பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

எட்டாம் தந்திரம் / அவத்தை பேதம் கேவல சகல சுத்தம்
வ.எண் பாடல்
1

தன்னை அறி சுத்தன் தற்கே ஏவலன் தானும்
பின்னம் உற நின்ற பேத சகலனும்
மன்னிய சத்து அசத்து சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிற்கு அளவு ஆகவே.

2

தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப் பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.

3

பாசம் அது ஆகும் பழமலம் பற்று அற
நேசம் அதாய் நின்ற ஆறாது நீங்கிடக்
காசம் இலாத குணம் கேவல சுத்தம்
ஆசு அற நிற்றல் அது சுத்த சைவமே.

4

ஆம் உயிர் கேவலம் மா மாயை இன் நடந்து
ஆம் உயிர் மாயை எறிப்ப அறிவு உற்றுக்
காமியம் மாயேயமும் கலவா நிற்பத்
தாம் உறு பாசம் சகல அத்தம் ஆமே.

5

சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர்
நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள்
நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே.

6

தாவிய மாயையில் தங்கும் பிரளய
மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்று எட்டு உருத்திரர் ஆமே.

7

ஆகின்ற கேவலத்து ஆணவத் தானவர்
ஆகின்ற இத் தேசர் ஆம் அனந்த ஆதியர்
ஆகின்ற எண்மர் எழு கோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே.

8

ஆம் அவரில் சிவனார் அருள் பெற்று உளோர்
போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு
ஓம் மயம் ஆகி ஒடுங்கனலின் மலம்
தோம் அறு சுத்தா அவத்தைத் தொழிலே.

9

ஓரினும் மூவகை நால் வகையும் உள
தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை
சாரியல் ஆயவை தாமே தணப் பவை
வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே

10

பொய் ஆன போதாந்தம் ஆறு ஆறும் விட்டு அகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தான் ஆகி
மெய் ஆம் சரா சரம் ஆய் வெளி தன் உள்புக்கு
எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே.

11

அனாதி பசு வியாத்தி ஆகும் இவனை
அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்ச கலத்து இட்டு
அனாதி பிறப்பு அறச் சுத்தத்து உளாகுமே.

12

அந்தரம் சுத்தா வத்தை கேவலத்து ஆறு
தந்தோர் தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத்து
இன் பால் துரியத்து இடையே அறிவுறத்
தன் பால் தனை அறி தத்துவம் தானே.

13

ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்ய அவ் வித்தை முதல் மூன்றும் தொல் சத்தி
ஐய சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.

14

ஐ ஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும்
மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில்
கை கண்ட சத்தி சிவ பாகத்தே காண
எய்யும் படி அடங்கும் நால் ஏழ் எய்தியே.

15

ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயைப் பிரளயாகலர் ஆகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர் முப் பாசமும் புக்கோரே.

16

ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்
பேணிய மாயை பிரளயா கலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணும் சகலர்க்குக் காட்டு மலங்களே.

17

கேவலம் தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர்
கேவலம் தன்னில் கிளர் விந்து சத்தியால்
ஆவயில் கேவலத்து அச் சகலத்தையும்
மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே.

18

மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து
மாயையும் தோன்றா வகை நிற்க ஆணவ
மாய சகலத்துக் காமிய மாமாயை
ஏய மன் நூற்று எட்டு உருத்திரர் என்பவே.

19

மும் மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம் மெய்ச் சகலத்தர் தேவர் சுரர் நரர்
மெய்ம்மை இல் வேதா விரிமிகு கீடாந்தத்து
அம் முறை யோனி புக்கார்க்கும் சகலரே.

20

சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும் மலச்
சத்து அசத்தோடு அத்தனித் தனி பாசமும்
மத்த இருள் சிவன் ஆன கதிராலே
தொத்து அற விட்டிடச் சுத்தர் ஆவார்களே.

21

தற்கே வலம் முத்தி தானே தனிமை ஆம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவது ஆம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற் சுத்தம் ஆமே.

