பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்பழனம்
வ.எண் பாடல்
1

சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள்! சொல்லீரே-
பல் மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான்,
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடிச் சென்னிப்
பொன் மாலை மார்பன்(ன்), என புது நலம் உண்டு இகழ்வானோ?

2

கண்டகங்காள்! முண்டகங்காள்! கைதைகாள்! நெய்தல்காள
பண்டரங்க வேடத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான்,
வண்டு உலா(அ)ம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர்வண்ணம்
கொண்ட(ந்)நாள் தான் அறிவான், குறிக் கொள்ளா தொழிவானோ?

3

மனைக் காஞ்சி இளங் குருகே! மறந்தாயோ?-மத முகத்த
பனைக்கை மா உரி போர்த்தான், பலர் பாடும் பழனத்தான்,
நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ, நிகழ் வண்டே?-
சுனைக்கு வளைமலர்க்கண்ணாள் சொல்-தூது ஆய்ச் சோர்வார்

4

புதியை ஆய் இனியை ஆம் பூந் தென்றல்!” புறங்காடு
பதி ஆவது இது” என்று பலர் பாடும் பழனத்தான்,
மதியா தார் வேள்வி தனை மதித்திட்ட மதி கங்கை
விதியாளன், என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ?

5

மண் பொருந்தி வாழ்பவர்க்கும், மா தீர்த்த வேதியர்க்கும்,
விண் பொருந்து தேவர்க்கும், வீடு பேறு ஆய் நின்றானை;
பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை, என்
கண் பொருந்தும் போழ் தத்தும், கைவிட நான் கடவேனோ?

6

பொங்கு ஓதமால் கடலில் புறம் புறம் போய் இரை தேரும்
செங்கால் வெண் மட நாராய்! செயல் படுவது அறியேன், நான்!
அம் கோல வளை கவர்ந்தான், அணி பொழில் சூழ் பழனத்தான்,
தம் கோல நறுங்கொன்றைத்தார் அருளா தொழி வானோ?

7

துணை ஆர முயங்கிப் போய்த் துறை சேரும் மடநாராய்!
பணை ஆரவாரத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான்,
கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடி செய்த
இணை ஆர மார்பன்(ன்) என் எழில் நலம் உண்டு இகழ்வானோ?

8

கூவைவாய் மணி வரன்றிக் கொழித்து ஓடும் காவிரிப்பூம்-
பாவை வாய் முத்து இலங்கப் பாய்ந்து ஆடும் பழனத்தான்,
கோவைவாய் மலைமகள் கோன், கொல் ஏற்றின் கொடி ஆடைப்
பூவைகாள்! மழலைகாள்! போகாத பொழுது உளதே?

9

“புள்ளிமான் பொறி அரவம், புள் உயர்த்தான் மணி நாகப்-
பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான்
உள்ரூவார் வினை தீர்க்கும்” என்று உரைப்பர், உலகு எல்லாம்;
கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ?

10

வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும்,
பஞ்சிக்கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான்
அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி
குஞ்சிப் பூ ஆய் நின்ற சேவடியாய்!-கோடு இயையே!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்பழனம்
வ.எண் பாடல்
1

ஆடினார் ஒருவர் போலும்; அலர் கமழ் குழலினாளைக்
கூடினார் ஒருவர் போலும்; குளிர்புனல், வளைந்த திங்கள்
சூடினார் ஒருவர் போலும்; தூய நல்மறைகள் நான்கும்
பாடினார் ஒருவர் போலும்;-பழனத்து எம் பரமனாரே.

2

போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;-நான்
வேவது ஓர் வினையில் பட்டு வெம்மை தான் விடவும் கில்லேன்;
கூவல்தான் அவர்கள் கேளார்-குணம் இலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்-பழனத்து எம் பரமனாரே.

3

கண்டராய், முண்டர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி,
தொண்டர்கள் பாடி ஆடித் தொழு கழல் பரமனார்தாம்
விண்டவர் புரங்கள் எய்த வேதியர்; வேத நாவர்
பண்டை என் வினைகள் தீர்ப்பார்-பழனத்து எம் பரமனாரே

4

நீர் அவன்; தீயினோடு நிழல் அவன்; எழிலது ஆய
பார் அவன்; விண்ணின் மிக்க பரம் அவன்; பரமயோகி;
ஆரவன்; அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகிப்
பார் அகத்து அமுதம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

5

ஊழியார்; ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப்
பாழியார்; பாவம் தீர்க்கும் பராபரர்; பரம் அது ஆய,
ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்ப(அ) ரீய,
பாழியார்-பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே.

