பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் /. தோத்திரம்
வ.எண் பாடல்
1

மாயனை நாடி மன நெடும் தேர் ஏறிப்
போயின நாடு அறியாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்து எங்கள் செல்வனைக்
காயமின் நாட்டிடைக் கண்டு கொண்டேனே.

2

மன்னும் மலைபோல் மத வாரணத்தின் மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆர் எனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றே பாடு அறிவீரே.

3

முத்தினின் முத்தை முகிழ் இள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனை
அத்தனைக் காணாது அரற்று கின்றேன் ஏனையோர்
பித்தன் இவன் என்று பேசு கின்றாரே.

4

புகுந்து நின்றான் எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்து நின்றான் எங்கள் போதறி வாளன்
புகுந்து நின்றான் அடியார் தங்கள் நெஞ்சம்
புகுந்து நின்றானையே போற்று கின்றேனே

5

பூதக் கண்ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக் கண்ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக் கண்ணாடி நினைவார் மனத்து உளன்
கீதக் கண்ணாடியில் கேட்டு நின்றேனே.

6

நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத்து உள்ளே இசைவீர்கள்
ஓமம் ஓர் ஆயிரம் ஓத வல்லார் அவர்
காமம் ஓர் ஆயிரம் கண்டு ஒழிந்தாரே.

7

நானாவிதம் செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடு சென்று அப்புறம்
வானோர் உலகம் வழிப் பட மீண்டபின்
தேன் ஆர உண்டு தெவிட்டலும் ஆமே.

8

வந்து நின்றான் அடியார் கட்கு அரும் பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனி ஒன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே.

9

மண்ணில் கலங்கிய நீர் போல் மனிதர்கள்
எண்ணில் கலங்கி இறைவன் இவன் என்னார்
உண்ணில் குளத்தின் முகந்து ஒருபால் வைத்துத்
தெண்ணில் படுத்த சிவன் அவன் ஆமே.

10

மெய்த் தவத்தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத் தலம் சேர்தரு நெல்லிக் கனி ஒக்கும்
சுத்தனைத் தூய் நெறியாய் நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே.

11

அமைந்து ஒழிந்தேன் அளவு இல் புகழ் ஞானம்
சமைந்து ஒழிந்தேன் தடு மாற்றம் ஒன்று இல்லை
புகைந்து எழும் பூதலம் புண்ணியன் நண்ணி
வகைந்து கொடுக்கின்ற வள்ளலும் ஆமே.

12

வள்ளல் தலைவனை வான நல் நாடனை
வெள்ளப் புனல் சடை வேத முதல்வனைக்
கள்ளப் பெருமக்கள் காண்பர் கொலோ என்று
உள்ளத்தின் உள்ளே ஒளித்து இருந்து ஆளுமே.

13

ஆளும் மலர்ப் பதம் தந்த கடவுளை
நாளும் வழிபட்டு நன்மையுள் நின்றவர்
கோளும் வினையும் அறுக்கும் குரிசிலின்
வாளும் மனத் தொடும் வைத்து ஒழிந்தேனே.

14

விரும்பில் அவன் அடி வீர சுவர்க்கம்
பொருந்தில் அவன் அடி புண்ணிய லோகம்
திருந்தில் அவன் அடி தீர்த்தமும் ஆகும்
வருந்தி அவன் அடி வாழ்த்த வல்லார்க்கே.

15

வானகம் ஊடு அறுத்தான் இவ் உலகினில்
தானகம் இல்லாத் தனி ஆகும் போதகன்
கானக வாழைக் கனி நுகர்ந்து உள் உறும்
பானகச் சோதியைப் பற்றி நின்றேனே.

16

விதி அது மேலை அமரர் உறையும்
பதி அது பாய் புனல் கங்கையும் உண்டு
துதி அது தொல்வினைப் பற்று அறுவிக்கும்
பதி அது அவ்விட்ட அந்தமும் ஆமே.

17

மேல் அது வானவர் கீழ் அது மாதவர்
தான் இடர் மானுடர் கீழ் அது மாதனம்
கான் அது கூவிள மாலை கமழ் சடை
ஆனது செய்யும் எம் ஆர் உயிர் தானே

18

சூழும் கருங் கடல் நஞ்சு உண்ட கண்டனை
ஏழும் இரண்டிலும் ஈசன் பிறப்பு இலி
யாழும் சுனையும் அடவியும் அங்கு உளன்
வாழும் எழுத்து ஐந்து மன்னனும் ஆமே.

19

உலகம் அது ஒத்து மண் ஒத்து உயர் காற்றை
அலர் கதிர் அங்கி ஒத்து ஆதிப் பிரானும்
நிலவிய மா முகில் நீர் ஒத்து மீண்டச்
செலவு ஒத்து அமர் திகைத் தேவர் பிரானே

20

பரிசு அறிந்து அங்கு உளன் அங்கி அருக்கன்
பரிசு அறிந்து அங்கு உளன் மாருதத்து ஈசன்
பரிசு அறிந்து அங்கு உளன் மாமதி ஞானப்
பரிசு அறிந்து தன்னிலம் பாரிக்கும் ஆறே.

21

அந்தம் கடந்தும் அது அதுவாய் நிற்கும்
பந்த உலகினில் கீழோர் பெரும் பொருள்
தந்த உலகு எங்கும் தானே பராபரன்
வந்து படைக்கின்ற மாண்பு அது ஆமே.

22

முத்தண்ட வீரண்டமே முடி ஆயினும்
அத்தன் உருவம் உலகு ஏழ் எனப்படும்
அத்தனின் பாதாளம் அளவு உள்ள சேவடி
மத்தர் அதனை மகிழ்ந்து உணராரே.

23

ஆதிப் பிரான் நம் பிரான் அவ் அகல் இடச்
சோதிப் பிரான் சுடர் மூன்று ஒளியாய் நிற்கும்
ஆதிப் பிரான் அண்டத்து அப்புறம் கீழ் அவன்
ஆதிப் பிரான் நடு ஆகி நின்றானே.

24

அண்டம் கடந்து உயர்ந்து ஓங்கும் பெருமையன்
பிண்டம் கடந்த பிறவிச் சிறுமையன்
தொண்டர் நடந்த கனை கழல் காண் தொறும்
தொண்டர்கள் தூய் நெறி தூங்கி நின்றானே.

25

உலவு செய் நோக்கம் பெரும் கடல் சூழ
நில முழுது எல்லா நிறைந்தனன் ஈசன்
பல முழுது எல்லாம் படைத்தனன் முன்னே
புலம் உழு பொன் நிறம் ஆகி நின்றானே.

26

பரா பரன் ஆகிப் பல் ஊழிகள் தோறும்
பரா பரன் ஆய் இவ் அகல் இடம் தாங்கித்
தரா பரன் ஆய் நின்ற தன்மை உணரார்
நிரா பரன் ஆகி நிறைந்து நின்றானே.

27

போற்றும் பெரும் தெய்வம் தானே பிறர் இல்லை
ஊற்றமும் ஓசையும் ஓசை ஒடுக்கமும்
வேற்று உடல் தான் என்றது பெரும் தெய்வம் ஆம்
காற்றது ஈசன் கலந்து நின்றானே.

28

திகை அனைத்தும் சிவனே அவன் ஆகின்
மிகை அனைத்தும் சொல்ல வேண்டா மனிதரே
புகை அனைத்தும் புறம் அங்கியில் கூடு
முகைஅனைத்தும் எங்கள் ஆதிப் பிரானே.

29

கலை ஒரு மூன்றும் கடந்து அப்பால் நின்ற
தலைவனை நாடுமின் தத்துவ நாதன்
விலை இல்லை விண்ணவ ரோடும் உரைப்பன்
நரை இல்லை உள்ளுறும் உள்ளவன் தானே.

30

படிகால் பிரமன் செய் பாசம் அறுத்து
நெடியான் குறுமை செய் நேசம் அறுத்துச்
செடியார் தவத்தினில் செய் தொழில் நீக்கி
அடியேனை உய்ய வைத்து அன்பு கொண்டானே.

31

ஈசன் என்று எட்டுத் திசையும் இயங்கின
ஓசையினின்று எழு சத்தம் உலப்பு இலி
தேசம் ஒன்று ஆங்கே செழும் கண்டம் ஒன்பதும்
வாச மலர் போல் மருவி நின்றானே.

32

இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம் இறை
கல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய் மணி
சொல் அரும் சோதி தொடர்ந்து நின்றானே.

33

உள்ளத்து ஒடுங்கும் புறத்து உளும் நான் எனும்
கள்ளத் தலைவன் கமழ் சடை நந்தியும்
வள்ளல் பெருமை வழக்கம் செய்வார்கள் தம்
அள்ளல் கடலை அறுத்து நின்றானே.

34

மாறு எதிர் வானவர் தானவர் நாள் தொறும்
கூறுதல் செய்து குரை கழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறத்துளும்
வேறு செய்து ஆங்கே விளக்கு ஒளி ஆமே.

35

விண்ணிலும் வந்த வெளி இலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலன் அல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயன் அல்லன் பான்மையன்
எண் இல் ஆனந்தமும் எங்கள் பிரானே.

36

உத்தமன் எங்கும் உகக்கும் பெரும் கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்து அறியாரே.

37

நிறம் பல எவ் வண்ணம் அவ் வண்ணம் ஈசன்
அறம் பல எவ் வண்ணம் அவ் வண்ணம் இன்பம்
மறம் பல எவ் வண்ணம் அவ் வண்ணம் பாவம்
புறம் பல காணினும் போற்ற கிலாரே.

38

இங்கு நின்றான் அங்கு நின்றனன் எங்கு உளன்
பொங்கி நின்றான் புவனா பதி புண்ணியன்
கங்குல் நின்றான் கதிர் மா மதி ஞாயிறு
எங்கும் நின்றான் மழை போல் இறை தானே.

39

உணர்வு அது வாயுமே உத்தமம் ஆயும்
உணர்வு அது நுண் அறிவு எம் பெருமானைப்
புணர்வு அது வாயும் புல்லியது ஆயும்
உணர் உடல் அண்டமும் ஆகி நின்றானே.

40

தன் வலியால் உலகு ஏழும் தரித்தவன்
தன் வலியாலே அணுவினும் தான் ஒய்யன்
தன் வலியான் மலை எட்டினும் தான் சாரான்
தன் வலியாலே தடம் கடல் ஆமே.

41

ஏனோர் பெருமையன் ஆகிலும் எம் இறை
ஊனே சிறுமையுள் உள் கலந்து அங்கு உளன்
வானோர் அறியும் அளவு அல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

42

பிண்டால் அம் வித்தில் எழுந்த பெருமுளைக்கு
உண்டால் அம் காயத்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்வு இலா மூடர்கள்
பிண்டத்து உட்பட்டுப் பிணங்கு கின்றார்களே.