22

அறிவு இன்றி முத்தன் அரா காதி சேரான்
குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி
செறியும் செயல் இலான் இனம் கற்றவல்லோன்
கிறியன் மல வியாபிக்கே வலம் தானே.

23

விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனுச் சத்தி
விந்துவின் மெய்ஞ் ஞானம் மேவும் பிரளயர்
வந்த சகல சுத்த ஆன்மாக்கள் வையத்தே.

24

கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில்
கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே
ஒவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர் கட்கே.

25

கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்
கேவலத்தில் சகலங்கள் வயின் தவம்
கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு
ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே.

26

சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்தின் சுத்தமே தற் பரா வத்தை
சகலத்தில் இம் மூன்று தன்மையும் ஆமே.

27

சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல்
சுத்தத்தில்கேவலம் தொல் உப சாந்தம் ஆம்
சுத்த சகலம் துரிய விலாசம் ஆம்
சுத்தத்தில் இம் மூன்றும் சொல்லலும் ஆமே.

28

சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடும்
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிரா தீதம் தனில் சுக ஆனந்தமே
ஆக்கு மறை ஆதி ஐம் மல பாசமே.

29

சாக்கிரா தீதத்தில் தான் அறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
ஆக்கு பரோ பாதியா உப சாந்தத்தை
நோக்கு மலம் குண நோக்குதல் ஆகுமே.

30

பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தான் உணும்
அத்தன் அருள் என்று அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே.

31

எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன் அருளே விளையாட்டோடு
எய்திடு உயிர் சுத்தத்து இடு நெறி என்னவே
எய்தும் உயிர் இறை பால் அறிவாமே.

32

ஐம் மலத்தாரும் மதித்த சகலத்தர்
ஐம் மலத்தாரும் அருவினைப் பாசத்தார்
ஐம் மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர்
ஐம் மலத்தார் அரனார்க்கு அறிவோரே.

33

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதில் உண்ணும் ஆசையும்
உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து
அரிய கனா, தூலாம் அந் நனவு ஆமே.

34

ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும்
பூணும் துரியம் சுழுத்தி பொய்க் காமியம்
பேணும் கனவும் மா மாயை திரோதாயி
காணும் நனவில் மலக் கலப்பு ஆகுமே.

35

அரன் முதல் ஆக அறிவோன் அதீ தத்தன்
அரன் முதல் ஆம் மாயை தங்கிச் சுழுனை
கருமம் உணர்ந்து மா மாயைக் கைக் கொண்டோர்
அருளும் அறைவர் சகலத்து உற்றாரே.

36

உரு உற்றுப் போகமே போக்கி அந்துற்று
மரு உற்றுப் பூதம் அனாதியான் மன்னி
வரும் அச் செயல் பற்றிச் சத்து ஆதி வைகிக்
கரு உற்றிடும் சீவன் காணும் சகலத்தே.

37

இருவினை ஒத்திட இன் அருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதன மன்னிக்
குருவினைக் கொண்டு அருள் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.

38

ஆறு ஆறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு
ஈறு ஆம் அதீதத் துரியத்து இவன் எய்தப்
பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து
நீறு ஆர் பரம் சிவ மாதேயம் ஆகுமே.

39

தன்னை அறியாது உடலை முன் தான் என்றான்
தன்னை முன் கண்டான் துரியம் தனைக் கண்டான்
உன்னும் துரிய மும் ஈசனோடு ஒன்று ஆக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே.

40

சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய அந்த வயிந் தவம் ஆனந்த
நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம்
வாக்கும் மனமும் மருவல் செய்யாவே.

41

அப்பும் அனலும் அகலத்துளே வரும்
அப்பும் அனலும் அகலத்துளே வாரா
அப்பும் அனலும் அகலத்து உளே ஏது எனில்
அப்பும் அனலும் கலந்தது அவ்வாறே.

42

அறு நான்கு அசுத்தம் அதி சுத்தா சுத்தம்
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம்
பெறு மாறு இவை மூன்றும் கண்டத்தால் பேதித்து
உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே.

43

மாயை கைத் தாய் ஆக மா மாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர்க்கேவல சகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே.