பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

பட்டினத்து அடிகள் / கோயில் நான்மணிமாலை
வ.எண் பாடல்
1

பூமேல் அயனறியா மோலிப் புறத்ததே
நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் - பாமேவும்
ஏத்துகந்தான் தில்லை இடத்துகந்தான் அம்பலத்தே
கூத்துகந்தான் கொற்றக் குடை.

2


குடை கொண்டிவ் வையம் எலாங்குளிர்
வித்தெரி பொற்றிகிரிப்
படைகொண் டிகல்தெறும் பார்த்திவர்
ஆவதிற் பைம்பொற்கொன்றைத்

தொடைகொண்ட வார்சடை அம்பலத்

தான்தொண்டர்க் கேவல்செய்து

கடைகொண்ட பிச்சைகொண் டுண்டிங்கு

வாழ்தல் களிப்புடைத்தே.

3

களிவந் தமுதூறிக் கல்மனத்தை எல்லாம்

கசியும் படிசெய்து கண்டறிவார் இல்லா

வெளிவந் தடியேன் மனம்புகுந்த தென்றால்

விரிசடையும் வெண்ணீறும் செவ்வான மென்ன

ஒளிவந்த பொன்னிறமும் தொல்நடமும் காட்டும்

உடையான் உயர்தில்லை அம்பலமொன் றல்லால்

எளிவந் தினிப்பிறர்பாற் சென்றவர்க்குப் பொய்கொண்

டிடைமிடைந்த புன்மொழியால் இச்சையுரை யோமே.

4


உரையின் வரையும், பொருளின் அளவும்
இருவகைப் பட்ட எல்லையும் கடந்து
தம்மை மறந்து, நின்னை நினைப்பவர்
செம்மை மனத்தினும், தில்லைமன் றினும்நடம்

5
ஆடும் அம்பல வாண! நீடு

குன்றக் கோமான் தன்திருப் பாவையை
நீல மேனி மால்திருத் தங்கையைத்
திருமணம் புணர்ந்த ஞான்று, பெரும!நின்
தாதவிழ் கொன்றைத் தாரும், ஏதமில்

10
வீர வெள்விடைக் கொடியும், போரில்

தழங்கும் தமருகப் பறையும், முழங்கொலித்
தெய்வக் கங்கை ஆறும், பொய்தீர்
விரையாக் கலியெனும் ஆணையும் நிரைநிரை
ஆயிரம் வகுத்த மாயிரு மருப்பின்

15
வெண்ணிறச் செங்கண் வேழமும் பண்ணியல்

வைதிகப் புரவியும், வான நாடும்,
மையறு கனக மேருமால் வரையும்,
செய்வயல் தில்லை யாகிய தொல்பெரும் பதியும்நின்
ஒருபதி னாயிரந் திருநெடு நாமமும்

20
உரிமையிற் பாடித் திருமணப் பந்தருள்

அமரர் முன்புகுந்(து) அறுகு சாத்தியநின்
தமர்பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன், நின்னருள்
ஆணை வைப்பிற், காணொணா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும்;

25 கானில்வாய் நுளம்பும் கருடனா தலினே.

5

ஆதரித்த மாலும் அறிந்திலனென்(று) அஃதறிந்தே
காதலித்த நாயேற்குக் காட்டுமே; - போதகத்தோற்
கம்பலத்தான், நீள்நாக கங்கணத்தான், தென்புலியூர்
அம்பலத்தான் செம்பொன் அடி.

6

அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்ட(து)இப்பால்
முடியொன்(று)இவ் வண்டங்கள் எல்லாம் கடந்தது; முற்றும்வெள்ளைப்
பொடியொன்று தோளெட்டுத் திக்கின் புறத்தன; பூங்கரும்பின்
செடியொன்று தில்லைச்சிற் றம்பலத் தான்தன் திருநடமே.

7

நடமாடி எழுலகம் உய்யக் கொண்ட

நாயகரே! நான்மறையோர் தங்களோடும்

திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட

செல்வரே! உமதருமை தேரா விட்டீர்;

இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்

என்போல்வார்க்(கு) உடன்நிற்க இயல்வ தன்று;

தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்

தஞ்சுண்டா யங்கருதி நஞ்சுண்டீரே.

