பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்புகலூர்
வ.எண் பாடல்
1

செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும்
கையர்; கனைகழல் கட்டிய காலினர்;
மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும்
பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே.

2

மேக நல் ஊர்தியர், மின் போல் மிளிர்சடைப்
பாகமதி நுதலாளை ஒர் பாகத்தர்,
நாக வளையினர், நாக உடையினர்
போகர்-புகலூர்ப் புரிசடையாரே.

3

பெருந் தாழ் சடை முடி மேல் பிறை சூடி,
கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து,
திருந்தா மனம் உடையார் திறத்து என்றும்
பொருந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

4

அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர், நாகத்தர்
நக்கு ஆர் இளமதிக் கண்ணியர், நாள்தொறும்
உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர் தொறும்
புக்கார்-புகலூர்ப் புரிசடையாரே.

5

ஆர்த்து ஆர் உயிர் அடும் அந்தகன் தன் உடல்
பேர்த்தார், பிறைநுதல் பெண்ணின் நல்லாள் உட்கக்
கூர்த்து ஆர் மருப்பின் கொலைக் களிற்று ஈர் உரி
போர்த்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

6

தூ மன் சுறவம் துதைந்த கொடி உடைக்
காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர்,
சேம நெறியினர்; சீரை உடையவர்
பூ மன் புகலூர்ப் புரிசடையாரே.

7

உதைத்தார், மறலி உருள ஓர் காலால்;
சிதைத்தார், திகழ் தக்கன் செய்த நல் வேள்வி;
பதைத்தார் சிரம் கரம் கொண்டு, வெய்யோன் கண்
புதைத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

8

கரிந்தார் தலையர்; கடி மதில் மூன்றும்,
தெரிந்தார், கண்கள், செழுந் தழல் உண்ண;
விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை
புரிந்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

9

ஈண்டு ஆர் அழலின், இருவரும் கைதொழ,
நீண்டார், நெடுந் தடுமாற்ற நிலை அஞ்ச;
மாண்டார் தம் என்பும் மலர்க் கொன்றை மாலையும்
பூண்டார்-புகலூர்ப் புரிசடையாரே.

10

கறுத்தார், மணிகண்டம் கால்விரல் ஊன்றி
இறுத்தார், இலங்கையர் கோன் முடிபத்தும்,
அறுத்தார், புலன் ஐந்தும்; ஆயிழை பாகம்
பொறுத்தார்-புகலூர்ப் புரிசடையாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்புகலூர்
வ.எண் பாடல்
1

பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, நீறு ஆகி வீழ,
புகைத்திட்ட தேவர் கோவே! பொறி இலேன் உடலம் தன்னுள்
அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடித்
திகைத்திட்டேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

2

மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டுக்
கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினைய மாட்டேன்;
ஐ நெரிந்து அகமிடற்றே அடைக்கும் போது, ஆவியார் தாம்
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!

3

முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை,
அப்பர் போல் ஐவர் வந்து(வ்), “அது தருக, இது விடு!” என்று(வ்)
ஒப்பவே நலியல் உற்றால் உய்யும் ஆறு அறிய மாட்டேன்-
செப்பமே திகழும் மேனித் திருப் புகலூரனீரே!

4

பொறி இலா அழுக்கை ஓம்பி, பொய்யினை மெய் என்று எண்ணி,
நெறி அலா நெறிகள் சென்றேன்; நீதனே! நீதி ஏதும்
அறிவிலேன்; அமரர்கோவே! அமுதினை மன்னில் வைக்கும்
செறிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

5

அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி,
களியின் ஆர் பாடல் ஓவாக் கடவூர் வீரட்டம் என்னும்
தளியினார் பாதம் நாளும் நினைவு இலாத் தகவு இல் நெஞ்சம்
தெளிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

6

இலவின் நா மாதர் பாலே இசைந்து நான் இருந்து பின்னும்
நிலவும் நாள் பல என்று எண்ணி, நீதனேன் ஆதி உன்னை
உலவினால் உள்க மாட்டேன்; உன் அடி பரவும் ஞானம்
செலவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே!

7

காத்திலேன், இரண்டும் மூன்றும்; கல்வியேல் இல்லை, என்பால்;
வாய்த்திலேன், அடிமை தன்னுள்; வாய்மையால் தூயேன் அல்லேன்-
பார்த்தனுக்கு அருள்கள் செய்த பரமனே! பரவுவார்கள்
தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப் புகலூரனீரே!

8

நீரும் ஆய், தீயும் ஆகி, நிலனும் ஆய், விசும்பும் ஆகி,
ஏர் உடைக் கதிர்கள் ஆகி, இமையவர் இறைஞ்ச நின்று(வ்),
ஆய்வதற்கு அரியர் ஆகி, அங்கு அங்கே ஆடுகின்ற,
தேவர்க்கும் தேவர் ஆவார்-திருப் புகலூரனாரே.

9

மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு உயரத் தூண்டி
உய்வது ஓர் உபாயம் பற்றி, உகக்கின்றேன்; உகவா வண்ணம்
ஐவரை அகத்தே வைத்தீர்; அவர்களே வலியர், சால;
செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே!

10

அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும்,
இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன்
கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத்
திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்புகலூர்
வ.எண் பாடல்
1

தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்; தன் அடி அடைய,
புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோ!
என்னைப் பிறப்பு அறுத்து, என் வினை கட்டு அறுத்து, ஏழ் நரகத்து
என்னைக் கிடக்கல் ஒட்டான், சிவலோகத்து இருத்திடுமே.

2

பொன்னை வகுத்தன்ன மேனியனே! புணர் மென் முலையாள்
தன்னை வகுத்தன்ன பாகத்தனே, தமியேற்கு இரங்காய்!
புன்னை மலர்த்தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே!
என்னை வகுத்திலையேல், இடும்பைக்கு இடம் யாது? சொல்லே!

3

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

4

பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய்! புகலூர்க்கு அரசே!
மன் உள தேவர்கள் தேடும் மருந்தே! வலஞ்சுழியாய்!-
என் அளவே, உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்!
உன் அளவே, எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே

5

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

6

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

ஓணப் பிரானும், ஒளிர் மா மலர்மிசை உத்தமனும்,
காணப் பராவியும் காண்கின்றிலர்; கரம் நால்-ஐந்து உடைத்
தோள் நப்பிரானை வலி தொலைத்தோன், தொல்லைநீர்ப் புகலூர்க்
கோணப்பிரானைக் குறுக, குறுகா, கொடுவினையே.