திங்கட் கொழுந்தொடு பொங்கரவு திளைக்குங்
கங்கைப் பேரியாற்றுக் கடுவரற் கலுழியின்
இதழியின் செம்பொ னிருகரை சிதறிப்
புதலெருக்கு மலர்த்தும் புரிபுன் சடையோன்
5. திருவருள் பெற்ற இருபிறப் பாளன்
முத்தீ வேள்வி நான்மறை வளர
ஐவேள் வுயர்த்த அறுதொழி லாளன்
ஏழிசை யாழை யெண்டிசை யறியத்
துண்டப் படுத்த தண்டமிழ் விரகன்
10. காழி நாடன் கவுணியர் தலைவன்
மாழை நோக்கி மலைமகள் புதல்வன்
திருந்திய பாடல் விரும்பினர்க் கல்லது
கடுந்துய ருட்புகக் கைவிளிக் கும்இந்
நெடும்பிற விக்கடல் நீந்துவ தரிதே.