8

நஞ்சமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்
ன்முதல் முருக்க, நெல்முதற் சூழ்ந்த
நீர்ச்சிறு பாம்புதன் வாய்க்கெதிர் வந்த
தேரையை வவ்வி யாங்(கு) யான்முன்
5
கருவிடை வந்த ஒருநாள் தொடங்கி

மறவா மறலி முறைபிறழ் பேழ்வாய்
அயில்தலை அன்ன எயிற்றிடைக் கிடந்(து)ஆங்(கு)
அருள்நனி இன்றி ஒருவயி றோம்பற்குப்
பல்லுயிர் செகுத்து வல்லிதின் அருந்தி

10
அயர்த்தனன் இருந்த போதும், பெயர்த்துநின்று

எண்டோள் வீசிக் கண்டோர் உருகத்
தொல்லெயில் உடுத்த தில்லை மூதூர்
ஆடும் அம்பலக் கூத்தனைப்
பாடுதல், பரவுதல், பணிதலோ இலனே.

9

இலவிதழ்வாய் வீழ்வார்; இகழ்வார்; அவர்தம்
கலவி கடைக்கணித்தும் காணேன்; - இலகுமொளி
ஆடகஞ்சேர் அம்பலத்தே ஆளுடையார் நின்றாடும்
நாடகங்கண் டின்பான நான்.

10


நானே பிறந்த பயன்படைத் தேன்;அயன் நாரணனெம்
கோனே எனத்தில்லை அம்பலத் தேநின்று கூத்துகந்த
தேனே திருவுள்ள மாகியென் தீமையெல் லாமறுத்துத்
தானே புகுந்தடி யேன்மனத் தேவந்து சந்திக்கவே.

11

சந்து புனைய வெதும்பி, மலரணை

தங்க வெருவி, இலங்கு கலையொடு

சங்கு கழல, நிறைந்த அயலவர்

தஞ்சொல் நலிய மெலிந்து, கிளியொடு

பந்து கழல்கள் மறந்து தளிர்புரை

பண்டை நிறமும் இழந்து, நிறையொடு

பண்பு தவிர, அனங்கன் அவனொடு

நண்பு பெருக விளைந்த இனையன;

நந்தி முழவு தழங்க, மலைபெறு

நங்கை மகிழ, அணிந்த அரவுகள்

நஞ்சு பிழிய முரன்று, முயலகன்

நைந்து நரல, அலைந்த பகிரதி

அந்தி மதியொ டணிந்து திலைநகர்

அம்பொன் அணியும் அரங்கின் நடம்நவில்

அங்கண் அரசை அடைந்து தொழுதிவள்

அன்று முதல் எதிர்இன்று வரையுமே.

12

வரையொன்று நிறுவி, அரவொன்று பிணித்து,
கடல்தட ஆகம் மிடலொடும் வாங்கித்
திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்(கு)
அமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்!

5
கடையுகஞ் சென்ற காலத்து, நெடுநிலம்
ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறா அ(து)
‘அஞ்சேல்’ என்று செஞ்சே லாகித்தன்
தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்
பௌவம் ஏழே பட்டது பௌவத்தோ(டு)

10
உலகு குழைத் தொரு நாள் உண்டதும்

உலகம் மூன்றும் அளந்துழி ஆங்கவன்
ஈரடி நிரம்பிற்றும் இலவே; தேரில்
உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே;
இனைய னாகியதனிமுதல் வானவன்

15
கேழல்திருவுரு ஆகி, ஆழத்(து)

அடுக்கிய ஏழும் எடுத்தனன்; எடுத்தெடுத்து
ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்
காண்பதற் கரியநின் கழலும்,வேண்டுபு
நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்

20
அகிலசராசரம் அனைத்தும் உதவிய

பொன்னிறக் கடவுள் அன்னமாகிக்
கண்டி லாதநின் கதிர்நெடு முடியும்
ஈங்கிவை கொண்டு, நீங்காது விரும்பிச்
சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி

25
ஏவருங் காண ஆடுதி; அதுவெனக்(கு)

அதிசயம் விளைக்கும் அன்றே; அதிசயம்
விளையாதும் ஒழிந்த தெந்தை!வளையாது
கல்லினும் வலிஅது நல்லிதிற் செல்லாது
தான்சிறிதாயினும் உள்ளிடை நிரம்ப

30
வான்பொய், அச்சம், மாயா ஆசை

மிடைந்தன கிடப்ப, இடம்பெறல்அருமையில்
ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து
மண்மகன் திகிரியில் எண்மடங்க கழற்ற
ஆடுபுகிடந்த பீடில் நெஞ்சத்து

35
நுழைந்தனைபுகுந்து தழைந்தநின் சடையும்

செய்ய வாயும் மையமர் கண்டமும்,
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்,
எடுத்து பாதமும் தடுத்தசெங் கையும்,
புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க

இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த
மறையவர் தில்லை மன்றுகிழ வோனே!

