பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமறைக்காடு
வ.எண் பாடல்
1

இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரம் ஆனார் போலும்; துதிக்கல் ஆம் சோதிபோலும்;
சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து
மந்திரம் ஆனார்போலும்- மா மறைக்காடனாரே.

2

தேயன நாடர் ஆகித் தேவர்கள்தேவர் போலும்;
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள், பணிய வம்மின்!
காயன நாடு கண்டம் கதன் உளார்; காளகண்டர்
மாயன நாடர் போலும்-மா மறைக்காடனாரே.

3

அறுமை இவ் உலகு தன்னை ஆம் எனக் கருதி நின்று,
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே;
சிறுமதி, அரவு, கொன்றை திகழ் தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை ஆவார்-மா மறைக்காடனாரே.

4

கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து
தோல் மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்
ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,
மால் கொடுத்து, ஆவி வைத்தார்-மா மறைக்காடனாரே.

5

விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் விரும்பி ஓதப்
பண்ணினார்; கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆடக்
கண்ணினார்; கண்ணினுள்ளே சோதி ஆய் நின்ற எந்தை-
மண்ணினார் வலம் கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே.

6

அங்கையுள் அனலும் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார்
தம் கையில் வீணை வைத்தார்; தம் அடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.

7

கீதராய், கீதம் கேட்டுக் கின்னரம் தன்னை வைத்தார்
வேதராய், வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய், நட்டம் ஆடி, இட்டம் ஆய்க் கங்கையோடு
மாதை ஓர்பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.

8

கனத்தின் ஆர் வலி உடைய கடிமதில் அரணம் மூன்றும்
சினத்தினுள் சினம் ஆய் நின்று தீ எழச் செற்றார் போலும்;
தனத்தினைத் தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார்-மா மறைக்காடனாரே.

9

தேசனை, தேசன் தன்னை, தேவர்கள் போற்று இசைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்!
காசினை, கனலை, என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு
மாசினைத் தீர்ப்பர்போலும்-மா மறைக்காடனாரே.

10

பிணி உடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில்,
பணி உடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே;
துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும், தோகை அஞ்ச,
மணி முடிப்பத்து இறுத்தார்-மா மறைக்காடனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருமறைக்காடு
வ.எண் பாடல்
1

தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை,
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து
“காரிகை, அஞ்சல்!” என்பார்-கலி மறைக்காடனாரே.

2

முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர் கோனை
நக்கு இருந்து ஊன்றிச் சென்னி நாள்மதி வைத்த எந்தை;
அக்கு, அரவு, ஆமை, பூண்ட அழகனார், கருத்தினாலே;-
தெக்கு நீர்த் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே.

3

மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கு, ஒரு தேர் கடாவி,
“அகப்படுத்து!” என்று தானும் ஆண்மையால் மிக்கு, அரக்கன்
உகைத்து எடுத்தான், மலையை ஊன்றலும், அவனை ஆங்கே
நகைப்படுத்து அருளினான் ஊர்-நால் மறைக்காடுதானே.

4

அந்தரம் தேர் கடாவி, “ஆர் இவன்?” என்று சொல்லி,
உந்தினான் மாமலையை ஊன்றலும், ஒள் அரக்கன்
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார்-திரு மறைக்காடனாரே.

5

தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன் வலி உடையன் ஆகி,
கடுக்க ஓர் தேர் கடாவி, “கை இருபதுகளாலும்
எடுப்பன், நான்; என்ன பண்டம்!” என்று எடுத்தானை ஏங்க
அடுக்கவே வல்லன் ஊர் ஆம்-அணி மறைக்காடு தானே.

6

நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்,
“கோள் பிடித்து ஆர்த்த கையான், கொடியான், மா வலியன்” என்று;
நீள் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கல் உற்றான்
தோள் முடி நெரிய வைத்தார்-தொல் மறைக்காடனாரே.

7

பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன், “மா வலியன்” என்று
பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்கோனைக்
கத்தி வாய் கதற, அன்று, கால்விரல் ஊன்றியிட்டார்-
முத்து வாய்த் திரைகள் மோதும்-முது மறைக்காடனாரே.

8

பக்கமே விட்ட கையான், பாங்கு இலா மதியன் ஆகி,
புக்கனன் மா மலைக் கீழ், போதும் ஆறு அறியமாட்டான்,
மிக்க மா மதிகள் கெட்டு, வீரமும் இழந்த ஆறே
நக்கன, பூதம் எல்லாம்; நான் மறைக்காடனாரே!

9

நாண் அஞ்சு கையன் ஆகி, நல் முடி பத்தினோடு
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி,
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை, அன்று(வ்)
ஏண் அஞ்சு கைகள் செய்தார்-எழில் மறைகாடனாரே.

10

கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊட,
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான், மலையை,
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட,
அம் கை வாள் அருளினான் ஊர்- அணி மறைக்காடுதானே.