பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவீழிமிழலை
வ.எண் பாடல்
1

கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர் கேடு இலா
வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார்,
வாழியர்; தோற்றமும் கேடும் வைப்பார், உயிர்கட்கு எலாம்;
ஆழியர்; தம் அடி “போற்றி!” என்பார்கட்கு அணியரே.

2

கல்லின் நன்பாவை ஓர் பாகத்தார், காதலித்து ஏத்திய
மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார்;
நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து, எழு ஞாயிற்றின்
பல் அனைத்தும் தகர்த்தார், அடியார் பாவநாசரே.

3

நஞ்சினை உண்டு இருள் கண்டர், பண்டு அந்தகனைச் செற்ற
வெஞ்சின மூஇலைச்சூலத்தர் வீழிமிழலையார்;
அஞ்சனக் கண் உமை பங்கினர், கங்கை அங்கு ஆடிய
மஞ்சனச் செஞ்சடையார்” என, வல்வினை மாயுமே.

4

கலை, இலங்கும் மழு, கட்டங்கம், கண்டிகை, குண்டலம்,
விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார்
தலை இலங்கும் பிறை; தாழ்வடம், சூலம், தமருகம்,
அலை இலங்கும் புனல், ஏற்றவர்க்கும்(ம்)
அடியார்க்குமே.

5

பிறை உறு செஞ்சடையார், விடையார் பிச்சை நச்சியே
வெறி உறு நாள்பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார்;
முறைமுறையால் இசை பாடுவார், ஆடி, முன்; தொண்டர்கள்-
இறை; உறை வாஞ்சியம் அல்லது, எப்போதும் என்
உள்ளமே.

6

வசை அறு மா தவம் கண்டு, வரிசிலை வேடனாய்,
விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார்;
இசை வரவிட்டு, இயல் கேட்பித்து, கல்லவடம் இட்டு,
திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே.

7

சேடர் விண்ணோர்கட்கு, தேவர், நல் மூஇருதொல்-நூலர்,
வீடர், முத்தீயர், நால்வேதத்தர் வீழிமிழலையார்;
காடு அரங்கா, உமை காண, அண்டத்து இமையோர் தொழ,
நாடகம் ஆடியை ஏத்த வல்லார் வினை நாசமே.

8

எடுத்த வல் மாமலைக்கீழ் இராவணன் வீழ்தர,
விடுத்து அருள்செய்து, இசை கேட்டவர் வீழிமிழலையார்;
படுத்து வெங்காலனை, பால் வழிபாடு செய் பாலற்குக்
கொடுத்தனர், இன்பம், கொடுப்பர், தொழ; குறைவு
இல்லையே.

9

திக்கு அமர் நான்முகன், மால், அண்டம் மண்தலம் தேடிட,
மிக்கு அமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார்;
சொக்கம் அது ஆடியும், பாடியும், பாரிடம் சூழ்தரும்
நக்கர்தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே.

10

துற்று அரை ஆர் துவர் ஆடையர், துப்புரவு ஒன்று இலா
வெற்று அரையார், அறியா நெறி வீழிமிழலையார்-
சொல்-தெரியாப் பொருள், சோதிக்கு அப்பால் நின்ற
சோதிதான்-
மற்று அறியா அடியார்கள் தம் சிந்தையுள் மன்னுமே.

11

வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய
ஆதியை, வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து,
ஓதிய ஒண்தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர்,
மாது இயல் பங்கன் மலர் அடி சேரவும் வல்லரே

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவீழிமிழலை - திருவிராகம்
வ.எண் பாடல்
1

சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள்
பணிய,
தார் மருவு கொன்றை அணி தாழ்சடையினான் அமர் சயம்
கொள் பதிதான்-
பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட, அருகே
கார் மருவு வெண்களப மாளிகை கவின் பெருகு
வீழிநகரே.

2

பட்ட முழவு, இட்ட பணிலத்தினொடு, பல்மறைகள் ஓது பணி
நல்
சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய, அருள் செய் தழல் கொள்
மேனியவன் ஊர்
மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர், மன்னு
பொழில்வாய்
விட்டு உலவு தென்றல் விரை நாறு, பதி வேதியர்கள்
வீழிநகரே.

3

மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்
உயிர்களுக்கு
எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த, எழில் ஆர் பொழில்
இலங்கு அறுபதம்
பண் இழிவு இலாத வகை பாட, மடமஞ்ஞை நடம் ஆட,
அழகு ஆர்
விண் இழி விமானம் உடை விண்ணவர் பிரான் மருவு
வீழிநகரே.

4

செந்தமிழர், தெய்வமறை நாவர், செழு நன்கலை தெரிந்த
அவரோடு
அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற
அரன் ஊர்
கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர்-தண்புனல் வளம்
பெருகவே,
வெந் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி
வீழிநகரே.

5

பூதபதி ஆகிய புராணமுனி புண்ணிய நல்மாதை மருவி,
பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது
இடம் ஆம்
மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி
அதனால்,
ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில்
வீழிநகரே.

6

மண்ணில் மறையோர் மருவு வைதிகமும், மா தவமும், மற்றும்
உலகத்து
எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள்
பெருமானது இடம் ஆம்
நண்ணி வரு நாவலர்கள் நாள்தொறும் வளர்க்க நிகழ்கின்ற
புகழ் சேர்
விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை
வீழிநகரே.

7

மந்திர நல்மாமறையினோடு வளர் வேள்விமிசை மிக்க புகை
போய்,
அந்தர-விசும்பு அணவி, அற்புதம் எனப் படரும் ஆழி
இருள்வாய்,
மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய்,
வெந்தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே.

8

ஆன வலியின் தசமுகன் தலை அரங்க, அணி ஆழிவிரலால்,
ஊன் அமர் உயர்ந்த குருதிப்புனலில் வீழ்தர உணர்ந்த பரன்
ஊர்
தேன் அமர் திருந்து பொழில், செங்கனக மாளிகை, திகழ்ந்த
மதிலோடு
ஆன திரு உற்று வளர், அந்தணர் நிறைந்த அணி
வீழிநகரே.

9

ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும், எழில் அன்ன
உருவம்
ஆனவனும், ஆதியினொடு அந்தம் அறியாத அழல்மேனியவன்
ஊர்
வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம்
கொள் பொழில்வாய்
வேனல் அமர்வு எய்திட, விளங்கு ஒளியின் மிக்க புகழ்
வீழிநகரே.

10

குண்டு அமணர் ஆகி, ஒரு கோலம் மிகு பீலியொடு
குண்டிகை பிடித்து
எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர்; அது
என்ன பொருள் ஆம்?
பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு
பதி சீா
வெண்தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில்
வீழிநகரே.

11

மத்தம் மலி கொன்றை வளர் வார்சடையில் வைத்த பரன்,
வீழிநகர் சேர்
வித்தகனை, வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள்
வலார்
சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி,
அத்தகு குணத்தவர்கள் ஆகி, அனுபோகமொடு யோகு
அவரதே.

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவீழிமிழலை - திருவிராகம்
வ.எண் பாடல்
1

மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரிகுழல் மடவரல்
பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா,
கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடிமிசை
விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே.

2

எண் நிற வரி வளை, நெறிகுழல், எழில் மொழி, இளமுலைப்
பெண் உறும் உடலினர்; பெருகிய கடல்விடம் மிடறினர்;
கண் உறு நுதலினர்; கடியது ஒர் விடையினர்; கனலினர்
விண் உறு பிறை அணி சடையினர்; பதி விழிமிழலையே.

3

மைத் தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா
வைத்தவர், மதகரி உரிவை செய்தவர், தமை மருவினார்
தெத்தென இசை முரல் சரிதையர், திகழ்தரும் அரவினர்
வித்தக நகுதலை உடையவர், இடம் விழிமிழலையே.

4

செவ் அழல் என நனி பெருகிய உருவினர், செறிதரு
கவ்வு அழல் அரவினர்; கதிர் முதிர் மழுவினர்; தொழு இலா
முவ் அழல் நிசிசரர் விறல் அவை அழிதர, முது மதில்
வெவ் அழல் கொள, நனி முனிபவர்; பதி விழிமிழலையே.

5

பைங்கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர்; பலி எனா
எங்கணும் உழிதர்வர்; இமையவர் தொழுது எழும் இயல்பினர்;
அங்கணர்; அமரர்கள் அடி இணை தொழுது எழ, ஆரமா
வெங் கண அரவினர்; உறைதரு பதி விழிமிழலையே.

6

பொன் அன புரிதரு சடையினர், பொடி அணி வடிவினர்
உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார்
தென்னென இசை முரல் சரிதையர், திகழ்தரும் மார்பினில்
மின் என மிளிர்வது ஒர் அரவினர், பதி விழிமிழலையே.

7

அக்கினொடு, அரவு, அரை அணி திகழ் ஒளியது
ஒர் ஆமை, பூண்டு
இக்கு உக, மலி தலை கலன் என இடு பலி ஏகுவர்;
கொக்கரை, குழல், முழ, விழவொடும் இசைவது ஒர் சரிதையர்
மிக்கவர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே.

8

பாதம் ஒர்விரல் உற, மலை அடர் பலதலை நெரிதர,
பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர்;
ஓதமொடு ஒலிதிரை படு கடல் விடம் உடை மிடறினர்
வேதமொடு உறு தொழில் மதியவர்; பதி விழிமிழலையே.

