பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மூன்றாம் தந்திரம் / கால சக்கரம்
வ.எண் பாடல்
1

மதி வட்டம் ஆக வரை ஐந்து நாடி
இது விட்டு இங்கு ஈராறு அமர்ந்த அதனால்
பதி வட்டத்துள் நின்று பாலிக்குமாறு
மது விட்டுப் போம் ஆறு மாயல் உற்றேனே.

2

உற்ற அறிவு ஐந்தும் உணர்ந்த அறிவு ஆறும் ஏழும்
கற்ற அறிவு எட்டும் கலந்த அறிவு ஒன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்றது அறியாது அழிகின்ற வாறே.

3

அழிகின்ற ஆண்டு அவை ஐ ஐஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்று என்பது ஆகும்
கழிகின்ற கால் அறுபத்திரண்டு என்ப
எழுகின்ற ஈர் ஐம்பத்து எண் அற்று இருந்ததே.

4

திருந்து தினம் அத் தினத்தினொடு நின்று
இருந்து அறி நாள் ஒன்று இரண்டு எட்டு மூன்று
பொருந்திய நாளொடு புக்கு அறிந்து ஓங்கி
வருந்துதல் இன்றி மனை புகல் ஆமே.

5

மனை புகு வீரும் மகத்து இடை நாடி
என இருபத்து அஞ்சும் ஈர் ஆறு அதனால்
தனை அறிந்து ஏறட்டுத்தற் குறி ஆறு
வினை அறி ஆறு விளங்கிய நாலே.

6

நாலும் கடந்தது நால்வரும் நால் ஐந்து
பாலம் கடந்தது பத்துப் பதினைந்து
கோலம் கடந்த குணத்து ஆண்டு மூ இரண்டு
ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே.

7

ஆறும் இருபதுக்கு ஐ அஞ்சு மூன்றுக்கும்
தேறும் இரண்டும் இருபத்தொடு ஆறு இவை
கூறு மதி ஒன்றினுக்கு இருபத்து ஏழு
வேறு பதி அம் கண் நாள் விதித்தானே.

8

விதித்த இருபத்து எட்டொடு மூன்று அறையாகத்
தொகுத்து அறி முப்பத்து மூன்று தொகுமின்
பகுத்து அறி பத்து எட்டும் பாராதி கணால்
உதித்து அறி மூன்று இரண்டு ஒன்றின் முறையே.

9

முறை முறை ஆய்ந்து முயன்றிலர் ஆகில்
இறை இறை யார்க்கும் இருக்க அரிது
மறை அது காரணம் மற்று ஒன்றும் இல்லை
பறை அறையாது பணிந்து முடியே.

10

முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டு
கடிந்தனன் மூளக் கதுவ வல்லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே.

11

நண்ணு சிறு விரல் நாண் ஆக மூன்றுக்கும்
பின்னிய மார்பு இடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியின் மூன்றுக்கும் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியம் தானே.

12

ஓவியம் ஆன உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயன் அறிவார் இல்லை
தீவினையாம் உடன் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே.

13

தண்டுடன் ஓடித் தலைப் பெய்த யோகிக்கு
மண்டலம் மூன்றும் மகிழ்ந்து உடல் ஒத்திடும்
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்கு கின்றாரே.

14

பிணங்கி அழிந்திடும் பேர் அது கேள் நீ
அணங்கு உடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்கு உடனே வந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக்கு ஆகச் சுழல்கின்ற வாறே.

15

சுழல் கின்ற ஆறின் துணை மலர் காணான்
தழல் இடைப் புக்கிடும் தன் உள் இலாமல்
கழல் கண்டு போம் வழி காண வல்லார்க்குக்
குழல் வழி நின்றிடும் கூத்தனும் ஆமே.

16

கூத்தன் குறியில் குணம் பல கண்டவர்
சாத்திரம் தன்னைத் தலைப் பெய்து நிற்பர்கள்
பார்த்துஇருந்து உள்ளே அனு போகம் நோக்கிடில்
ஆத்தனும் ஆகி அலர்ந்து இரும் ஒன்றே.

