உறைகழி ஒள்வாள் மின்னி உருமெனும்
அறைகுரல் முரசம் ஆர்ப்பக்; கைபோய்
வெஞ்சிலை கோலி, விரிதுளி என்னும்
மின்சரந் துரந்தது, வானே; நிலனே,
கடிய வாகிய களவநன் மலரொடு
கொடிய வாகிய தளவமும், அந்தண்
குலைமேம் பட்ட கோடலுங் கோபமோ(டு)
அலைமேம் பட்ட காந்தளும் இவற்றொடு
காயா வெந்துயர் தருமே; அவரே
பொங்கிரும் புரிசை போக்கற வளைஇக்
கங்குலும் பகலும் காவல் மேவி
மாசறு வேந்தன் பாசறை யோரே;
யானே இன்னே
அலகில் ஆற்றல் அருச்சுனற்(கு) அஞ்ஞான்(று)
உலவா நல்வரம் அருளிய உத்தமன்
அந்தண் ஆரூர் சிந்தித்து மகிழா
மயரிய மாக்களைப் போலத்
துயருழந் தழியக் கண்துயி லாவே.