வரையொன்று நிறுவி, அரவொன்று பிணித்து,
கடல்தட ஆகம் மிடலொடும் வாங்கித்
திண்டோள் ஆண்ட தண்டா அமரர்க்(கு)
அமிர்துணா அளித்த முதுபெருங் கடவுள்!
5
கடையுகஞ் சென்ற காலத்து, நெடுநிலம்
ஆழிப் பரப்பில் ஆழ்வது பொறா அ(து)
‘அஞ்சேல்’ என்று செஞ்சே லாகித்தன்
தெய்வ உதரத்துச் சிறுசெலுப் புரையில்
பௌவம் ஏழே பட்டது பௌவத்தோ(டு)
10
உலகு குழைத் தொரு நாள் உண்டதும்
உலகம் மூன்றும் அளந்துழி ஆங்கவன்
ஈரடி நிரம்பிற்றும் இலவே; தேரில்
உரைப்போர்க் கல்ல தவன்குறை வின்றே;
இனைய னாகியதனிமுதல் வானவன்
15
கேழல்திருவுரு ஆகி, ஆழத்(து)
அடுக்கிய ஏழும் எடுத்தனன்; எடுத்தெடுத்து
ஊழி ஊழி கீழுறக் கிளைத்தும்
காண்பதற் கரியநின் கழலும்,வேண்டுபு
நிகில லோகமும் நெடுமறைத் தொகுதியும்
20
அகிலசராசரம் அனைத்தும் உதவிய
பொன்னிறக் கடவுள் அன்னமாகிக்
கண்டி லாதநின் கதிர்நெடு முடியும்
ஈங்கிவை கொண்டு, நீங்காது விரும்பிச்
சிறிய பொதுவின் மறுவின்றி விளங்கி
25
ஏவருங் காண ஆடுதி; அதுவெனக்(கு)
அதிசயம் விளைக்கும் அன்றே; அதிசயம்
விளையாதும் ஒழிந்த தெந்தை!வளையாது
கல்லினும் வலிஅது நல்லிதிற் செல்லாது
தான்சிறிதாயினும் உள்ளிடை நிரம்ப
30
வான்பொய், அச்சம், மாயா ஆசை
மிடைந்தன கிடப்ப, இடம்பெறல்அருமையில்
ஐவர் கள்வர் வல்லிதிற் புகுந்து
மண்மகன் திகிரியில் எண்மடங்க கழற்ற
ஆடுபுகிடந்த பீடில் நெஞ்சத்து
35
நுழைந்தனைபுகுந்து தழைந்தநின் சடையும்
செய்ய வாயும் மையமர் கண்டமும்,
நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும்,
எடுத்து பாதமும் தடுத்தசெங் கையும்,
புள்ளி ஆடையும் ஒள்ளிதின் விளங்க
இரண்டொடும் அறிவினில் ஆர்த்து வைத்த
மறையவர் தில்லை மன்றுகிழ வோனே!