பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருநாகைக்காரோணம்
வ.எண் பாடல்
1

மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள் சுற்றம் என்னும்
வினையுளே விழுந்து, அழுந்தி, வேதனைக்கு இடம் ஆகாதே,
கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை
நினையுமா வல்லீர் ஆகில் உய்யல் ஆம்-நெஞ்சினீரே!

2

வையனை, வையம் உண்ட மால் அங்கம் தோள்மேல் கொண்ட
செய்யனை, செய்ய போதில்-திசை முகன் சிரம் ஒன்று ஏந்தும்
கையனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
ஐயனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!

3

நிருத்தனை, நிமலன் தன்னை, நீள் நிலம் விண்ணின் மிக்க
விருத்தனை, வேதவித்தை, விளை பொருள் மூலம் ஆன
கருத்தனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
ஒருத்தனை, உணர்தலால் நாம் உய்ந்தவா!-நெஞ்சினீரே!

4

மண் தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர்
தெண் திரை கடைய வந்த தீவிடம் தன்னை உண்ட
கண்டனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
அண்டனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே!

5

நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா, அரவம், சூடி,
மறை ஒலி பாடி, ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன்,
கறை மலி கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட
இறைவனை, நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே.

6

வெம் பனைக் கருங்கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த
கம்பனை, காலற் காய்ந்த காலனை, ஞாலம் ஏத்தும்
உம்பனை, உம்பர் கோனை, நாகைக் காரோணம் மேய
செம் பொனை, நினைந்த நெஞ்சே! திண்ணம், நாம் உய்ந்த ஆறே!

7

வெங் கடுங் கானத்து ஏழை தன்னொடும் வேடனாய்ச் சென்று
அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை,
மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை,
கங்குலும் பகலும் காணப் பெற்று நாம் களித்த ஆறே!

8

தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால்
செற்ற வெஞ்சிலையர்; வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார்
கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்-
பெற்றவர் பிறந்தார்; மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே!

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

கரு மலி கடல் சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்து
ஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான்;
இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம்
திருவடி தரித்து நிற்க, திண்ணம், நாம் உய்ந்தஆறே!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருநாகைக்காரோணம்
வ.எண் பாடல்
1

வடிவு உடை மாமலைமங்கை பங்கா! கங்கை வார்சடையாய்!
கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!
பிடி மதவாரணம் பேணும் துரகம் நிற்க, பெரிய
இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னைகொல்? எம் இறையே!

2

கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!
வில்-தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே;
நல்-தாள் நெடுஞ் சிலை நாண் வலித்த(க்) கரம் நின் கரமே;
செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை கொல்? செப்புமினே!

3

தூ மென் மலர்க்கணை கோத்துத் தீவேள்வி தொழில் படுத்த
காமன் பொடிபடக் காய்ந்த கடல் நாகைக்காரோண! நின்
நாமம் பரவி, நமச்சிவாய என்னும் அஞ்சு எழுத்தும்
சாம் அன்று உரைக்கத் தருதி கண்டாய், எங்கள் சங்கரனே!

4

பழிவழி ஓடிய பாவிப் பறி தலைக் குண்டர் தங்கள்
மொழிவழி ஓடிமுடிவேன்; முடியாமைக் காத்துக் கொண்டாய்;
கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண! என்
வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள், எங்கள் வானவனே!

5

செந்துவர் வாய்க் கருங்கண் இணை வெண் நகைத் தேமொழியார்
வந்து, வலம் செய்து, மா நடம் ஆட, மலிந்த செல்வக்
கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும்
சிந்தை செய்வாரைப் பிரியாது இருக்கும், திருமங்கையே.

6

பனை புரை கைம் மதயானை உரித்த பரஞ்சுடரே!
கனைகடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்ணுதலே!-
மனை துறந்து அல் உணா வல் அமண்குண்டர் மயக்கை நீக்கி
எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என், இனி யான் செயும் இச்சைகளே?

7

சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே!
கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே!-
வார் மலி மென் முலையார் பலி வந்து இடச் சென்று இரந்து,
ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ? உரையே!

8

வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே!
எங்கள் பெருமான்! ஓர் விண்ணப்பம் உண்டு; அது கேட்டு அருளீர்:
கங்கை சடையுள் கரந்தாய்; அக் கள்ளத்தை மெள்ள உமை-
நங்கை அறியின் பொல்லாது கண்டாய், எங்கள் நாயகனே!

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

கருந்தடங் கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான்
இருந்த திருமலை” என்று இறைஞ்சாது அன்று எடுக்கல் உற்றான்
பெருந் தலைபத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற
இருந்து அருளிச் செய்ததே; மற்றுச் செய்திலன் எம் இறையே