13

கிழவருமாய், நோய்மூப்புக் கீழ்ப்பட்டுக் காமத்(து)
உழவரும்போய் ஓயுமா கண்டோம்; - மொழிதெரிய
வாயினால் இப்போதே, மன்றில் நடமாடும்
நாயனார் என்றுரைப்போம் நாம்.

14


நாமத்தி னால்என்தன் நாத்திருத் தேன்;நறை மாமலர்சேர்
தாமத்தி னாலுன் சரண்பணி யேன்;சார்வ தென்கொடுநான்?
வாமத்தி லேயொரு மானைத் தரித்தொரு மானைவைத்தாய்,
சேமத்தி னாலுன் திருத்தில்லை சேர்வதோர் செந்நெறியே.

15

நெறிதரு குழலை அறலென்பர்கள்;
நிழலெழு மதியம் நுதலென்பர்கள்
நிலவினும் வெளிது நகையென்பர்கள்
நிறம்வரு கலசம் முலையென்பார்கள்;

அறிகுவ தரிதிவ்விடையென்பர்கள்
அடியிணை கமல மலரென்பர்கள்;
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர்; அமையும்; அவரென்செய?

மறிமழு வுடையகரனென்கிலர்;
மறலியை முனியும் அரனென்கிலர்;
மதிபொதி சடில தரனென்கிலர்;
மலைமகள் மருவு புயனென்கிலர்;

செறிபொழில் நிலவுதிலையென்கிலர்;
திருநடம் நவிலும் இறையென்கிலர்;
சிவகதி அருளும் அரசென்கிலர்;
சிலர்நா குறுவர் அறிவின்றியே.

16

றிவில் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்
இனையன பலசரக் கேற்றி, வினையெனும்
தொல்மீ காமன் உய்ப்ப,அந்நிலைக்

5
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்

புலனெனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந்(து)அலைக்கும்
துயர்த்திரை உவட்டின் பெயர்ப்பிடம்அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல்வீழ்த்து

10
நிறையெனும்கூம்பு முரிந்து, குறையா

உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம்,அலங்கல்
மதியுடன் அணிந்த பொதியவிழ்சடிலத்துப்

15
பையரவணிந்த தெய்வ நாயக!

தொல்லெயில் உடுத்த தில்லை காவல!
வம்பலர் தும்பை அம்பல வாண!நின்
அருளெனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.

17


செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்(கு) என்
தையல் வளைகொடுத்தல் சாலுமே; - ஐயன்தேர்
சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே
தாயே! நமதுகையில் சங்கு.

18


சங்கிடத் தானிடத் தான்தன தாகம் சமைந்தொருத்தி
அங்கிடத் தாள்,தில்லை அம்பலக் கூத்தற்(கு); அவிர்சடைமேல்
கொங்கிடத் தார்மலர்க் கொன்றையென் றாயெங்கை நீயுமொரு
பங்கிடத் தான்வல்லை யேல்;இல்லை யேலுன் பசப்பொழியே.

19

ஒழிந்த தெங்களுற வென்கொ லோ!எரியில்

ஒன்ன லார்கள்புரம்முன்னொர்நாள்

விழுந்தெ ரிந்துதுக ளாக வென்றிசெய்த

வில்லி தில்லைநகர்போலியார்

சுழிந்த உந்தியில் அழுந்தி மேகலை

தொடக்க நின்றவர் நடக்கநொந்(து)

அழிந்த சிந்தையினும் வந்த தாகிலுமொர்

சிந்தை யாயொழிவ தல்லவே.

20

அல்லல் வாழ்க்கை வல்லிதின் செலுத்தற்குக்
கைத்(து)ஏர் உழந்து கார்வரும் என்று
வித்து விதைத்தும், விண்பார்த் திருந்தும்,
கிளையுடன் தவிரப் பொருளுடன்கொண்டு

5 முளைமுதிர் பருவத்துப் பதியென வழங்கியும்,

அருளா வயவர் அம்பிடை நடந்தும்,
இருளுறு பவ்வத்(து) எந்திரங் கடாஅய்த்
துன்றுதிரைப் பரப்பிற் குன்றுபார்த் தியங்கியும்,
ஆற்றல் வேந்தர்க்குச் சோற்றுக்கடன் பூண்டும்,

