பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நான்காம் தந்திரம் / வயிரவி மந்திரம்
வ.எண் பாடல்
1

பன்னிரண்டு ஆம் கலை ஆதி வயிரவி
தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்
பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்
சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே.

2

அந்தம் பதினாலும் அதுவே வயிரவி
முந்து நடுவும் முடிவும் முதலாகச்
சிந்தைக் கமலத்து எழுகின்ற மாசத்தி
அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே.

3

ஆகின்ற மூவரும் அங்கே அடங்குவர்
போகின்ற பூதம் பொருந்து புராதரர்
சார்கின்ற சார்வுழிச் சாரார் சதிர்பெறப்
போகும் திரிபுரை புண்ணியத் தோரே.

4

புண்ணிய நந்தி புனிதன் திரு ஆகும்
எண்ணிய நாட்கள் இருபத்து ஏழ் சூழ்மதி
பண்ணிய வன்னி பகலோன் மதி ஈறு
திண்ணிய சிந்தை தன் தென்னனும் ஆமே.

5

தென்னன் திரு நந்தி சேவகன் தன்னொடும்
பொன் அம் கிரியில் பூதலம் போற்றிடும்
பன்னும் பரிபிடி அந்தம் பகவனோடு
உன்னும் திரிபுரை ஓதி நின்றானுக்கே.

6

ஓதிய நந்தி உணரும் திரு அருள்
நீதியில் வேத நெறிவந்து உரை செய்யும்
போதம் இருபத்து எழுநாள் புணர்மதி
சோதி வயிரவி சூலம் வந்து ஆளுமே.

7

சூலம் கபாலம் கை ஏந்திய சூலிக்கு
நாலு அம் கரம் உள நாக பாச அங்குச
மால் அங்கு அயன் அறியாத வடிவுக்கு
மேல் அங்கம் ஆய் நின்ற மெல் இயலாளே.

8

மெல் இயல் வஞ்சி விடமி கலை ஞானி
சொல்லிய கிஞ்சுக நிறம் மன்னு சேய் இழை
கல் இயல் ஒப்பது காணும் திரு மேனி
பல் இயல் ஆடையும் பல் மணிதானே.

9

பல் மணி சந்திர கோடி திரு முடி
சொல்மணி குண்டலக் காதி உழைக் கண்ணி
நல் மணி சூரிய சோம நயனத்தாள்
பொன் மணி வன்னியும் பூரிக்கின்றாளே.

10

பூரித்த பூஇதழ் எட்டினுக்கு உள்ளே ஓர்
ஆரியத் தாள் உண்டு அங்கு எண்மர் கன்னியர்
பாரித்த பெண்கள் அறுபத்து நால்வரும்
சாரித்துச் சத்தியைத் தாங்கள் கண்டாரே.

11

கண்ட சிலம்பு வளை சங்கு சக்கரம்
எண் திசை யோகி இறைவி பராசத்தி
அண்ட மொடு எண் திசை தாங்கும் அருள்செல்வி
புண்டரிகத்தின் உள் பூசனையாளே.

12

பூசனை கந்தம் புனைமலர் மா கோடி
யோசனை பஞ்சத்து ஒலி வந்து உரைசெய்யும்
வாசம் இலாத மணி மந்திர யோகம்
தேசம் திகழும் திரிபுரை காணே.

13

காணும் பல பல தெய்வங்கள் வெவ் வேறு
பூணும் பல பல பொன் போலத் தோற்றிடும்
பேணும் சிவனும் பிரமனும் மாயனும்
காணும் தலைவி நல் காரணி காணே.

14

காரணி மந்திரம் ஓதும் கமலத்துப்
பூரண கும்ப விரேசம் பொருந்திய
நாரணி நந்தி நடு அங்கு உரை செய்த
ஆரண வேதநூல் அந்தமும் ஆமே.

15

அந்த நடு விரல் ஆதி சிறுவிரல்
வந்த வழி முறை மாறி உரை செய்யும்
செம் தமிழ் ஆதி தெளிந்து வழிபடு
நந்தி இதனை நவம் உரைத்தானே.

16

உரைத்த நவ சத்தி ஒன்று முடிய
நிரைத்த விராசி நெடு முறை எண்ணிப்
பிரைச் சதம் எட்டு முன் பேசிய நந்தி
நிரைத்து நியதி நியமம் செய்தானே.

17

தாமக் குழலி தயைக் கண்ணி உள் நின்ற
ஏமத்து இருள் அற வீசும் இளங்கொடி
ஓமப் பெருஞ்சுடர் உள் எழு நுண்புகை
மேவித்து அமுதொடு மீண்டது காணே.

