நெறிதரு குழலை அறலென்பர்கள்;
நிழலெழு மதியம் நுதலென்பர்கள்
நிலவினும் வெளிது நகையென்பர்கள்
நிறம்வரு கலசம் முலையென்பார்கள்;
அறிகுவ தரிதிவ்விடையென்பர்கள்
அடியிணை கமல மலரென்பர்கள்;
அவயவம் இனைய மடமங்கையர்
அழகியர்; அமையும்; அவரென்செய?
மறிமழு வுடையகரனென்கிலர்;
மறலியை முனியும் அரனென்கிலர்;
மதிபொதி சடில தரனென்கிலர்;
மலைமகள் மருவு புயனென்கிலர்;
செறிபொழில் நிலவுதிலையென்கிலர்;
திருநடம் நவிலும் இறையென்கிலர்;
சிவகதி அருளும் அரசென்கிலர்;
சிலர்நா குறுவர் அறிவின்றியே.