10
தாள்உழத்தோடியும் வாளுழந் துண்டும்,

அறியா ஒருவனைச் செறிவந்து தெருட்டியும்,
சொற்பல புனைந்தும்,கற்றன கழறியும்
குடும்பப் பாசம் நெடுந்தொடர்ப்பூட்டி
ஐவர் ஐந்திடத் தீர்ப்ப நொய்தில்

15
பிறந்தாங்கிறந்தும், இறந்தாங்கு பிறந்தும்

கணத்திடைத் தோன்றிக் கணத்திடைக் கரக்கும்
கொப்புட் செய்கை ஒப்பில் மின்போல்
உலப்பில் யோனிக் கலக்கத்து மயங்கியும்
நெய்யெரி வளர்த்துப் பெய்முகிற் பெயல்தரும்

20
தெய்வவேதியர் தில்லை மூதூர்

ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
கடவுட் கண்ணுதல் நடம்முயன் றெடுத்த
பாதப் போதும், பாய்புலிப் பட்டும்,
மீதியாத் தசைத்த வெள்ளெயிற் றரவும்,

25
சேயுயர்அகலத்(து) ஆயிரங் குடுமி

மணிகிடந் திமைக்கும் ஒருபே ராரமும்,
அருள்பொதிந் தலர்ந்த திருவாய் மலரும்,
நெற்றியில்திகழ்ந்த ஒற்றை நாட்டமும்
கங்கை வழங்கும்திங்கள் வேணியும்

30
கண்ணிடைப் பொறித்து மனத்திடை அழுத்தி,ஆங்(கு)

உள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன்
நான்முகன் பதத்தின் மேல்நிகழ் பதந்தான்;
உறுதற் கரியதும் உண்டோ!
பெறுதற் கரியதோர் பேறுபெற் றேற்கே.

21


பெற்றோர் பிடிக்கப் பிழைத்துச் செவிலியர்கள்
சுற்றோட ஒடித் தொழாநிற்கும்; - ஒற்றைக்கைம்
மாமறுகச் சீறியசிற் றம்பலத்தான் மான்தேர்போம்
கோமறுகிற் பேதை குழாம்.

22

பேதையெங் கேயினித் தேறியுய் வாள்!பிர மன்தனக்குத்
தாதை,தன் தாதையென் றேத்தும் பிரான்,தண் புலிசைப்பிரான்
கோதையந் தாமத்தண் கொன்றை கொடான்நின்று கொல்லவெண்ணி
ஊதையும், காரும் துளியொடும் கூடி உலாவி யவே.

23

உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவுணாவென

நுகரும் ஒருவர் ஊழியின் இறுதியொருவர் ஆழிய

புலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர்பூசுரர்

புலிசை யலர்செய் போதணிபொழிலின் நிழலின் வாழ்வதோர்

கலவ மயில னார்சுருள் கரிய குழலினார்குயில்

கருது மொழியி னார்கடை நெடியவிழியி னாரிதழ்

இலவின் அழகி யாரிடை கொடியின்வடிவி னார்வடி

வெழுதும் அருமை யாரென திதயமுழுதும் ஆள்வரே.

24

ஆளெனப் புதிதின்வந் தடைந்திலம் அத்தநின்
தாளின் ஏவல் தலையின் இயற்றி
வழிவழி வந்த மரபினம் மொழிவதுன்
ஐந்தெழுத்தவையெம் சிந்தையிற் கிடத்தி

5 நனவே போல நாடொறும் பழகிக்
கனவிலும் நவிற்றும் காதலேம் வினைகெடக்
கேட்பதும் நின்பெருங் கீர்த்தி மீட்பது
நின்னெறி அல்லாப் புன்னெறி படர்ந்த
மதியில் நெஞ்சத்தை வரைந்து நிதியென

10
அருத்திசெய்திடுவ துருத்திர சாதனம்

காலையும் மாலையும் கால்பெயர்த் திடுவதுன்
ஆலயம் வலம்வரு தற்கே சால்பினில்
கைகொடு குயிற்றுவ தைய நின்னது
கோயில் பல்பணி குறித்தே ஒயாது

15
உருகி நின்னினைந் தருவி சோரக்

கண்ணிற் காண்பதெவ் வுலகினும் காண்பனவெல்லாம்
நீயே யாகி நின்றதோர் நிலையே நாயேன்
தலைகொடு சார்வதுன் சரண்வழி அல்லால்
அலைகடல் பிறழினும் அடாதே அதனால்

