மனையுறைக் குருவி வளைவாய்ச் சேவல்
சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி
ஈன்இல் இழைக்க வேண்டி ஆனா
அன்புபொறை கூர மேன்மேல் முயங்கிக்
கண்ணுடைக் கரும்பின் நுண்தோடு கவரும்
பெருவளந் தழீஇய பீடுசால் கிடக்கை
வருபுனல் ஊரன் பார்வை யாகி
மடக்கொடி மாதர்க்கு வலையாய்த் தோன்றிப்
படிற்று வாய்மொழி பலபா ராட்டி
உள்ளத் துள்ளது தெள்ளிதின் சுரந்து
கள்ள நோக்கமொடு கைதொழு திறைஞ்சி
எம்மில் லோயே, பாண அவனேல்
அமரரும் அறியா ஆதிமூர்த்தி
குமரன் தாதை குளிர்சடை இறைவன்
அறைகழல் எந்தை ஆருர் ஆவணத்
துறையில் தூக்கம் எழில்மென் காட்சிக்
கண்ணடி அனைய நீர்மைப்
பண்ணுடைச் சொல்லியர் தம்பா லோனே.