பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நவ குண்டம் ஆனவை நான் உரை செய்யின் நவ குண்டத்து உள் எழு நல் தீபம் தானும் நவ குண்டத்து உள் எழு நன்மைகள் எல்லாம் நவ குண்டம் ஆனவை நான் உரைப்பேனே.
உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும் நகைத்து எழு நால் கோண நன்மைகள் ஐந்தும் பகைத்திடும் முப்புரம் பார் அங்கி யோடே மிகைத்து எழு கண்டங்கள் மேல் அறியோமே.
மேல் அறிந்து உள்ளே வெளி செய்த அப்பொருள் கால் அறிந்து உள்ளே கருத்து உற்ற செம் சுடர் பார் அறிந்து அண்டம் சிறகு அற நின்றது நான் அறிந்து உள்ளே நாடிக் கொண்டேனே.
கொண்ட இக் குண்டத்தின் உள் எழு சோதியாய் அண்டங்கள் ஈர் ஏழும் ஆக்கி அழிக்கலாம் பண்டை உள் வேதம் பரந்த பரப்பு எல்லாம் இன்று சொல் நூலாய் எடுத்து உரைத்தேனே.
எடுத்த அக் குண்டத்து இடம் பதினாறில் பதித்த கலைகளும் பாலித்து நிற்கும் கதித்து அனல் உள் எழக் கண்டு கொள்வார்க்கே கொதித்து எழும் வல்வினை கூட இலாவே.
கூட முக் கூடத்தின் உள் எழு குண்டத்துள் ஆடிய ஐந்தும் அகம் புறம்பாய் நிற்கும் பாடிய பன்னீர் இராசியும் அங்கு எழ நாடிக் கொள்வார் கட்கு நல் சுடர் தானே.
நல் சுடர் ஆகும் சிர முக வட்டம் ஆம் கைச்சுடர் ஆகும் கருத்து உற்ற கைகளில் பைச் சுடர் மேனி பதைப்பு உற்று இலிங்கமும் நல் சுடராய் எழு நல்லது என்றாளே.
நல்லது என்றாளே நமக்கு உற்ற நாயகம் சொல் அது என்றாளே சுடர் முடி பாதம் ஆம் மெல்ல நின்றாளை வினவ கில்லாதவர் கல் அதன் தாளையும் கற்றும் இன்னாளே.
இன்னா இளம் பிறை மேவிய குண்டத்துச் சொன்னால் இரண்டும் சுடர் நாகம் திக்கு எங்கும் பன்னாலு நாகம் பரந்த பரம் சுடர் என் ஆகத்து உள்ளே இடம் கொண்டவாறே.
இடம் கொண்ட பாதம் எழில் சுடர் ஏக நடம் கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச் சகம் கொண்ட கை இரண்டு ஆறும் தழைப்ப முகம் கொண்ட செம் சுடர் முக்கணனார்க்கே.
முக்கணன் தானே முழுச் சுடர் ஆயவன் அக் கணன் தானே அகிலமும் உண்டவன் திக் கணன் ஆகித் திகை எட்டும் கண்டவன் எக் கணன் தானுக்கும் எந்தை பிரானே.
எந்தை பிரானுக்கு இரு மூன்று வட்டம் ஆய்த் தந்தை தன் முன்னே சண்முகம் தோன்றலால் கந்தன் சுவாமி கலந்து அங்கு இருத்தலான் மைந்தன் இவன் என்று மாட்டிக் கொள்ளீரே.
மாட்டிய குண்டத்தின் உள் எழு வேதத்துள் ஆட்டிய கால் ஒன்றும் இரண்டும் அலர்ந்திடும் வாட்டிய கை இரண்டு ஒன்று பதைத்து எழ நாட்டும் சுரர் இவர் நல் ஒளி தானே.
நல் ஒளியாக நடந்து உலகு எங்கும் கல் ஒளியாகக் கலந்து உள் இருந்திடும்; சொல் ஒளியாகத் தொடர்ந்த உயிர்க்கு எலாம் கல் ஒளி கண் உளும் ஆகி நின்றானே.
நின்ற இக் குண்டம் நிலைஆறு கோணமாய் பண்டையில் வட்டம் பதைத்து எழும் ஆறு ஆறும் கொண்ட இத் தத்துவம் உள்ளே கலந்து எழ விண் உளும் என்ன எடுக்கலும் ஆமே.
எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக் கடுத்த முகம் இரண்டு ஆறு கண்ணாகப் படித்து எண்ணு நா எழு கொம்பு ஒரு நாலும் அடுத்து எழு கண்ணான அந்தம் இலாற்கே.
அந்தம் இல்லானுக்கு அகல் இடம் தான் இல்லை அந்தம் இல்லானை அளப்பவர் தாம் இல்லை அந்தம் இல்லானுக்கு அடுத்த சொல் தான் இல்லை அந்தம் இல்லானை அறிந்து கொள் பத்தே.
பத்து இட்டு அங்கு எட்டு இட்டு ஆறு இட்டு நால் இட்டு மட்டு இட்ட குண்டம் மலர்ந்து எழு தாமரை கட்டு இட்டு நின்று கலந்த மெய் ஆகமும் பட்டு இட்டு நின்றது பார்ப்பதி பாலே.
பார்ப்பதி பாகன் பரந்தகை நால் அஞ்சு கால் பதி பத்து முகம் பார்த்துக் கண்களும் பூப் பதி பாதம் இரண்டு சுடர் முடி நாற்பது சோத்திரம் நல் இருபத்து அஞ்சே.
அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐ ஐந்தும் மஞ்சிட்ட குண்டம் மலர்ந்து அங்கு இருத்தலால் பஞ்சிட்ட சோதி பரந்த பரம் சுடர் கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.
முத்தி நல் சோதி முழுச் சுடர் ஆயவன் கற்று அற்று நின்றார் கருத்துள் இருந்திடும் பற்று அற நாடிப் பரந்து ஒளி ஊடு போய்ச் செற்று அற்று இருந்தவர் சேர்ந்து இருந்தாரே.
சேர்ந்த கலை அஞ்சும் சேரும் இக் குண்டமும் ஆர்த்த திசைகளும் அங்கே அமர்ந்திடும் பாய்ந்த ஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக் காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.
மெய் கண்டம் ஆம் விரி நீர் உலகு ஏழையும் உய் கண்டம் செய்த ஒருவனைச் சேருமின் மெய் கண்ட ஞானம் திருந்திய தேவர்கள் பொய் கண்டம் இல்லாப் பொருள் கலந்தாரே.
கலந்து இருபாதம் இருகரம் ஆகும் மலர்ந்து இரு குண்டம் அகாரத்து ஓர் மூக்கு மலர்ந்து எழு செம் முகம் மற்றைக் கண் நெற்றி உணர்ந்து இரும் குஞ்சி அங்கு உத்தமனார்க்கே.
உத்தமன் சோதி உளன் ஒரு பாலன் ஆய் மத்திமன் ஆகி மலர்ந்து அங்கு இருந்திடும் பச்சி மதிக்கும் பரந்து குழிந்தன சத்திமான் ஆகத் தழைத்த கொடியே.
கொடியாறு சென்று குலாவிய குண்டம் அடி இரு கோணம் ஆய் அந்தமும் ஒக்கும் படி ஏழ் உலகும் பரந்த சுடரை மடியாது கண்டவர் மாதனம் ஆமே.
மாதனம் ஆக வளர்கின்ற வன்னியைச் சாதனம் ஆகச் சமைந்த குரு என்று போதனம் ஆகப் பொருந்த உலகு ஆளும் பாதனம் ஆகப் பிரிந்தது பார்த்தே.
பார்த்த இடம் எங்கும் பரந்து எழு சோதியை ஆத்தம் அது ஆகவே ஆய்ந்து அறிவார் இல்லை காத்து உடல் உள்ளே கருதி இருந்தவர் மூத்து உடல் கோடி உகம் கண்ட வாறே.
உகம் கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க அகம் கண்ட யோகி உள் நாடி எழுப்பும் பயம் கண்டு கொண்ட இப்பாய் கரு ஒப்பச் சகம் கண்டு கொண்டது சாதனம் ஆமே.
சாதனை நாலு தழல் மூன்று வில்வயம் வேதனை வட்டம் விளை ஆறு பூநிலை போதனை போதஞ்சு பொற்கய வாரண நாதனை நாடு நவகோடி தானே.