20
பொய்த்தவவேடர் கைத்தகப் படுத்தற்கு

வஞ்சச் சொல்லின் வார்வலை போக்கிச்
சமயப் படுகுழி சமைத்தாங் கமைவயின்
மானுட மாக்களை வலியப் புகுத்தும்
ஆனா விரதத் தகப்படுத் தாழ்த்தும்

25
வளைவுணர் வெனக்கு வருமோ உளர்தரு

நுரையுந் திரையும் நொப்புறு கொட்பும்
வரையில் சீகர வாரியும் குரைகுடல்
பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி
எண்ணில வாகி இருங்கடல் அடங்கும்

30
தன்மைபோலச் சராசரம் அனைத்தும்

நின்னிடைத் தோன்றி நின்னிடை அடங்கும்நீ
ஒன்றினும் தோன்றாய் ஒன்றினும் அடங்காய்
வானோர்க் கரியாய் மறைகளுக் கெட்டாய்
நான்மறை யாளர் நடுவுபுக் கடங்கிச்

35
செம்பொன் தில்லை மூதூர்
அம்பலத் தாடும் உம்பர்நா யகனே.

25


நாயனைய என்னைப் பொருட்படுத்தி நன்களித்துத்
தாயனைய னாயருளும் தம்பிரான் - தூயவிரை
மென்துழாய் மாலொடயன் தேட வியன்தில்லை
மன்றுளே ஆடும் மணி.

26

மணிவாய் முகிழ்ப்பத் திருமுகம் வேர்ப்பஅம் மன்றுக்கெல்லாம்
அணிவாய் அருள்நடம் ஆடும் பிரானை அடைந்துருகிப்
பணியாய் புலன்வழி போம்நெஞ்ச மேயினிப் பையப்பையைப்
பிணியாய்க் கடைவழி சாதியெல் லோரும் பிணமென்னவே.

27

என்நாம் இனிமட வரலாய் செய்குவ

தினமாய் வண்டுகள் மலர்கிண்டித்

தென்னா எனமுரல் பொழில்சூழ் தில்லையுள்

அரனார் திருமுடி அணிதாமம்

தன்னா லல்லது தீரா தென்னிடர்

தகையா துயிர்கரு முகிலேறி

மின்னா நின்றது துளிவா டையும்வர

வீசா நின்றது பேசாயே.

28


பேசு வாழி பேசு வாழி
ஆசையொடு மயங்கி மாசுறு மனமே
பேசு வாழி பேசு வாழி
கண்டனமறையும் உண்டன மலமாம்

5
பூசின மாசாம் புணர்ந்தன பிரியும்

நிறைந்தன குறையும் உயர்ந்தன பணியும்
பிறந்தன இறக்கும் பெரியன சிறக்கும்
ஒன்றொன் றொருவழி நில்லா வன்றியும்
செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர

10
கல்வியிற்சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர்


கொடையிர் பொலிந்தோர் படையிற் பயின்றோர்
குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர்
எனையர் எங்குலத்தினர் இறந்தோர் அனையவர்
பேரும் நின்றில போலுந் தேரின்

15
நீயுமஃ தறிதி யன்றே மாயப்

பேய்த்தேர் போன்றும் நீப்பரும் உறக்கத்துக்
கனவே போன்றும் நனவுப்பெயர் பெற்ற
மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக்
கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத்

20
தன்மையர்இழிவு சார்ந்தனை நீயும்

நன்மையில் திரிந்த புன்மையை யாதலின்
அழுக்குடைப் புலன்வழி இழுக்கத்தின் ஒழுகி
வளைவாய்த் தூண்டிலின் உள்ளிரை விழுங்கும்
பன்மீன் போலவும்

25
மின்னுபு விளக்கத்து விட்டில் போலவும்

ஆசையாம் பரிசத் தியானை போலவும்
ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும்
வீசிய மணத்தின் வண்டு போலவும்
உறுவ துணராது செறுவழிச் சேர்ந்தனை

30
நுண்ணூல்நூற்றுத் தன்னகப் படுக்கும்

அறிவில்கீடத்து நுந்துழி போல
ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு
இடர்கெழு மனத்தினோ டியற்றுவ தறியாது
குடர்கெழு சிறையறைக்(கு)உறங்குபு கிடத்தி

35
கறவை நினைந்த கன்றென இரங்கி

மறவா மனத்து மாசறும் அடியார்க்(கு)
அருள்சுரந் தளிக்கும் அற்புதக் கூத்தனை
மறையவர் தில்லை மன்று ளாடும்
இறையவன் என்கிலை என்நினைந் தனையே.

