புனமயிற் சாயற் பூங்குழல் மடந்தை
மனைமலி செல்வம் மகிழா ளாகி
ஏதிலன் ஒருவன் காதலன் ஆக
விடுசுடர் நடுவண்நின்(று) அடுதலின் நிழலும்
அடியகத் தொளிக்கும் ஆரழற் கானத்து
வெவ்வினை வேடர் துடிக்குரல் வெரீஇ
மெய்விதிர் எறியுஞ் செவ்விய ளாகி
முள்ளிலை யீந்தும் முளிதாள் இலவமும்
வெள்ளிலும் பரந்த வெள்ளிடை மருங்கில்
கடுங்குரற் கதநாய் நெடுந்தொடர் பிணித்துப்
பாசந் தின்ற தேய்கால் உம்பர்
மரையதள் வேய்ந்து மயிர்ப்புன் குரம்பை
விரிநரைக் கூந்தல் வெள்வாய் மறத்தியர்
விருந்தா யினள்கொல் தானே! திருந்தாக்
கூற்றெனப் பெயரிய கொடுந்தொழில் ஒருவன்
ஆற்றல் செற்ற அண்ணல் ஆரூர்ச்
செய்வளர் கமலச் சீறடிக்
கொவ்வைச் செவ்வாய்க் குயில்மொழிக் கொடியே.