பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்-நலம் தாங்கு தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய, பூம் புனல் சேர், புரி புன்சடையான்; புலியின்(ன்) உரி-தோல்மேல் பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.
தீவினை ஆயின தீர்க்க நின்றான்-திரு நாரையூர் மேயான்; பூவினை மேவு சடைமுடியான், புடை சூழப் பலபூதம், ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான், அடங்கார் மதில் மூன்றும் ஏவினை எய்து அழித்தான், கழலே பரவா எழுவோமே.
மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும் மைமிடற்றன் ஆயவன், ஆகி ஒர் அந்தரமும்(ம்) அவன் என்று, வரை ஆகம் தீ அவன், நீர் அவன், பூமி அவன், திரு நாரையூர் தன்னில் மேயவனைத் தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே.
துஞ்சு இருள் ஆடுவர்; தூ முறுவல் துளங்கும் உடம்பினராய், அம் சுடர் ஆர் எரி ஆடுவர்; ஆர் அழல் ஆர் விழிக்கண், நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர்; நலன் ஓங்கு நாரையூர் எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை, ஏதமே.
பொங்கு இளங் கொன்றையினார், கடலில் விடம் உண்டு இமையோர்கள் தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர், சடைமேல் ஓர் திங்களை வைத்து அனல் ஆடலினார், திரு நாரையூர் மேய வெங்கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே.
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி, பைங்கொன்றைத்- தார் உறு மார்பு உடையான், மலையின் தலைவன், மலைமகளைச் சீர் உறும் மா மறுகின் சிறைவண்டு அறையும் திரு நாரை- யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே.
கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர், கண் நுதலார் வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து, நள் இருள் நட்டம் அது ஆடுவர், நன்நலன் ஓங்கு நாரையூர் உள்ளிய போழ்தில், எம்மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே.
நாமம் எனைப்பலவும்(ம்) உடையான், நலன் ஓங்கு நாரையூர் தாம் ஒம்மெனப் பறை, யாழ், குழல், தாள் ஆர் கழல், பயில, ஈம விளக்கு எரி சூழ், சுடலை இயம்பும்(ம்) இடுகாட்டில், சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே.
ஊன் உடை வெண்தலை கொண்டு உழல்வான், ஒளிர்புன்சடைமேல் ஓர் வான் இடை வெண்மதி வைத்து உகந்தான், வரிவண்டு யாழ்முரலத் தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய ஆன் இடை ஐந்து உகந்தான், அடியே பரவா, அடைவோமே.
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார், உடம்பினில் உள் மாசு புனைந்து உடை நீத்தவர்கள், மயல் நீர்மை கேளாதே, தேசு உடையீர்கள்! தெளிந்து அடைமின், திரு நாரையூர் தன்னில் பூசு பொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே!
தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன், ஒண்மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர் தன்மேல், பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார், வினை போகி, மண் மதியாது போய், வான் புகுவர், வானோர் எதிர்கொளவே.
கடல் இடை வெங்கடு நஞ்சம் உண்ட கடவுள், விடை ஏறி, உடல் இடையின் பொடிப் பூச வல்லான், உமையோடு ஒருபாகன், அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான், அடியார் மேல் நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான், இடம் நாரையூர் தானே.
“விண்ணின் மின் நேர் மதி, துத்தி நாகம், விரி பூமலர்க்கொன்றை, பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான்; எரி ஆடி நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான்” என்று எண்ணுமின்! நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும்! நிறைவு ஆமே.
தோடு ஒரு காது, ஒரு காது சேர்ந்த குழையான், இழை தோன்றும் பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான், மறை ஓதி, நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானைப் பாடுமின், நீர் பழி போகும் வண்ணம்! பயிலும்! உயர்வு ஆமே.
வெண் நிலவு அம் சடை சேர வைத்து, விளங்கும் தலை ஏந்தி, பெண்ணில் அமர்ந்து ஒரு கூறு அது ஆய பெருமான்; அருள் ஆர்ந்த அண்ணல்; மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர் தன்னை நண்ணல் அமர்ந்து, உறவு ஆக்குமின்கள்! நடலைகரிசு அறுமே.
வான், அமர் தீ, வளி, நீர், நிலன் ஆய், வழங்கும் பழி ஆகும் ஊன் அமர் இன் உயிர் தீங்கு குற்றம் உறைவால், பிறிது இன்றி, நான் அமரும் பொருள் ஆகி நின்றான்-திரு நாரையூர் எந்தை, கோன்; அவனைக் குறுகக் குறுகா, கொடுவல் வினைதானே.
கொக்கு இறகும், குளிர் சென்னி, மத்தம் குலாய மலர் சூடி, அக்கு அரவோடு அரை ஆர்த்து, உகந்த அழகன்; குழகு ஆக, நக்கு அமரும் திருமேனியாளன்; திரு நாரையூர் மேவிப் புக்கு அமரும் மனத்தோர்கள் தம்மைப் புணரும், புகல்தானே.
ஊழியும் இன்பமும் காலம் ஆகி, உயரும் தவம் ஆகி, ஏழ் இசையின் பொருள், வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி, நாழிகையும் பல ஞாயிறு ஆகி, நளிர் நாரையூர் தன்னில் வாழியர், மேதகு மைந்தர், செய்யும் வகையின் விளைவு ஆமே.
கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் தோள நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான், கரவாதார் பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன், இடம்போலும் தேசம் உறப் புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர் தானே.
பூமகனும்(ம்), அவனைப் பயந்த புயல் ஆர் நிறத்தானும், ஆம் அளவும் திரிந்து ஏத்திக் காண்டல் அறிதற்கு அரியான் ஊர் பா மருவும் குணத்தோர்கள் ஈண்டிப் பலவும் பணி செய்யும், தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த, திரு நாரையூர் தானே.
வெற்று அரை ஆகிய வேடம் காட்டித் திரிவார், துவர் ஆடை உற்ற (அ)ரையோர்கள், உரைக்கும் சொல்லை உணராது, எழுமின்கள் குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான், குழகன், தொழில் ஆரப்- பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான், திரு நாரையூர் சேரவே!
பாடு இயலும் திரை சூழ் புகலித் திருஞானசம்பந்தன், சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மைத் திரு நாரையூரான் மேல், பாடிய தண் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்து, ஆக ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும், அவலக்கடல் தானே.