29


நினையார் மெலியார் நிறையழியார் வாளாப்
புனைவார்க்குக் கொன்றை பொதுவோ - அனைவீரும்
மெச்சியே காண வியன்தில்லை யானருளென்
பிச்சியே நாளைப் பெறும்.

30

பெறுகின்ற எண்ணிலித்தாயரும் பேறுறும் யானுமென்னை
உறுகின்ற துன்பங்க ளாயிர கோடியும் ஒய்வொடுஞ்சென்(று)
இறுகின்ற நாள்களு மாகிக் கிடந்த இடுக்கணெல்லாம்
அறுகின் றனதில்லை யாளுடை யான்செம்பொன் னம்பலத்தே.

31

அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே

அன்புடையர் என்னுமிதென் ஆனையை யுரித்தே
கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக்

கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே

வம்பலர் நிறைந்துவசை பேசவொருமாடே

வாடையுயீர் ஈரமணி மாமையும் இழந்தென்

கொம்(பு)அல மருந்தகைமை கண்டுதகவின்றிக்

கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளவீரே.

32

அருளு வாழி அருளு வாழி
புரிசடைக் கடவுள் அருளு வாழி
தோன்றுழித் தோன்றி நிலைதவக் கரக்கும்
புற்புதச்செவ்வியின் மக்கள் யாக்கைக்கு

5
நினைப்பினுங் கடிதே இளமை நீக்கம்

அதனினுங் கடிதே மூப்பின் தொடர்ச்சி
அதனினுங் கடிதே கதுமென மரணம்
வாணாள் பருகி உடம்பை வறிதாக்கி
நாணாள் பயின்ற நல்காக் கூற்றம்

10
இனைய தன்மைய திதுவே யிதனை

எனதெனக் கருதி இதற்கென்று தொடங்கிச்
செய்தன சிலவே செய்வன சிலவே
செய்யா நிற்பன சிலவே யவற்றிடை
நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே

15
ஒன்றினும்படாதன சிலவே யென்றிவை

கணத்திடை நினைந்து களிப்பவுங் கலுழ்பவும்
கணக்கில் கோடித் தொகுதி அவைதாம்
ஒன்றொன் றுணர்வுழி வருமோ வனைத்தும்
ஒன்றா உணர்வழி வருமோ என்றொன்று

20
தெளிவுழித்தேறல் செல்லேம் அளிய

மனத்தின் செய்கை மற்றிதுவே நீயே
அரியை சாலவெம் பெரும தெரிவுறில்
உண்டாய்த் தோன்றுவ யாவையும் நீயே
கண்டனை அவைநினைக் காணா அதுதான்

25
நின்வயின்மறைத்தோ யல்லை யுன்னை

மாயாய் மன்னினை நீயே வாழி
மன்னியுஞ் சிறுமையிற் கரந்தோ யல்லை
பெருமையிற் பெரியோய் பெயர்த்தும் நீயே
பெருகியுஞ் சேணிடை நின்றோ யல்லை

30
தேர்வோர்க்குத்தம்மினும் அணியை நீயே

நண்ணியும் நீயொன்றின் மறைந்தோ யல்லை
இடையிட்டு நின்னை மறைப்பது மில்லை
மறைப்பினும் அதுவும்
நீயே யாகி நின்றதோர் நிலையே,அஃதான்று

35
நினைப்பருங்காட்சி நின்னிலை யிதுவே

நினைப்புறுங் காட்சி எம்நிலை யதுவே
இனிநனி இரப்பதொன் றுடையன் மனமருண்டு
புன்மையின் திளைத்துப் புலன்வழி நடப்பினும்
நின்வயின் நினைந்தே னாகுதல் நின்வயின்

40
நினைக்குமாநினைக்கப் பெறுதல் அனைத்தொன்றும்

நீயே அருளல் வேண்டும் வேய்முதிர்
கயிலை புல்லென எறிவிசும்பு வறிதாக
இம்ப ருய்ய அம்பலம் பொலியத்
திருவளர் தில்லை மூதூர்

45
அருநடங் குயிற்றும் ஆதிவா னவனே.

33


வானோர் பணிய மணியா சனத்திருக்கும்
ஆனாத செல்வத் தரசன்றே - மாநாகம்
பந்திப்பார் நின்றாடும் பைம்பொன்னின் அம்பலத்தே
வந்திப்பார் வேண்டாத வாழ்வு

34

வாழ்வாக வும்தங்கள் வைப்பாக வும்மறை யோர்வணங்க
ஆள்வாய் திருத்தில்லை அம்பலத் தாயுன்னை அன்றியொன்றைத்

தாழ்வார் அறியார் சடிலநஞ் சுண்டிலை யாகிலன்றே
மாள்வார் சிலரையன் றோதெய்வ மாக வணங்குதே.

