அணங்குறை நெடுவரை அருமைபே ணாது,
மணங்கமழ் தெரியல் சூடி, வைகலும்
விடுசுடர் நெடுவேல் முன்னடி விளக்காக்
கடுவிசைக் கான்யாற்று நெடுநீர் நீந்தி
ஒருதனி பெயரும் பொழுதில், புரிகுழல்
வான்அர மகளிர்நின் மல்வழங் ககலத்(து)
ஆனாக் காத லாகுவர் என்று
புலவி உள்ளமொடு பொருந்தாக் கண்ணள்,
கலைபிணை திரியக் கையற வெய்தி
மெல்விரல் நெரித்து விம்மி வெய்துயிர்த்து,
அல்லியங் கோதை அழலுற் றாஅங்(கு)
எல்லையில் இருந்துயர் எய்தினள் புல்லார்
திரிபுரம் எரிய ஒருகணை தெரிந்த
அரிவை பாகத் தண்ண லாரூர்
வளமலி கமல வாள்முகத்(து)
இளமயிற் சாயல் ஏந்திழை தானே