கும் அதிரவன் அண்டப் புறம் சென்று அடர்ப்ப எதிரவன் ஈசன் இடம் அது தானே.
உந்திக் கமலத்து உதித்து எழும் சோதியை அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிகிலர் அந்திக்கும் மந்திரம் ஆரும் அறிந்த பின் தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே.
ஊதியம் ஏதும் அறியார் உரைப்பினும் ஓதியும் ஏதும் அறியாத ஊமர்கள் ஆதியும் அந்தமும் அந்திக்க வல்லீர் ஏல் வேதியன் அங்கே வெளிப்படும் தானே.
பாம்பு மதியைத் தினல் உறும் பாம்பினைத் தீங்கு கதிரையும் சோதித்தனல் உறும் பாம்பு மதியும் பகை தீர்த்து உடன் கொளீஇ நீங்கல் கொடானே நெடும் தகையானே.
அயின்றது வீழ் அளவும் துயில் இன்றிப் பயின்ற சசி வீழ் பொழுதில் துயின்று நயம் தரு பூரணை உள்ள நடத்தி வியம் தரு பூரணை மேவும் சசியே.
சசி உதிக்கும் அளவும் துயில் இன்றிச் சசி உதித்தானேல் தனது ஊண் அருந்திச் சசி சரிக்கின்ற அளவும் துயிலாமல் சசி சரிப்பின் கட்டன் கண் துயில் கொண்டதே.
ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள் நாழிகை ஆக நமனை அளப்பர்கள் ஊழி முதலாய் உயர்வார் உலகினில் தாழ வல்லார் இச் சசி வன்னர் ஆமே.
தண் மதி பானுச் சரி பூமியே சென்று மண் மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு வெண் மதி தோன்றிய நாளில் விளைந்தபின் தண் மதி வீழ் அளவில் கணம் இன்றே.
வளர்கின்ற ஆதித்தன் தன் கலை ஆறும் தளர்கின்ற சந்திரன் தன் கலை ஆறும் மலர்ந்து எழு பன்னிரண்டு அங்குலம் ஓடி அலர்ந்து விழுந்தமை யார் அறிவாரே.
ஆம் உயிர்த் தேய் மதி நாளே எனல் விந்து போம் வழி எங்கணும் போகாது யோகிக்குக் காமுற இன்மையில் கட்டு உண்ணும் மூலத்தில் ஓ மதியத்து உள் விட்டு உரை உணர்வாலே.
வேறு உறச் செம் கதிர் மெய்க்கலை ஆறு ஓடும் சூர் உற நான்கும் தொடர்ந்து உறவே நிற்கும் ஈறிலி நன் கலை ஈர் ஐந் தொடே மதித்து ஆறுள் கலையுள் அகலுவா வாமே.
உணர் விந்து சோணி உறவினன் வீசும் புணர் விந்து வீசும் கதிரில் குறையில் உணர்வும் உடம்பும் உவை ஒக்க நிற்கில் உணர்வும் உடம்பும் ஒரு கால் விடாவே.
விடாத மனம் பவனத் தொடு மேவி நடாவு சிவ சங்கின் நாதம் கொளுவிக் கடா விடா ஐம் புலன் கட்டு உண்ணும் வீடு படாதன இன்பம் பருகார் அமுதமே.
அமுதப் புனல் வரு மாற்றம் கரைமேல் குமிழிக் குள் சுடர் ஐந்தையும் கூட்டிச் சமையத் தண் தோட்டித் தரிக்க வல்லார்க்கு நமன் இல்லை நல் கலை நாள் இல்லை தானே.
உண்ணீர் அமுதம் உறும் ஊறலைத் திறந்து எண்ணீர் இணை அடித் தாமரைக்கே செலத் தெண்ணீர் சமாதி அமர்ந்து தீரா நலம் கண்ணால் தொடே சென்று கால் வழி மாறுமே.
மாறு மதியும் மதித்து இரு மாறு இன்றித் தாறு படாமல் தண்டோடே தலைப் படில் ஊறு படாது உடல் வேண்டும் உபாயமும் பாறு படா இன்பம் பார்மிசைப் பொங்குமே.