35

வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல்

மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ

டுணங்கியிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கே

ஊதையெரி தூவியுல வப்பெறும் ஆடநடமாடும்அடுத்தே

பிணங்கியர வோடுசடை ஆடநட மாடும்

பித்தரென வும்மிதயம் இத்தனையும் ஒரீர்

அணங்குவெறி யாடுமறி யாடுமது வீரும்

மையலையும் அல்லலையும் அல்ல தறியீரே.

36

ஈரவே ரித்தார் வழங்கு சடிலத்துக்
குதிகொள் கங்கை மதியின்மீ தசைய
வண்டியங்கு வரைப்பின் எண்தோள் செல்வ
ஒருபால் தோடும் ஒருபால் குழையும்

5
இருபாற் பட்ட மேனி எந்தை

ஒல்லொலிப் பழனத் தில்லை மூதூர்
ஆடகப் பொதுவில் நாடகம் நவிற்றும்
இமையா நாட்டத் தொருபெருங் கடவுள்
வானவர் வணங்கும் தாதை யானே

10
மதுமழை பொழியும் புதுமந் தாரத்துத்

தேனியங் கொருசிறைக் கானகத் தியற்றிய
தெய்வ மண்டபத்(து) ஐவகை அமளிச்
சிங்கஞ் சுமப்ப ஏறி மங்கையர்
இமையா நாட்டத் தமையா நோக்கம்

15
தம்மார்பு பருகச் செம்மாந் திருக்கும்

ஆனாச் செல்வத்து வானோர் இன்பம்
அதுவே எய்தினும் எய்துக கதுமெனத்
தெறுசொ லாளர் உறுசினந் திருகி
எற்றியும் ஈர்த்தும் குற்றம் கொளீஇ

20
ஈர்ந்தும் போழ்ந்தும் எற்றுபு குடைந்தும்

வார்ந்துங் குறைத்தும் மதநாய்க் கீந்தும்
செக்குரல் பெய்தும் தீநீர் வாக்கியும்
புழுக்குடை அழுவத் தழுக்கியல் சேற்றுப்
பன்னெடுங் காலம் அழுத்தி இன்னா

25
வரையில் தண்டத்து மாறாக் கடுந்துயர்

நிரயஞ் சேரினுஞ் சேர்க உரையிடை
ஏனோர் என்னை ஆனாது விரும்பி
நல்லன் எனினும் என்க அவரே
அல்லன் எனினும் என்க நில்லாத்

30
திருவொடு திளைத்துப் பெருவளஞ் சிதையாது

இன்பத் தழுந்தினும் அழுந்துக அல்லாத்
துன்பந் துதையினும் துதைக முன்பின்
இளைமையொடு பழகிக் கழிமூப்புக் குறுகாது
என்றும் இருக்கினும் இருக்கவன்றி

35
இன்றே இறக்கினும் இறக்க வொன்றினும்

வேண்டலும் இலனே வெறுத்தலும் இலனே
ஆண்டகைக் குரிசில்நின் அடியரொடு குழுமித்
தெய்வக் கூத்தும்நின் செய்ய பாதமும்
அடையவும் அணுகவும் பெற்ற

40
கிடையாச் செல்வங் கிடைத்த லானே.

37

ஆனேறே போந்தால் அழிவுண்டே அன்புடைய
நானேதான் வாழ்ந்திடினும் நன்றன்றே - வானோங்கு
வாமாண் பொழிற்றில்லை மன்றைப் பொலிவித்த
கோமானை இத்தெருவே கொண்டு.

38

கொண்டல்வண் ணத்தவன் நான்முகன்

இந்திரன் கோமகுடத்

தண்டர்மிண் டித்தொழும் அம்பலக்

கூத்தனுக் கன்புசெய்யா

மிண்டர்மிண் டித்திரி வாரெனக்

கென்னிணி நானவன்றன்

தொண்டர்தொண் டர்க்குத் தொழும்பாய்த்

திரியத் தொடங்கினனே.