18

காணும் இருதய மந்திரமும் கண்டு
பேணு நமஎன்று பேசும் தலை மேலே
வேணு நடுவு மிக நின்ற ஆகுதி
பூணு நடு என்ற அந்தம் சிகையே.

19

சிகை நின்ற அந்தக் கவசம் கொண்டு ஆதி
பகை நின்ற அங்கத்தைப் பார் என்று மாறித்
தொகை நின்ற நேத்திர முத்திரை சூலம்
வகை நின்ற யோனி வருத்தலும் ஆமே.

20

வருத்தம் இரண்டும் சிறு விரல் மாறிப்
பொருத்தி அணிவிரல் சுட்டிப் பிடித்து
நெரித்து ஒன்ற வைத்து நெடிது நடுவே
பெருந்த விரல் இரண்டு உள் புக்குப் பேசே.

21

பேசிய மந்திரம் இகாரம் பிரித்து உரை
கூசம் இலாத சகாரத்தை முன் கொண்டு
வாசிப் பிராணன் உபதேச மாகைக்குக்
கூசிய விந்து உடன் கொண்டு கூவே.

22

கூவிய சீவன் பிராணன் முதல் ஆகப்
பாவிய ச உடன் பண்ணும் அகாரத்தை
மேவிய மாயை விரி சங்கு முத்திரை
தேவி நடுவுள் நிகழ்ந்து நின்றாளே.

23

நின்ற வயிரவி நீலி நிசா சரி
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய உள்ளத்துச்
சென்று அருள் நாயகி தேவர் பிரானுக்கே
நன்று அருள் ஞாலத்து நாடிடும் சாற்றியே.

24

சாற்றிய வேதம் சராசரம் ஐம் பூதம்
நால் திசை முக் கண்ணி நடும் இருள் வெளி
தோற்றும் உயிர்ப் பன்மை சோதி பராபரை
ஆற்றலொடு ஆய் நிற்கும் ஆதி முதல்வியே.

25

ஆதி வயிரவி கன்னித் துறை மன்னி
ஓதி உணரில் உடல் உயிர் ஈசன் ஆம்
பேதை உலகில் பிறவிகள் நாசம் ஆம்
ஓத உலவாத கோலம் ஒன்று ஆகுமே.

26

கோலக் குழலி குலாய புருவத்தள்
நீலக் குவளை மலர் அன்ன கண்ணினாள்
ஆலிக்கும் இன் அமுது ஆனந்த சுந்தரி
மேலைச் சிவத்தை வெளிப் படுத்தாளே.

27

வெளிப்படு வித்து விளை அறிவித்துத்
தெளிப் படுவித்து என் சிந்தையின் உள்ளே
களிப்படு வித்துக் கதிர்ப்படு சோதி
ஒளிப் படுவித்து என்னை உய்யக் கொண்டாளே.

28

கொண்டனள் கோலம் கோடி அநேகங்கள்
கண்டனள் எண் எண் கலையின் கண் மாலைகள்
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையும்
தண்டலை மேல் நின்ற தையல் நல்லாளே.

29

தையல் நல்லாளைத் தவத்தின் தலைவியை
மையலை நோக்கும் மனோன்மணி மங்கையைப்
பைய நின்று ஏத்திப் பணிமின் பணிந்த பின்
வெய்ய பவம் இனி மேவ கிலாவே.

30

வேய் அன தோளி விரை உறு மெல் மலர்
ஏய குழலி இளம் பிறை ஏந்திழை
தூய சடை முடிச் சூலினி சுந்தரி
ஏய் எனது உள்ளத்து இனிது இருந்தாளே.

31

இனியது என் மூலை இருக்கும் குமரி
தனி ஒரு நாயகி தானே தலைவி
தனிப் படுவித்தனள் சார்வு படுத்து
நனிப் படுவித்து உள்ளம் நாடி நின்றாளே.

32

நாடிகள் மூன்று நடு எழு ஞாளத்துக்
கூடி இருந்த குமரி குலக் கன்னி
பாடகச் சீறடிப் பைம் பொன் சிலம்பு ஒலி
ஊடகம் மேவி உறங்கு கின்றாளே.

33

உறங்கும் அளவின் மனோன்மணி வந்து
கறங்கு வளைக்கைக் கழுத்து ஆரப் புல்லிப்
பிறங்கு ஒளித் தம்பலம் வாயில் உமிழந்திட்டு
‘உறங்கல் ஐயா’ என்று உபாயம் செய்தாளே.

