பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருநெய்த்தானம்
வ.எண் பாடல்
1

காலனை வீழச் செற்ற கழல் அடி இரண்டும் வந்து என்
மேல ஆய் இருக்கப் பெற்றேன்; மேதகத் தோன்றுகின்ற
கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய
நீலம் வைத்த(அ)னைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே.

2

காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி,
தூபமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கு அருள்கள் செய்து,
சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய
வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வு உற நினைந்த ஆறே!

3

பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை தன்னை
உறைதர வைத்த எங்கள் உத்தமன்; ஊழிஆய
நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று
குறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடல் ஆமே.

4

வடி தரு மழு ஒன்று ஏந்தி, வார்சடை மதியம் வைத்து
பொடி தரு மேனிமேலே புரிதரு நூலர் போலும்-
நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி,
அடி தரு கழல்கள் ஆர்ப்ப, ஆடும் எம் அண்ணலாரே.

5

காடு இடம் ஆக நின்று, கனல்- எரி கையில் ஏந்தி,
பாடிய பூதம் சூழ, பண் உடன் பலவும் சொல்லி
ஆடிய கழலர், சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும்
கூடிய குழகனாரைக் கூடும் ஆறு அறிகிலேனே!

6

வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ,
தான் அவர்க்கு அருள்கள் செய்யும் சங்கரன்; செங்கண் ஏற்றன்;
தேன் அமர் பொழில்கள் சூழத் திகழும் நெய்த்தானம் மேய
கூன் இளமதியினானைக் கூடும் ஆறு அறிகிலேனே

7

கால் அதிர்கழல்கள் ஆர்ப்ப, கனல்-எரி கையில் வீசி,
ஞாலமும் குழிய நின்று, நட்டம் அது ஆடுகின்ற
மேலவர்-முகடு தோய விரிசடை திசைகள் பாய
மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே.

8

பந்தித்த சடையின் மேலே பாய்புனல் அதனை வைத்து
அந்திப்போது அனலும் ஆடி, அடிகள், ஐயாறு புக்கார்
வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்
சிந்திப்பார் சிந்தை உள்ளார்-திருந்து நெய்த்தானனாரே.

9

சோதி ஆய்ச் சுடரும் ஆனார்; சுண்ணவெண்சாந்து பூசி
ஓதி வாய் உலகம் ஏத்த, உகந்து தாம் அருள்கள் செய்வார்
ஆதி ஆய் அந்தம் ஆனார்-யாவரும் இறைஞ்சி ஏத்த,
நீதி ஆய் நியமம் ஆகி, நின்ற நெய்த்தானனாரே.

10

இலை உடைப்படை கை ஏந்தும் இலங்கையர் மன்னன் தன்னைத்
தலைஉடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து,
சிலை உடன் கணையைச் சேர்த்து, திரிபுரம் எரியச் செற்ற
நிலை உடை அடிகள் போலும்-நின்ற நெய்த்தானனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருநெய்த்தானம்
வ.எண் பாடல்
1

பார் இடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருள
கார் அடைந்த(க்) கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான்
ஊர் அடைந்து இவ் உலகில் பலி கொள்வது நாம் அறியோம்-
நீர் அடைந்த(க்) கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

2

தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய்! நின் திருச்சடை மேல்
பாய்ந்த கங்கைப் புனல் பல்முகம் ஆகிப் பரந்து ஒலிப்ப,
ஆய்ந்து இலங்கும் மழு, வேல், உடையாய்!-அடியேற்கு உரை நீ,
ஏந்து இளமங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே!

3

கொன்று அடைந்து ஆடிக் குமைத்திடும் கூற்றம், ஒன்னார் மதில் மேல்
சென்று அடைந்து ஆடி, பொருததும், -தேசம் எல்லாம் அறியும்;-
குன்று அடைந்து ஆடும் குளிர்ப்பொழில் காவிரியின் கரை மேல்,
சென்று அடைந்தார் வினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே!

4

கொட்டு முழவு அரவத்தொடு கோலம்பல அணிந்து
நட்டம் பல பயின்று ஆடுவர்; நாகம் அரைக்கு அசைத்துச்
சிட்டர் திரிபுரம் தீ எழச் செற்ற சிலை உடையான்
இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.

5

கொய்ம் மலர்க் கொன்றை, துழாய், வன்னி, மத்தமும், கூவிளமும்,
மொய்ம்மலர், வேய்ந்த விரிசடைக்கற்றை விண்ணோர் பெருமான்;
மைம்மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர் பால் மகிழ்ந்தான்;
நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே.

6

பூந்தார் நறுங் கொன்றை மாலையை வாங்கிச் சடைக்கு அணிந்து
கூர்ந்து ஆர் விடையினை ஏறி, பல் பூதப்படை நடுவே
போந்தார்-புற இசை பாடவும் ஆடவும் கேட்டு அருளிச்
சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே.

7

பற்றின பாம்பன்; படுத்த புலி உரித்-தோல் உடையன்;
முற்றின மூன்றும் மதில்களை மூட்டி எரித்து அறுத்தான்;
சுற்றிய பூதப்படையினன்சூலம் மழு ஒருமான்,
செற்று நம் தீவினை தீர்க்கும், நெய்த்தானத்து இருந்தவனே.

8

விரித்த சடையினன்; விண்ணவர் கோன்; விடம் உண்ட கண்டன்;
உரித்த கரிஉரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே-
எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டு கொண்ட,
தரித்த உமையவளோடு, நெய்த்தானத்து இருந்தவனே.

9

தூங்கான்; துளங்கான்; துழாய், கொன்றை, துன்னிய செஞ்சடை மேல்
வாங்கா மதியமும், வாள் அரவும், கங்கை, தான் புனைந்தான்;
தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து
நீங்கான், உமையவளோடு; நெய்த்தானத்து இருந்தவனே.

10

ஊட்டி நின்றான், பொரு வானில் அம் மும்மதில் தீ; அம்பினால்
மாட்டி நின்றான்; அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்குக்
காட்டி நின்றான்; கதமாக் கங்கை பாய ஓர் வார்சடையை
நீட்டி நின்றான்திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே.