பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பூ ஏறு கோனும், புரந்தரனும், பொற்பு அமைந்த நா ஏறு செல்வியும், நாரணனும், நான்மறையும், மா ஏறு சோதியும், வானவரும், தாம் அறியாச் சே ஏறு சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
நான் ஆர்? என் உள்ளம் ஆர்? ஞானங்கள் ஆர்? என்னை யார் அறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்? மதி மயங்கி ஊன் ஆர் உடை தலையில் உண் பலி தேர் அம்பலவன் தேன் ஆர் கமலமே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
தினைத்தனை உள்ளது ஓர் பூவினில் தேன் உண்ணாதே, நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும், அனைத்து எலும்பு உள் நெக, ஆனந்தத் தேன் சொரியும் குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின், என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி, வண்ணப் பணித்து, என்னை வா என்ற வான் கருணைச் சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
அத் தேவர் தேவர்; அவர் தேவர்; என்று, இங்ஙன், பொய்த் தேவு பேசி, புலம்புகின்ற பூதலத்தே, பத்து ஏதும் இல்லாது, என் பற்று அற, நான் பற்றிநின்ற மெய்த் தேவர் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
வைத்த நிதி, பெண்டிர், மக்கள், குலம், கல்வி, என்னும் பித்த உலகில், பிறப்போடு இறப்பு, என்னும் சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
சட்டோ நினைக்க, மனத்து அமுது ஆம் சங்கரனை, கெட்டேன், மறப்பேனோ? கேடுபடாத் திருவடியை ஒட்டாத பாவித் தொழும்பரை நாம் உரு அறியோம்; சிட்டாய சிட்டற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
ஒன்று ஆய், முளைத்து, எழுந்து, எத்தனையோ கவடு விட்டு, நன்று ஆக வைத்து, என்னை நாய் சிவிகை ஏற்றுவித்த என் தாதை; தாதைக்கும், எம் அனைக்கும், தம் பெருமான்! குன்றாத செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
கரணங்கள் எல்லாம் கடந்துநின்ற கறை மிடற்றன் சரணங்களே சென்று சார்தலுமே, தான் எனக்கு மரணம், பிறப்பு, என்று, இவை இரண்டின் மயக்கு அறுத்த கருணைக் கடலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
நோய் உற்று, மூத்து, நான் நுந்து கன்றாய் இங்கு இருந்து, நாய் உற்ற செல்வம் நயந்து அறியாவண்ணம் எல்லாம், தாய் உற்று வந்து, என்னை ஆண்டுகொண்ட தன் கருணைத் தேய் உற்ற செல்வற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
வல் நெஞ்சக் கள்வன், மன வலியன், என்னாதே, கல் நெஞ்சு உருக்கி, கருணையினால் ஆண்டுகொண்ட, அன்னம் திளைக்கும் அணி தில்லை அம்பலவன் பொன் அம் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
நாயேனைத் தன் அடிகள் பாடுவித்த நாயகனை, பேயேனது உள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை, சீ ஏதும் இல்லாது என் செய் பணிகள் கொண்டருளும் தாய் ஆன ஈசற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
நான் தனக்கு அன்பு இன்மை, நானும், தானும், அறிவோம்; தான் என்னை ஆட்கொண்டது எல்லாரும் தாம் அறிவார்; ஆன கருணையும் அங்கு உற்றே தான்; அவனே கோன் என்னைக் கூட குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!
கரு ஆய், உலகினுக்கு அப்புறம் ஆய், இப் புறத்தே மரு ஆர் மலர்க் குழல் மாதினொடும் வந்தருளி, அரு ஆய், மறை பயில் அந்தணன் ஆய், ஆண்டுகொண்ட திரு ஆன தேவற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
நானும், என் சிந்தையும், நாயகனுக்கு எவ் இடத்தோம் தானும், தன் தையலும், தாழ் சடையோன் ஆண்டிலனேல்? வானும், திசைகளும், மா கடலும், ஆய பிரான் தேன் உந்து சேவடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
உள்ளப்படாத திருஉருவை உள்ளுதலும், கள்ளப்படாத களிவந்த வான் கருணை வெள்ளப் பிரான், எம்பிரான், என்னை வேறே ஆட் கொள் அப் பிரானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
பொய் ஆய செல்வத்தே புக்கு, அழுந்தி, நாள்தோறும் மெய்யாக் கருதிக் கிடந்தேனை, ஆட்கொண்ட ஐயா! என் ஆர் உயிரே! அம்பலவா! என்று, அவன் தன் செய் ஆர் மலர் அடிக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
தோலும், துகிலும்; குழையும், சுருள் தோடும்; பால் வெள்ளை நீறும், பசும் சாந்தும்; பைங் கிளியும், சூலமும்; தொக்க வளையும்; உடைத் தொன்மைக் கோலமே நோக்கி குளிர்ந்து ஊதாய்; கோத்தும்பீ!
கள்வன், கடியன், கலதி, இவன் என்னாதே, வள்ளல், வரவர வந்து ஒழிந்தான் என் மனத்தே; உள்ளத்து உறு துயர், ஒன்று ஒழியாவண்ணம், எல்லாம் தெள்ளும் கழலுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!
பூ மேல் அயனோடு மாலும் புகல் அரிது என்று ஏமாறி நிற்க, அடியேன் இறுமாக்க, நாய் மேல் தவிசு இட்டு, நன்றாப் பொருட்படுத்த தீ மேனியானுக்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!