பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும்; பாய் இருங் கங்கையாளைப் படர்சடை வைப்பர் போலும்; காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன்- ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே.
மடந்தை பாகத்தர் போலும்; மான்மறிக் கையர் போலும்; குடந்தையில் குழகர் போலும்; கொல் புலித் தோலர் போலும்; கடைந்த நஞ்சு உண்பர் போலும்; காலனைக் காய்வர் போலும்; அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.
உற்ற நோய் தீர்ப்பர் போலும்; உறு துணை ஆவர் போலும்; செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழச் செறுவர் போலும்; கற்றவர் பரவி ஏத்தக் கலந்து உலந்து அலந்து பாடும் அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.
மழு அமர் கையர் போலும்; மாது அவள் பாகர் போலும்; எழு நுனை வேலர் போலும்; என்பு கொண்டு அணிவர் போலும்; தொழுது எழுந்து ஆடிப் பாடித் தோத்திரம்பலவும் சொல்லி அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே.
பொடி அணி மெய்யர் போலும்; பொங்கு வெண் நூலர் போலும்; கடியது ஓர் விடையர் போலும்; காமனைக் காய்வர் போலும்; வெடி படுதலையர் போலும்; வேட்கையால் பரவும் தொண்டர் அடிமையை அளப்பர்போலும் ஆவடுதுறையனாரே.
வக்கரன் உயிரை வவ்வக் கண் மலர் கொண்டு போற்றச் சக்கரம் கொடுப்பர் போலும்; தானவர் தலைவர் போலும்; துக்க மா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்; அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.
விடை தரு கொடியர் போலும்; வெண் புரி நூலர் போலும்; படை தரு மழுவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்; உடை தரு கீளர் போலும்; உலகமும் ஆவர் போலும் அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.
முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த; நந்தி, மாகாளர் என்பார், நடு உடையார்கள் நிற்ப; சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும் அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே.
பான் அமர் ஏனம் ஆகிப் பார் இடந்திட்ட மாலும், தேன் அமர்ந்து ஏறும் அல்லித் திசைமுகம் உடைய கோவும், தீனரைத் தியக்கு அறுத்த திரு உரு உடையர் போலும்; ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே.
பார்த்தனுக்கு அருள்வர் போலும்; படர் சடை முடியர் போலும்; ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும்; கூத்தராய்ப் பாடி, ஆடி, கொடு வலி அரக்கன் தன்னை ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே.
மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்; நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே! துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று(வ்) “அஞ்சல்!” என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே!
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும் ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள் உற ஐவர் நின்றார் தான் உகந்தே உகந்த தகவு இலாத் தொண்டனேன், நான்; ஆன் உகந்து ஏறுவானே! ஆவடுதுறை உளானே!
கட்டமே வினைகள் ஆன காத்து, இவை நோக்கி, ஆள் ஆய் ஒட்டவே ஒட்டி, நாளும் உன்னை உள் வைக்க மாட்டேன்- பட்ட வான் தலை கை ஏந்திப் பலி திரிந்து ஊர்கள் தோறும் அட்டமா உருவினானே! ஆவடுதுறை உளானே!
“பெருமை நன்று உடையது இல்லை” என்று நான் பேச மாட்டேன்; ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன்; கருமை இட்டு ஆய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன், நான்; அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!
துட்டனாய் வினை அது என்னும் சுழித்தலை அகப்பட்டேனைக் கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்துக் கொள்வாய் மட்டு அவிழ் கோதை தன்னை மகிழ்ந்து ஒரு பாகம் வைத்து(வ்) அட்டமா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே!
கார் அழல் கண்டம் மேயாய்; கடி மதில் புரங்கள் மூன்றும் ஓர் அழல் அம்பினாலே உகைத்துத் தீ எரிய மூட்டி நீர் அழல் சடை உளானே! நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே!
செறிவு இலேன்; சிந்தையுள்ளே சிவன் அடி தெரிய மாட்டேன்; குறி இலேன்; குணம் ஒன்று இல்லேன்; கூறுமா கூற மாட்டேன்; நெறி படு மதி ஒன்று இல்லேன்; நினையுமா நினைய மாட்டேன்; அறிவு இலேன்; அயர்த்துப் போனேன்-ஆவடுதுறை உளானே!
கோலம் மா மங்கை தன்னைக் கொண்டு ஒரு கோலம் ஆய சீலமே அறிய மாட்டேன்; செய்வினை மூடி நின்று ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!
நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட, கடியது ஓர் உருவம் ஆகி, கனல்-எரி ஆகி, நின்ற வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகாா அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே.
மலைக்கு நேர் ஆய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்சத் தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து, அவற்கு அருள்கள் செய்து(வ்) அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே.