அவனிதலம் நெரிய வெதிரெதிர் மலைஇச்
சொரிமதக் களிற்று மத்தகம் போழ்ந்து
செஞ்சே றாடிச் செல்வன அரியே
எஞ்சாப்
படவர வுச்சிப் பருமணிபிதுங்கப்
5 பிடரிடைப்பாய்வன பேழ்வாய்ப் புலியே
இடையிடைச்
செறியிரு ளுருவச் சேண்விசும் பதனில்
பொறியென விழுவன பொங்கொளி மின்னே
உறுசின வரையாலறுந்திய கலுழிக்
கரையா றுழல்வன கரடியின் கணனே
நிரையார்
10 பொருகட லுதைந்த கரிமுகச் சங்கு
செங்கயல் கிழித்த பங்கய மலரின்
செம்மடல் நிறைய வெண்முத் துதிர்க்கும்
பழனக் கழனிக் கழுமல நாடன்
வைகையி லமணரை வாதுசெய் தறுத்த
15 சைவ சிகாமணி சம்பந்தன் வெற்பிற்
சிறுகிடை யவள்தன் பெருமுலை புணர்வான்
நெறியினில் வரலொழி நீமலை யோனே.