34

உபாயம் அளிக்கும் ஒருத்தி என் உள்ளத்து
அபாயம் அறக்கெடுத்து அன்பு விளைத்து
சுவாவை விளக்கும் சுழி அகத்து உள்ளே
அவாவை அடக்கி வைத்து அஞ்சல் என்றாளே.

35

அம் சொல் மொழியாள் அரும்தவப் பெண்பிள்ளை
செம் சொல் மடமொழி சீர் உடைச் சேயிழை
தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு
இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே.

36

ஆர் உயிராயும் அரும் தவப் பெண் பிள்ளை
கார் இயல் கோதையள் காரணி நாரணி
ஊரும் உயிரும் உலகும் ஒடுக்கிடும்
கோரி என் உள்ளம் குலாவி நின்றாளே.

37

குலாவிய கோலக் குமரி என் உள்ளம்
நிலாவி இருந்து நெடுநாள் அணைந்தும்
உலாவி இருந்து உணர்ந்து உச்சியின் உள்ளே
கலாவி இருந்த கலைத் தலையாளே.

38

கலைத்தலை நெற்றி ஓர் கண் உடைக் கண்ணுள்
முலைத் தலை மங்கை முயங்கி இருக்கும்
சிலைத் தலை ஆய தெரிவினை நோக்கி
அலைத்த பூங் கொம்பினள் அங்கு இருந்தாளே.

39

இருந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவிப்
பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித்
திருந்திய தாணுவில் சேர்த்து உடன் ஒன்றி
அரும் தவம் எய்தினள் ஆதியின் ஆளே.

40

ஆதி அனாதி அகாரணி காரணி
சோதிய சோதி சுகபர சுந்தரி
மாது சமாதி மனோன் மணி மங்கலி
ஓதி என் உள்ளத்து உடன் இயைந்தாளே.

41

இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி
நயந்தனள் அங்கே நம சிவ என்னும்
அயன் தனை யோரும் பதம் அது பற்றும்
பெயர்ந்தனள் மற்றும் பிதற்று அறுத்தாளே.

42

பிதற்றிக் கழிந்தனர் பேதை மனிதர்
முயற்றியின் முத்தி அருளும் முதல்வி
கயல் திகழ் முக்கண்ணும் கம்பலைச் செவ்வாய்
முகத்து அருள் நோக்கமும் முன் உள்ளது ஆமே.

43

உள்ளத்து இதயத்து நெஞ்சத்து ஒரு மூன்றுள்
பிள்ளைத் தடம் உள்ளே பேசப் பிறந்தது
வள்ளல் திருவின் வயிற்றின் உள் மா மாயைக்
கள்ள ஒளியின் கருத்து ஆகும் கன்னியே.

44

கன்னியும் கன்னி அழிந்திலள் காதலி
துன்னி அம் ஐவரைப் பெற்றனள் தூய்மொழி
பன்னிய நல் நூல் பகவரும் அங்கு உள
என்னே இம் மாயை இருள் அது தானே.

45

இருள் அது சத்தி வெளியது எம் அண்ணல்
பொருள் அது புண்ணியர் போகத்துள் இன்பம்
தெருள் அது சிந்தையைத் தெய்வம் என்று எண்ணில்
அருள் அது செய்யும் எம் ஆதிப் பிரானே.

46

ஆதி அனாதியும் ஆய பராசத்தி
பாதிபரா பரை மேல் உறை பைந்தொடி
மாது சமாதி மனோன்மணி மங்கலி
ஓதும் என் உள்ளத்து உடன் முகிழ்த்தாளே.

47

ஓதிய வண்ணம் கலையின் உயர்கலை
ஆதியில் வேதமே யாம் என்று அறிகிலர்
சாதியும் பேதமும் தத்துவம் ஆய் நிற்பள்
ஆதி என்று ஓதினள் ஆவின் கிழத்தியே.

48

ஆவின் கிழத்தி நல் ஆவடு தண் துறை
நாவின் கிழத்தி நலம் புகழ்ந்து ஏத்திடும்
தேவின் கிழத்தி திரு ஆம் சிவ மங்கை
மேவும் கிழத்தி வினை கடிந்தாளே.

49

வினை கடிந்தார் உள்ளத்து உள் ஒளி மேவித்
தனை அடைந்தோர்க்கு எல்லாம் தத்துவமாய் நிற்பள்
எனை அடிமை கொண்ட ஏந்திழை ஈசன்
கணவனைக் காண அனாதியும் ஆமே.

50

ஆதி அனாதி அகாரணி காரணி
வேதம் அது ஆய்ந்தனள் வேதியர்க்காய் நின்ற
சோதி தனிச் சுடர் சொரூபம் ஆய் நிற்கும்
பாதி பராபரை பன்னிரண்டு ஆதியே.