39

தொடர நரைத்தங்க முன்புள வாயின
தொழில்கள் மறுத்தொன்று மொன்றி யிடாதொரு
சுளிவு தலைக்கொண்டு புன்புலை வாரிகள்
துளையொழு கக்கண்டு சிந்தனை ஒய்வொடு

நடைகெட முற்கொண்ட பெண்டிர் பொறாதொரு
நடலை நமக்கென்று வந்தன பேசிட
நலியிரு மற்கஞ்சி உண்டி வேறாவிழு
நரக உடற்கன்பு கொண்டலை வேனினி

மிடலொடி யப்பண் டிலங்கையர் கோனாரு
விரலின் அமுக்குண்டு பண்பல பாடிய
விரகு செவிக்கொண்டு முன்புள தாகிய
வெகுளி தவிர்த்தன்று பொன்றி யிடாவகை

திடமருள் வைக்குஞ் செழுஞ்சுடர் ஊறிய
தெளியமு தத்தின் கொழுஞ்சுவை நீடிய
திலைநக ரிற்செம்பொன் அம்பல மேவிய
சிவனை நினைக்குந் தவஞ்சது ராவதே.

40

சதுர்முகன் தந்தைக்குக் கதிர்விடு கடவுள்
ஆழி கொடுத்த பேரருள் போற்றி
முயற்சியொடு பணிந்த இயக்கர்கோ னுக்கு
மாநிதி இரண்டும் ஆனாப் பெருவளத்

5
தளகை ஒன்றும் தளர்வின்றி நிறுவிய

செல்வங் கொடுத்த செல்வம் போற்றி
தாள்நிழல் அடைந்த மாணிக் காக
நாண்முறை பிறழாது கோண்முறை வலித்துட்
பதைத்துவருங் கூற்றைப் படிமிசைத் தெறிக்க

10
உதைத்துயிர் அளித்த உதவி போற்றி

குலைகுலை குலைந்த நிலையாத் தேவர்
படுபேர் அவலம் இடையின்று விலக்கிக்
கடல்விடம் அருந்தன கருணை போற்றி
தவிராச் சீற்றத் தவுணர் மூவெயில்

15
ஒல்லனல் கொளுவி ஒருநொடிப் பொடிபட

வில்லொன்று வளைத்த வீரம் போற்றி
பூமென் கரும்பொடு பொடிபட நிலத்துக்
காமனைப் பார்த்த கண்ணுதல் போற்றி
தெய்வ யாளி கைமுயன்று கிழித்தெனக்

20
கரியொன் றுரித்த பெருவிறல் போற்றி

பண்டு பெரும்போர்ப் பார்த்தனுக் காகக்
கொண்டு நடந்த கோலம் போற்றி
விரற்பதம் ஒன்றில் வெள்ளிமலை எடுத்த
அரக்கனை நெரித்த ஆண்மை போற்றி

25
விலங்கல் விண்டு விழுந்தென முன்னாள்

சலந்தரற் றடிந்த தண்டம் போற்றி
தாதையை எறிந்த வேதியச் சிறுவற்குப்
பரிகலங் கொடுத்த திருவுளம் போற்றி
நின்முதல் வழிபடத் தன்மகன் தடிந்த

30
தொண்டர் மனையில் உண்டல் போற்றி

வெண்ணெய் உண்ண எண்ணுபு வந்து
நந்தா விளக்கை நுந்துபு பெயர்த்த
தாவுபல் எலிக்கு மூவுல காள
நொய்தினில் அளித்த கைவளம் போற்றி

35
பொங்குளை அழல்வாய்ப் புகைவிழி ஒருதனிச்

சிங்கங் கொன்ற சேவகம் போற்றி
வரிமிடற் றெறுழ்வலி மணியுகு பகுவாய்
உரகம் பூண்ட ஒப்பனை போற்றி
கங்கையுங் கடுங்கையுங் கலந்துழி ஒருபால்

40
திங்கள் சூடிய செஞ்சடை போற்றி

கடவுளர் இருவர் அடியும் முடியும்
காண்டல் வேண்டக் கனற்பிழம் பாகி
நீண்டு நின்ற நீளம் போற்றி
ஆலம் பில்குநின் சூலம் போற்றி

45
கூறுதற் கரியநின் ஏறு போற்றி

ஏகல் வெற்பன் மகிழும் மகட்கிடப்
பாகங் கொடுத்த பண்பு போற்றி
தில்லை மாநகர் போற்றி தில்லையுட்
செம்பொன் அம்பலம் போற்றி அம்பலத்

50
தாடும் நாடகம் போற்றி என்றாங்

கென்றும் போற்றினும் என்தனக் கிறைவ
ஆற்றல் இல்லை ஆயினும்
போற்றி போற்றிநின் பொலம்பூ அடிக்கே.