இழைகெழு மென்முலை யிதழிமென் மலர்கொயத்
தழைவர வொசித்த தடம்பொழி லிதுவே;
காமர்
சுனைகுடைந் தேறித் துகிலது புனையநின்
றெனையுங் கண்டு வெள்கிட மிதுவே
தினைதொறும்
5 பாய்கிளி யிரியப் பையவந் தேறி
ஆயவென் றிருக்கு மணிப்பர ணிதுவே
ஈதே
இன்புறு சிறுசொ லவைபல வியற்றி
அன்புசெய் தென்னை யாட்கொளு மிடமே
பொன்புரை
தடமலர்க் கமலக் குடுமியி லிருந்து
10 நற்றொழில் புரியும் நான்முகன் நாட்டைப்
புற்கடை கழீஇப் பொங்கு சராவத்து
நெய்த்துடுப் பெடுத்த முத்தீப் புகையால்
நாள்தொறும் மறைக்குஞ் சேடுறு காழி
எண்டிசை நிறைந்த தண்டமிழ் விரகன்
15 நலங்கலந் தோங்கும் விலங்கலின் மாட்டுப்
பூம்புன மதனிற் காம்பன தோளி
பஞ்சில் திருந்தடி நோவ
வஞ்சித் திருந்த மணியறை யிதுவே.