பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கழிப்பாலை
வ.எண் பாடல்
1

வன பவளவாய் திறந்து, “வானவர்க்கும் தானவனே!” என்கின்றாளால்;
“சின பவளத்திண் தோள்மேல் சேர்ந்து இலங்கும் வெண் நீற்றன்” என்கின்றாளால்;
“அன பவள மேகலை யோடு அப்பாலைக்கு அப்பாலான்” என்கின்றாளால்-
கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள்-கொல்லோ!

2

“வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே!” என்கின்றாளால்;
“விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு” என்கின்றாளால்;
“உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப் பட்டு உடையன்” என்கின்றாளால்-
கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

3

“பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடிமேலது” என்கின்றாளால்;
“நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே” என்கின்றாளால்;-
மறம் கிளர் வேல் கண்ணாள்,- “மணி சேர் மிடற்றவனே!” என்கின்றாளால்-
கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

4

“இரும்பு ஆர்ந்த சூலத்தன், ஏந்திய ஒர் வெண் மழுவன்” என்கின்றாளால்-
“சுரும்பு ஆர்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண் நீற்றவனே!” என்கின்றாளால்;
“பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞகவேடத்தன்” என்கின்றாளால்-
கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

5

“பழி இலான், புகழ் உடையன், பால் நீற்றன், ஆன் ஏற்றன்” என்கின்றாளால்;
“விழி உலாம் பெருந் தடங்கண் இரண்டு அல்ல, மூன்று உளவே!” என்கின்றாளால்;
“சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே!” என்கின்றாளால்-
கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

6

“பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே!” என்கின்றாளால்;
“எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே!” என்கின்றாளால்;
“பண் ஆர் முழவு அதிர, பாடலொடு ஆடலனே!” என்கின்றாளால்-
கண் ஆர் பூஞ்சோலைக் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

7

“முதிரும் சடை முடி மேல் மூழ்கும், இள நாகம்” என்கின்றாளால்;
“அது கண்டு, அதன் அருகே தோன்றும், இளமதியம்” என்கின்றாளால்;
“சதுர் வெண் பளிக்குக் குழை காதில் மின்னிடுமே” என்கின்றாளால்-
கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

8

“ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான்” என்கின்றாளால்;
“நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே!” என்கின்றாளால்;
“பார் ஓத மேனிப் பவளம் அவன் நிறமே” என்கின்றாளால்
கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

9

“வான் உலாம் திங்கள் வளர்புன் சடையானே!” என்கின்றாளால்;
“ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர் ஊர் பலி திரிவான்” என்கின்றாளால்;
“தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன்” என்கின்றாளால்-
கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

10

“அடர்ப்பு அரிய இராவணனை அரு வரைக் கீழ் அடர்த்தவனே!” என்கின்றாளால்;
“சுடர்ப் பெரிய திருமேனிச் சுண்ணவெண் நீற்றவனே!” என்கின்றாளால்;
“மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு, அன்று, உரைத்தான்” என்கின்றாளால்-
கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானைக் கண்டாள் கொல்லோ!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கழிப்பாலை
வ.எண் பாடல்
1

நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார்; ஆனையின் உரிவை வைத்தார்
தம் கையின் யாழும் வைத்தார்; தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

2

விண்ணினை விரும்ப வைத்தார்; வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார்; பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

3

வாமனை வணங்க வைத்தார்; வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடை மேல் வைத்தார்; சோதியுள் சோதி வைத்தார்
ஆ மன் நெய் ஆட வைத்தார்; அன்பு எனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

4

அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழலுண்ண வைத்தார்
பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார்
கரியது ஓர் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

5

கூர் இருள் கிழிய நின்ற கொடு மழுக் கையில் வைத்தார்
பேர் இருள் கழிய மல்கு பிறை, புனல், சடையுள் வைத்தார்
ஆர் இருள் அண்டம் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார்
கார் இருள் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

6

உள்-தங்கு சிந்தை வைத்தார்; உள்குவார்க்கு உள்ளம் வைத்தார்
விண்-தங்கு வேள்வி வைத்தார்; வெந்துயர் தீரவைத்தார்
நள்- தங்கு நடமும் வைத்தார்; ஞானமும் நாவில் வைத்தார்
கட்டங்கம் தோள் மேல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

7

ஊனப் பேர் ஒழிய வைத்தார்; ஓதியே உணர வைத்தார்
ஞானப் பேர் நவில வைத்தார்; ஞானமும் நடுவும் வைத்தார்
வானப்பேர் ஆறும் வைத்தார்; வைகுந்தற்கு ஆழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

8

கொங்கினும் அரும்பு வைத்தார்; கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார்; சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார்; ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

9

சதுர் முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு(வ்)
எதிர் முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார்
பிதிர் முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிர வைத்தார்
கதிர் முகம் சடையில் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

10

மாலினாள் நங்கை அஞ்ச, மதில் இலங்கைக்கு மன்னன்
வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும், வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு, நொடிப்பது ஓர் அளவில் வீழ,
காலினால் ஊன்றியிட்டார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருக்கழிப்பாலை
வ.எண் பாடல்
1

நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கிச் சென்று,
கைதைமடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய்!
பைதல் பிறையொடு பாம்பு உடன் வைத்த பரிசு அறியோம்;
எய்தப் பெறின் இரங்காதுகண்டாய்-நம் இறையவனே!

2

பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை
பொரு மால் கரைமேல்-திரை கொணர்ந்து ஏற்றப் பொலிந்து இலங்கும்
கரு மா மிடறு உடைக் கண்டன், எம்மான் கழிப்பாலை எந்தை,
பெருமான் அவன்,என்னை ஆள் உடையான், இப் பெரு நிலத்தே.

3

நாள்பட்டு இருந்து இன்பம் எய்தல் உற்று, இங்கு நமன்தமரால்
கோட்பட்டு ஒழிவதன் முந்து உறவே, குளிர் ஆர் தடத்துத்
தாள் பட்ட தாமரைப் பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு
ஆட் பட்டொழிந்தம் அன்றே, வல்லம் ஆய் இவ் அகலிடத்தே!

4

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

5

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

6

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.