6

ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து
நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகி நின்று,
காலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத் தான் பாய்ந்து, பின்னும்
பாலின் கீழ் நெய்யும் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

7

ஆதித்தன், அங்கி, சோமன், அயனொடு, மால், புத(ன்)னும்,
போதித்து நின்று உல(ஃ)கில் போற்று இசைத்தார்; இவர்கள்
சோதித்தார்; ஏழு உல(ஃ)கும் சோதியுள்சோதி ஆகிப்
பாதிப் பெண் உருவம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே.

8

கால்-தனால் காலற் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர்
தோற்றனார், கடலுள் நஞ்சை; தோடு உடைக் காதர்; சோதி
ஏற்றினார் இளவெண்திங்கள், இரும் பொழில் சூழ்ந்த காயம்;
பாற்றினார், வினைகள் எல்லாம்;-பழனத்து எம் பரமனாரே.

9

கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே
எண்ணியும் துதித்தும் ஏத்த, எரி உரு ஆகி நின்று,
வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண் உலாம் பாடல் கேட்டார்-பழனத்து எம் பரமனாரே.

10

குடை உடை அரக்கன் சென்று, குளிர் கயிலாய வெற்பின்
இடை மட வரலை அஞ்ச, எடுத்தலும், இறைவன் நோக்கி
விடை உடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி மீண்டும்
படை கொடை அடிகள்போலும்- பழனத்து எம் பரமனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருப்பழனம்
வ.எண் பாடல்
1

மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் துக்கம் எல்லாம்;
ஆவித்து நின்று கழிந்தன, அல்லல்; அவை அறுப்பான்
பாவித்த பாவனை நீ அறிவாய்;-பழனத்து அரசே!-
கூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வதே!

2

சுற்றி நின்றார்; புறம் காவல் அமரர்; கடைத் தலையில்
மற்று நின்றார்; திருமாலொடு நான்முகன் வந்து அடிக்கீழ்ப்
பற்றி நின்றார், -பழனத்து அரசே!-உன் பணி அறிவான்
உற்று நின்றார்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

3

ஆடி நின்றாய், அண்டம் ஏழும் கடந்து போய்; மேல் அவையும்
கூடி நின்றாய்; குவிமென் முலையாளையும் கொண்டு உடனே-
பாடி நின்றாய்;-பழனத்து அரசே!-அங்கு ஓர் பால் மதியம்
சூடி நின்றாய்; அடியேனை அஞ்சாமைக் குறிக்கொள்வதே!

4

எரித்து விட்டாய், அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும்;
உரித்து விட்டாய், உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை;
பரித்து விட்டாய்,-பழனத்து அரசே!-கங்கை வார் சடை மேல்-
தரித்து விட்டாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

5

முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும்(ம்) உடனே-
மன்னியும், அங்கும் இருந்தனை; மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசு அறிவாய்;-பழனத்து அரசே!
உன்னியும் உன் அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

6

ஏய்ந்து அறுத்தாய், இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை;
காய்ந்து அறுத்தாய், கண்ணினால் அன்று காமனை; காலனையும்
பாய்ந்து அறுத்தாய்;-பழனத்து அரசே!-என் பழவினை நோய்
ஆய்ந்து அறுத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

7

மற்று வைத்தாய், அங்கு ஓர் மால் ஒரு பாகம்; மகிழ்ந்து உடனே-
உற்று வைத்தாய், உமையாளொடும் கூடும் பரிசு எனவே;
பற்றி வைத்தாய்,-பழனத்து அரசே!-அங்கு ஓர் பாம்பு ஒரு கை
சுற்றி வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

8

ஊரின் நின்றாய், ஒன்றி நின்று; விண்டாரையும் ஒள் அழலால்
போரில் நின்றாய்; பொறையால் உயிர்-ஆவி சுமந்து கொண்டு
பாரில் நின்றாய்;-பழனத்து அரசே!-பணி செய்பவர்கட்கு
ஆர நின்றாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

9

போகம் வைத்தாய், புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை;
ஆகம் வைத்தாய், மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே
பாகம் வைத்தாய்;-பழனத்து அரசே!-உன் பணி அருளால்
ஆகம் வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!

10

அடுத்து இருந்தாய், அரக்கன் முடி வாயொடு தோள் நெரியக்
கெடுத்து இருந்தாய்; கிளர்ந்தார் வலியைக் கிளையோடு உடனே-
படுத்திருந்தாய்;-பழனத்து அரசே!-புலியின்(ன்) உரி-தோல்
உடுத்திருந்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே!