பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கடவூர் வீரட்டம்
வ.எண் பாடல்
1

பொள்ளத்த காயம் ஆய பொருளினை, போக மாதர்
வெள்ளத்தை, கழிக்க வேண்டில், விரும்புமின்! விளக்குத் தூபம்
உள்ளத்த திரி ஒன்று ஏற்றி உணரும் ஆறு உணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.

2

மண் இடைக் குரம்பைதன்னை மதித்து, நீர், மையல் எய்தில்,
விண் இடைத் தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர்?
பண் இடைச் சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும்
கண் இடை மணியர்போலும், கடவூர்வீரட்டனாரே.

3

பொருத்திய குரம்பைதன்னுள் பொய்ந்நடை செலுத்துகின்றீா
ஒருத்தனை உணரமாட்டீர்; உள்ளத்தில் கொடுமை நீக்கீர்
வருத்தின களிறுதன்னை வருத்துமா வருத்த வல்லார்
கருத்தினில் இருப்பர்போலும், கடவூர்வீரட்டனாரே.

4

பெரும்புலர்காலை மூழ்கி, பித்தர்க்குப் பத்தர் ஆகி,
அரும்பொடு மலர்கள் கொண்டு, ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பி, நல் விளக்குத் தூபம் விதியினால் இட வல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார், கடவூர்வீரட்டனாரே.

5

தலக்கமே செய்து வாழ்ந்து, தக்க ஆறு ஒன்றும் இன்றி,
விலக்குவார் இலாமையாலே, விளக்கத்தில் கோழி போன்றேன்;
மலக்குவார், மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து
கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே!

6

பழி உடை யாக்கை தன்னில் பாழுக்கே நீர் இறைத்து
வழி இடை வாழமாட்டேன்; மாயமும் தெளியகில்லேன்;
அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டுக்
கழி இடைத் தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே!

7

மாயத்தை அறியமாட்டேன்; மையல் கொள் மனத்தன் ஆகி,
பேய் ஒத்து, கூகை ஆனேன்; பிஞ்ஞகா! பிறப்பு ஒன்று இல்லீ!
நேயத்தால் நினையமாட்டேன்; நீதனே! நீசனேன் நான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீரட்டனீரே!

8

பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன்;
“உற்றலால் கயவர் தேறார்” என்னும் கட்டுரையோடு ஒத்தேன்;
எற்று உளேன்? என் செய்கேன், நான்? இடும்பையால் ஞானம் ஏதும்
கற்றிலேன்; களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே!

9

சேலின் நேர்-அனைய கண்ணார் திறம் விட்டு, சிவனுக்கு அன்பு ஆய்,
பாலும் நல்-தயிர் நெய்யோடு பலபல ஆட்டி, என்றும்
மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று
காலனை உதைப்பர் போலும்-கடவூர்வீரட்டனாரே.

10

முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும்-
இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய,
வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி
கந்திருவங்கள் கேட்டார்-கடவூர்வீரட்டனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கடவூர்
வ.எண் பாடல்
1

மருள்-துயர் தீர அன்று அர்ச்சித்த மாணிமார்க்கண்டேயற்கு ஆய்-
இருட்டிய மேனி, வளைவாள் எயிற்று, எரி போலும் குஞ்சி,
சுருட்டிய நாவில்-வெங் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே
உருட்டிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

2

பதத்து எழு மந்திரம் அஞ்சு எழுத்து ஓதிப் பரிவினொடும்
இதத்து எழு மாணிதன் இன் உயிர் உண்ண வெகுண்டு அடர்த்த
கதத்து எழு காலனைக் கண் குருதிப் புனல் ஆறு ஒழுக
உதைத்து எழு சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

3

கரப்பு உறு சிந்தையர் காண்டற்கு அரியவன்; காமனையும்
நெருப்பு உமிழ் கண்ணினன்; நீள் புனல் கங்கையும், பொங்கு அரவும்,
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்; காலனைப் பண்டு ஒரு கால்
உரப்பிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

4

மறி(த்) திகழ் கையினன்; வானவர்கோனை மனம் மகிழ்ந்து
குறித்து எழு மாணிதன் ஆர் உயிர் கொள்வான் கொதித்த சிந்தை,
கறுத்து எழு மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற
உறுக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

5

குழை(த்) திகழ் காதினன்; வானவர்கோனைக் குளிர்ந்து எழுந்து
பழக்கமொடு அர்ச்சித்த மாணிதன் ஆர் உயிர் கொள்ள வந்த,
தழல் பொதி மூஇலைவேல் உடை, காலனைத் தான் அலற
உழக்கிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

6

பாலனுக்கு ஆய் அன்று பாற்கடல் ஈந்து, பணைத்து எழுந்த
ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி, அரு முனிக்கு ஆய்,-
சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த
காலனைக் காய்ந்த பிரான்கடவூர் உறை உத்தமனே.

7

படர்சடைக் கொன்றையும், பன்னகமாலை, பணி கயிறா
உடைதலை கோத்து, உழல் மேனியன்; உண்பலிக்கு என்று உழல்வோன்;
சுடர் பொதி மூஇலைவேல் உடைக் காலனைத் துண்டம் அதா
உடறிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.

8

வெண் தலை மாலையும், கங்கை, கரோடி, விரிசடைமேல்
பெண்டு அணி நாயகன்; பேய் உகந்து ஆடும் பெருந்தகையான்;
கண் தனி நெற்றியன்; காலனைக் காய்ந்து, கடலின் விடம்
உண்டு அருள் செய்த பிரான்கடவூர் உறை உத்தமனே

9

கேழல் அது ஆகிக் கிளறிய கேசவன் காண்பு அரிது ஆய்,
வாழி நல் மா மலர்க்கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று
ஆழியும் ஈந்து(வ்), அடு திறல் காலனை அன்று அடர்த்து(வ்),
ஊழியும் ஆய பிரான்கடவூர் உறை உத்தமனே.

10

தேன் திகழ் கொன்றையும், கூவிளமாலை, திருமுடிமேல்
ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான்; மலை ஆர்த்து எடுத்த
கூன் திகழ் வாள் அரக்கன் முடிபத்தும் குலைந்து விழ
ஊன்றிய சேவடியான்கடவூர் உறை உத்தமனே.