பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தண்டி அடிகள் திரு ஆரூர்ப் பிறக்கும் பெருமைத் தவம் உடையார் அண்ட வாணர் மறை பாட ஆடும் செம் பொன் கழல் மனத்துக் கொண்ட கருத்தின் அக நோக்கும் குறிப்பே அன்றிப் புற நோக்கும் கண்ட உணர்வு துறந்தார் போல் பிறந்த பொழுதே கண் காணார்.
காணும் கண்ணால் காண்பது மெய்த் தொண்டே ஆன கருத்து உடையார் பேணும் செல்வத் திருவாரூர்ப் பெருமான் அடிகள் திரு அடிக்கே பூணும் அன்பினால் பரவிப் போற்றும் நிலைமை புரிந்து அமரர் சேணும் அறிய அரியதிருத் தொண்டின் செறியச் சிறந்து உள்ளார்.
பூஆர் சடிலத் திருமுடியார் மகிழ்ந்த செல்வப் பூங்கோயில் தேவ ஆசிரியன் முன் இறைஞ்சி வலம் செய்வாராய்ச் செம்மை புரி நாவால் இன்பம் உறும் காதல் நமச்சிவாய நல்பதமே ஓவா அன்பில் எடுத்து ஓதி ஒரு நாள் போல வரும் நாளில்.
செங் கண் விடையார் திருக்கோயில் குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தால் குறைபாடு எய்துதலால் அங்கு அந் நிலைமை தனைத் தண்டி அடிகள் அறிந்தே ஆதரவால் இங்கு நான் இக் குளம் பெருகக் கல்ல வேண்டும் என்று எழுந்தார்.
குழி வாய் அதனில் குறி நட்டுக் கட்டும் கயிறு குளக் குலையின் இழிவாய்ப் புறத்து நடுத் தறியோடு இசையக் கட்டி இடை தடவி, வழியால் வந்து மண் கல்லி எடுத்து மறித்தும் தடவிப் போய் ஒழியா முயற்சியால் உய்த்தார்; ஓதும் எழுத்து அஞ்சுஉடன் உய்ப்பார்.
நண்ணிநாளும் நல்தொண்டர் நயந்த விருப்பால் மிகப் பெருகி அண்ணல் தீர்த்தக் குளம் கல்லக் கண்ட அமணர் பொறார் ஆகி, எண்ணித் தண்டி அடிகள் பால் எய்தி முன் நின்று இயம்புவார் மண்ணைக் கல்லில் பிராணி படும் வருத்த வேண்டாம் என்று உரைத்தார்.
மாசு சேர்ந்த முடை உடலார் மாற்றம் கேட்டு மறு மாற்றம் தேசு பெருகும் திருத் தொண்டர் செப்புகின்றார் திரு இலிகாள் பூசு நீறு சாந்தம் எனப் புனைந்த பிரானுக்கு ஆன பணி ஆசு இலா நல் அறம் ஆவது அறிய வருமோ ? உமக்கு என்றார்.
அந்தம் இல்லா அறிவு உடையார் உரைப்பக் கேட்ட அறிவு இல்லார் சிந்தித்து இந்த அறம் கேளாய் செவியும் இழந்தாயோ ? என்ன, மந்த உணர்வும் விழிக்குருடும் கேளாச் செவியும் மற்று உமக்கே இந்த உலகத்து உள்ளன என்று அன்பர் பின்னும் இயம்புவார்.
வில்லால் எயில் மூன்று எரித்தபிரான் விரைஆர் கமலச் சேவடிகள் அல்லால் வேறுகாணேன் யான்; அதுநீர் அறிதற்கு ஆர் ? என்பார்; நில்லா நிலையீர்! உணர்வு இன்றி நும் கண் குருடாய் என் கண் உலகு எல்லாம் காண்பான் யான் கண்டால் என் செய்வீர் ? என்று எடுத்து உரைத்தார்.
அருகர் அது கேட்டு உன் தயெ்வத்து அருளால் கண் நீ பெற்றாய் ஏல் பெருகும் இவ்வூரினில் நாங்கள் பின்னை இருக்கிலோம் என்று, கருகு முருட்டுக் கைகளால் கொட்டை வாங்கிக் கருத்தின் வழித் தருகைக் கயிறும் தறியும் உடன் பறித்தார் தங்கள் தலை பறித்தார்.
வெய்ய தொழிலார் செய்கையின் மேல் வெகுண்ட தண்டி அடிகள்தாம் மைகொள் கண்டர் பூங்கோயில் மணிவாயிலின் முன் வந்து இறைஞ்சி ஐயனே! இன்று அமணர்கள் தாம் என்னை அவமானம் செய்ய நைவது ஆனேன்; இது தீர நல்கும் அடியேற்கு என வீழ்ந்தார்.
பழுது தீர்ப்பார் திருத் தொண்டர் பரவி விண்ணப்பம் செய்து தொழுது போந்து மடம் புகுந்து தூய பணி செய்யப் பெறாது அழுது கங்குல் அவர் துயிலக் கனவில் அகில லோகங்கள் முழுதும் அளித்த முதல்வனார் முன் நின்று அருளிச் செய்கின்றார்.
நெஞ்சில் மருவும் கவலையினை ஒழி நீ! நின் கண் விழித்து அந்த வஞ்ச அமணர் தம் கண்கள் மறையுமாறு காண்கின்றாய் அஞ்ச வேண்டாம் என்று அருளி அவர் பால் நீங்கி, அவ் இரவே துஞ்சும் இருளில் அரசன் பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார்
தண்டி நமக்குக் குளம் கல்லக் கண்ட அமணர் தரியார் ஆய் மிண்டு செய்து பணிவிலக்க வெகுண்டான்; அவன்பால் நீ மேவிக் கொண்ட குறிப்பால் அவன் கருத்தை முடிப்பாய் என்று கொள அருளித் தொண்டர் இடுக்கண் நீங்க எழுந்து அருளினார் அத்தொழில் உவப்பார்.
வேந்தன் அது கண்டு அப்பொழுதே விழித்து மெய்யின் மயிர் முகிழ்ப்பப் பூந் தண் கொன்றை வேய்ந்தவரைப் போற்றிப் புலரத் தொண்டர்பால் சார்ந்து புகுந்த படி விளம்பத் தம்பிரானார் அருள் நினைந்தே ஏய்ந்த மன்னன் கேட்ப இது புகுந்த வண்ணம் இயம்புவார்.
மன்ன! கேள் யான் மழவிடையார் மகிழும் தீர்த்தக் குளம் கல்லத் துன்னும் அமணர் அங்கு அணைந்து ஈது அறம் அன்று என்று பல சொல்லிப் பின்னும் கயிறு தடவுதற்கு யான் பிணித்த தறிகள் அவை வாங்கி என்னை வலிசெய்து யான் கல்லும் கொட்டைப் பறித்தார் என்று இயம்பி.
அந்தன் ஆன உனக்கு அறிவும் இல்லை என்றார் யான் அதனுக்கு எந்தை பெருமான் அருளால் யான் விழிக்கில் என் செய்வீர் ? என்ன, இந்த ஊரில் இருக்கிலோம் என்றே ஒட்டினார் இதுமேல் வந்தவாறு கண்டு இந்த வழக்கை முடிப்பது என மொழிந்தார்.
அருகர் தம்மை அரசனும் அங்கு அழைத்துக் கேட்க அதற்கு இசைந்தார் மருவும் தொண்டர் முன்போக மன்னன் பின்போய் மலர்வாவி அருகு நின்று விறல் தண்டி அடிகள் தம்மை முகம் நோக்கிப் பெரும் தவத்தீர்! கண் அருளால் பெறுமா காட்டும் எனப் பெரியோர்.
ஏய்ந்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்று என் கண் பெற்று வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண் இழப்பார் ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவது என்றே அஞ்சு எழுத்தை வாய்ந்த தொண்டர் எடுத்து ஓதி மணிநீர் வாவி மூழ்கினார்.
தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர்க்கண் பெற்று எழுந்தார்; பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண்பூமாரி; இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாறக் கண்டு, பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றார்.
தண்டி யடிகள் தம்முடனே ஒட்டிக் கெட்ட சமண் குண்டர் அண்டர் போற்றும் திருவாரூர் நின்றும் அகன்று போய்க் கழியக் கண்ட அமணர் தமை எங்கும் காணா வண்ணம் துரக்க என மண்டி வயவர் சாடுதலும் கண்கள் காணார் மனம் கலங்கி.
குழியில் விழுவார்; நிலை தளர்வார்; கோலும் இல்லை என உரைப்பார்; வழி ஈது என்று தூறு அடைவார்; மாண்டோம் என்பார்; மதி-கெட்டீர்! அழியும் பொருளை வட்டித்து இங்கு அழிந்தோம் என்பார்;அரசனுக்குப் பழி ஈது ஆமோ ? என்று உரைப்பார்; பாய்கள் இழப்பார்;பறிதலையார்.
பீலி தடவிக் காணாது பெயர்வார்; நின்று பேதுறுவார்; காலினோடு கை முறியக் கல் மேல் இடறி வீழ்வார்கள்; சால நெருங்கி எதிர் எதிரே தம்மில் தாமே முட்டிடுவார்; மாலும் மனமும் அழிந்து ஓடி, வழிகள் அறியார்; மயங்குவார்.
அன்ன வண்ணம் ஆரூரில் அமணர் கலக்கம் கண்டவர் தாம் சொன்ன வண்ணமே அவரை ஓடத் தொடர்ந்து துரந்து அதன்பின் பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளம் சூழ் கரைபடுத்து மன்னன்அவனும் மனம் மகிழ்ந்து வந்து தொண்டர் அடி பணிந்தான்.
மன்னன் வணங்கிப் போயின பின் மாலும் அயனும் அறியாத பொன் அங்கழல்கள் போற்றி இசைத்துப் புரிந்த பணியும் குறை முடித்தே உன்னும் மனத்தால் அஞ்சு எழுத்தும் ஓதி வழுவாது ஒழுகியே, மின்னும் சடையார் அடி நீழல் மிக்க சிறப்பின் மேவினார்.
கண்ணின் மணிகள் அவை இன்றிக் கயிறு தடவிக் குளம்தொட்ட எண்ணில் பெருமைத் திருத் தொண்டர் பாதம் இறைஞ்சி இடர் நீங்கி, விண்ணில் வாழ்வார் தாம் வேண்டப் புரங்கள் வெகுண்டார் வேல் காட்டூர் உள் நிலாவும் புகழ்த் தொண்டர் மூர்க்கர் செய்கை உரைக்கின்றாம்.