பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராத் திருவடியை, உரு நாம் அறிய, ஓர் அந்தணன் ஆய், ஆண்டுகொண்டான்; ஒரு நாமம், ஓர் உருவம், ஒன்றும் இல்லாற்கு, ஆயிரம் திருநாமம் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!
திரு ஆர் பெருந்துறை மேய பிரான் என் பிறவிக் கரு வேர் அறுத்தபின், யாவரையும் கண்டது இல்லை; அரு ஆய், உருவமும் ஆய பிரான், அவன் மருவும் திருவாரூர் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!
அரிக்கும், பிரமற்கும், அல்லாத தேவர்கட்கும், தெரிக்கும் படித்து அன்றி நின்ற சிவம், வந்து, நம்மை உருக்கும், பணி கொள்ளும், என்பது கேட்டு, உலகம் எல்லாம் சிரிக்கும் திறம் பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
அவம் ஆய தேவர் அவ கதியில் அழுந்தாமே பவ மாயம் காத்து, என்னை ஆண்டுகொண்ட பரஞ்சோதி நவம் ஆய செம் சுடர் நல்குதலும், நாம் ஒழிந்து, சிவம் ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
அருமந்த தேவர், அயன், திருமாற்கு, அரிய சிவம் உருவந்து, பூதலத்தோர் உகப்பு எய்த, கொண்டருளி, கரு வெந்து வீழக் கடைக்கணித்து, என் உளம் புகுந்த திரு வந்தவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
அரை ஆடு நாகம் அசைத்த பிரான், அவனியின்மேல், வரை ஆடு மங்கை தன் பங்கொடும், வந்து, ஆண்ட திறம் உரை ஆட, உள் ஒளி ஆட, ஒள் மா மலர்க் கண்களில் நீர் திரை ஆடுமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
ஆ! ஆ! அரி, அயன், இந்திரன், வானோர்க்கு, அரிய சிவன், வா, வா என்று, என்னையும் பூதலத்தே வலிந்து ஆண்டுகொண்டான்; பூ ஆர் அடிச் சுவடு என் தலைமேல் பொறித்தலுமே, தே ஆனவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
கறங்கு ஓலை போல்வதுஓர் காயப் பிறப்போடுஇறப்பு என்னும், அறம், பாவம், என்று இரண்டு அச்சம் தவிர்த்து, என்னை ஆண்டுகொண்டான்; மறந்தேயும் தன் கழல் நான் மறவாவண்ணம் நல்கிய, அத் திறம் பாடல் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!
கல் நார் உரித்து என்ன, என்னையும் தன் கருணையினால் பொன் ஆர் கழல் பணித்து, ஆண்ட பிரான் புகழ் பாடி, மின் நேர் நுடங்கு இடை, செம் துவர் வாய், வெள் நகையீர்! தென்னா, தென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ!
கனவேயும் தேவர்கள் காண்பு அரிய கனை கழலோன் புன வேய் அன வளைத் தோளியொடும் புகுந்தருளி, நனவே எனைப் பிடித்து, ஆட்கொண்டவா நயந்து, நெஞ்சம், சின வேல் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ!
கயல் மாண்ட கண்ணி தன் பங்கன் எனைக் கலந்து ஆண்டலுமே, அயல் மாண்டு, அருவினைச் சுற்றமும் மாண்டு, அவனியின்மேல் மயல் மாண்டு, மற்று உள்ள வாசகம் மாண்டு, என்னுடைய செயல் மாண்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
முத்திக்கு உழன்று முனிவர் குழாம் நனி வாட, அத்திக்கு அருளி, அடியேனை ஆண்டுகொண்டு, பத்திக் கடலுள் பதித்த பரஞ்சோதி, தித்திக்குமா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
பார் பாடும், பாதாளர் பாடும், விண்ணோர் தம் பாடும், ஆர் பாடும், சாரா வகை அருளி, ஆண்டுகொண்ட நேர் பாடல் பாடி, நினைப்பு அரிய தனிப் பெரியோன் சீர் பாடல் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!
மாலே, பிரமனே, மற்று ஒழிந்த தேவர்களே, நூலே, நுழைவுஅரியான் நுண்ணியன் ஆய், வந்து, அடியேன் பாலே புகுந்து, பரிந்து உருக்கும் பாவகத்தால், சேல் ஏர் கண் நீர் மல்க தெள்ளேணம் கொட்டாமோ!
உருகிப் பெருகி, உளம் குளிர முகந்துகொண்டு, பருகற்கு இனிய பரம் கருணைத் தடம் கடலை மருவி, திகழ் தென்னன் வார் கழலே நினைந்து, அடியோம் திருவைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!
புத்தன், புரந்தர ஆதியர், அயன், மால், போற்றி செயும் பித்தன்; பெருந்துறை மேய பிரான்; பிறப்பு அறுத்த அத்தன்; அணி தில்லை அம்பலவன்; அருள் கழல்கள் சித்தம் புகுந்தவா தெள்ளேணம் கொட்டாமோ!
உவலைச் சமயங்கள், ஒவ்வாத சாத்திரம், ஆம் சவலைக் கடல் உளனாய்க் கிடந்து, தடுமாறும் கவலைக் கெடுத்து, கழல் இணைகள் தந்தருளும் செயலைப் பரவி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!
வான் கெட்டு, மாருதம் மாய்ந்து, அழல், நீர், மண், கெடினும், தான் கெட்டல் இன்றி, சலிப்பு அறியாத் தன்மையனுக்கு, ஊன் கெட்டு, உயிர் கெட்டு, உணர்வு கெட்டு, என் உள்ளமும் போய், நான் கெட்டவா பாடி தெள்ளேணம் கொட்டாமோ!
விண்ணோர் முழு முதல்; பாதாளத்தார் வித்து; மண்ணோர் மருந்து; அயன், மால், உடைய வைப்பு; அடியோம் கண் ஆர, வந்துநின்றான்; கருணைக் கழல் பாடி, தென்னா, தென்னா என்று தெள்ளேணம் கொட்டாமோ!
குலம் பாடி, கொக்கு இறகும் பாடி, கோல் வளையாள் நலம் பாடி, நஞ்சு உண்டவா பாடி, நாள்தோறும் அலம்பு ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பு ஆடல் பாடி, நாம் தெள்ளேணம் கொட்டாமோ!