கையில் விளங்கும் கனல் உடையார் தமக்கு விளக்கு மிகை காணும்
நெய் இங்கு இல்லை; விளக்கு எரிப்பீர் ஆகில் நீரை முகந்து எரித்தல்
செய்யும் என்று திருத் தொண்டர்க்கு உரைத்தார்; தெளியாது ஒரு பொருளே
பொய்யும் மெய்யும் ஆம் என்னும் பொருள்மேல் கொள்ளும் புரை நெறியார்.