17

ஒன்றில் வளர்ச்சி உலப்பு இலி கேள் இனி
நன்று என்று மூன்றுக்கு நாள் அது சென்றிடும்
சென்றிடும் முப்பதும் சேர இருந்திடில்
குன்று இடைப் பொன் திகழ் கூத்தனும் ஆமே.

18

கூத்தவன் ஒன்றிடும் கூர்மை அறிந்து அங்கே
ஏத்துவர் பத்தினில் எண்திசை தோன்றிடப்
பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடில்
சாத்திடு நூறு தலைப் பெய்யலாமே.

19

சாத்திடும் நூறு தலைப் பெய்து நின்றவர்
காத்து உடல் ஆயிரம் கட்டு உறக் காண்பர்கள்
சேர்த்து உடல் ஆயிரம் சேர இருந்தவர்
மூத்து உடன் கோடி உகம் அது ஆமே.

20

உகம் கோடி கண்டும் ஒசிவற நின்று
அகம் கோடி கண்டு உள் அலறக் காண்பர்கள்
சிவம் கோடி விட்டுச் செறிய இருந்து அங்கு
உகம் கோடி கண்டு அங்கு உயர் உறுவாரே.

21

உயர் உறுவார் உலகத்தொடும் கூடிப்
பயன் உறுவார் பலர் தாம் அறியாமல்
செயல் உறுவார் சிலர் சிந்தை இலாமல்
கயல் உறு கண்ணியைக் காண கிலாரே.

22

காண இலாதார் கழிந்து ஓடிப் போவர்கள்
காண இலாதார் நயம் பேசி விடுவார்கள்
காண இலாதார் கழிந்த பொருள் எலாம்
காண இலாமல் கழிகின்ற வாறே.

23

கழிகின்ற அப்பொருள் காண இலாதார்
கழிகின்ற அப் பொருள் காணலும் ஆகும்
கழிகின்ற உள்ளே கருத்து உற நோக்கில்
கழியாத அப்பொருள் காணலும் ஆமே.

24

கண்ணன் பிறப்பு இலி காண் நந்தியாய் உள்ளே
எண்ணும் திசையுடன் ஏகாந்தன் ஆயிடும்
திண் என்று இருக்கும் சிவகதியாய் நிற்கும்
நண்ணும் பதம் இது நாட வல்லார் கட்கே.

25

நாட வல்லார்க்கு நமன் இல்லை கேடு இல்லை
நாட வல்லார்கள் நரபதியாய் நிற்பர்
தேட வல்லார்கள் தெரிந்த பொருள் இது
கூட வல்லார் கட்குக் கூறலும் ஆமே.

26

கூறும் பொருளில் தகார உகாரங்கள்
தேறும் பொருள் இது சிந்தை உள் நின்றிடக்
கூறும் மகாரம் குழல் வழி ஓடிட
ஆறும் அமர்ந்திடும் அண்ணலும் ஆமே.

27

அண்ணல் இருப்பிடம் ஆரும் அறிகிலர்
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வார் களுக்கு
கண்ணல் அழிவு இன்றி உள்ளே அமர்ந்திடும்
அண்ணலைக் காணில் அவன் இவன் ஆகுமே.

28

அவன் இவன் ஆகும் பரிசு அறிவார் இல்லை
அவன் இவன் ஆகும் பரிசு அது கேள் நீ
அவன் இவன் ஓசை ஒளியின் உள் ஒன்றிடும்
அவன் இவன் வட்டம் அது ஆகி நின்றானே.

29

வட்டங்கள் ஏழும் மலர்ந்திடும் உம் உளே
சிட்டன் இருப்பிடம் சேர அறிகிலீர்
ஒட்டி இருந்து உள் உபாயம் உணர்ந்திடக்
கட்டி இருப்பிடம் காணலும் ஆகுமே.

30

காணலும் ஆகும் பிரமன் அரி என்று
காணலும் ஆகும் கறைக் கண்டன் ஈசனைக்
காணலும் ஆகும் சதா சிவ சத்தியும்
காணலும் ஆகும் கலந்து உடன் வைத்ததே.