9

நீர் அணி மலர் மிசை உறைபவன், நிறை கடல் உறு துயில்
நாரணன், என இவர் இருவரும் நறுமலர் அடி முடி
ஓர் உணர்வினர் செலல் உறல் அரும் உருவினொடு ஒளி
திகழ்
வீர(அ)ணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே.

10

இச்சையர், இனிது என இடு பலி; படுதலை மகிழ்வது ஒர்
பிச்சையர்; பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு
இலர்
மொச்சைய அமணரும், முடை படு துகிலரும், அழிவது ஒர்
விச்சையர்; உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே.

11

உன்னிய அருமறை ஒலியினை முறை மிகு பாடல்செய்
இன் இசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை,
மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண்தமிழ்
சொன்னவர் துயர் இலர்; வியன் உலகு உறு கதி பெறுவரே.

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவீழிமிழலை - திருமுக்கால்
வ.எண் பாடல்
1

வெண்மதி தவழ் மதில் மிழலை உளீர், சடை
ஒண்மதி அணி உடையீரே;
ஒண்மதி அணி உடையீர்! உமை உணர்பவர்
கண் மதி மிகுவது கடனே.

2

விதி வழி மறையவர் மிழலை உளீர், நடம்
சதி வழி வருவது ஒர் சதிரே;
சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர்! உமை
அதிகுணர் புகழ்வதும் அழகே.

3

விரை மலி பொழில் அணி மிழலை உளீர், ஒரு
வரைமிசை உறைவதும் வலதே;
வரைமிசை உறைவது ஒர் வலது உடையீர்! உமை
உரை செயுமவை மறை ஒலியே.

4

விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர், கையில்
இட்டு எழில் பெறுகிறது எரியே;
இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர்! புரம்
அட்டது வரை சிலையாலே.

5

வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர், நல
பால் நிகர் உரு உடையீரே;
பால் நிகர் உரு உடையீர்! உமது உடன் உமை
தான் மிக உறைவது தவமே.

6

விரை மலி பொழில் அணி மிழலை உளீர், செனி
நிரை உற அணிவது நெறியே;
நிரை உற அணிவது ஒர் நெறி உடையீர்! உமது
அரை உற அணிவன, அரவே.

7

விசை உறு புனல் வயல் மிழலை உளீர், அரவு
அசைவு உற அணிவு உடையீரே;
அசைவு உற அணிவு உடையீர்! உமை அறிபவர்
நசை உறும் நாவினர் தாமே.

8

விலங்கல் ஒண்மதில் அணி மிழலை உளீர், அன்று
இலங்கை மன் இடர் கெடுத்தீரே;
இலங்கை மன் இடர் கெடுத்தீர்! உமை ஏத்துவார்
புலன்களை முனிவது பொருளே

9

வெற்பு அமர் பொழில் அணி மிழலை உளீர், உமை
அற்புதன் அயன் அறியானே;
அற்புதன் அயன் அறியா வகை நின்றவன்
நல் பதம் அறிவது நயமே.

10

வித்தக மறையவர் மிழலை உளீர், அன்று
புத்தரொடு அமண் அழித்தீரே;
புத்தரொடு அமண் அழித்தீர்! உமைப் போற்றுவார்
பத்தி செய் மனம் உடையவரே.

11

விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை,
சண்பையுள் ஞானசம்பந்தன்
சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை,
ஒண் பொருள் உணர்வதும் உணர்வே.

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவீழிமிழலை - ஈரடி
வ.எண் பாடல்
1

வேலின் நேர்தரு கண்ணினாள் உமை பங்கன்-அங்கணன்,
மிழலை மா நகர்
ஆல நீழலில் மேவினான்-அடிக்கு அன்பர் துன்பு இலரே.

2

விளங்கும் நால்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர்
மிழலையான் அடி
உளம் கொள்வார் தமை உளம்கொள் வார் வினை ஒல்லை
ஆசு அறுமே.

3

விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன்,
மிழலை மா நகர்
இசையும் ஈசனை நசையின் மேவினால், மிசை செயா,
வினையே.

4

வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி
நாள்தொறும்,
நின்ற ஆதிதன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே.

5

போதகம் தனை உரி செய்தோன், புயல் நேர் வரும் பொழில்
மிழலை மா நகர்
ஆதரம் செய்த அடிகள், பாதம் அலால் ஒர் பற்று இலமே.

6

தக்கன் வேள்வியைச் சாடினார், மணி தொக்க மாளிகை
மிழலை மேவிய
நக்கனார், அடி தொழுவர் மேல் வினை நாள்தொறும்
கெடுமே.

7

போர் அணாவு முப்புரம் எரித்தவன், பொழில்கள் சூழ்தரு
மிழலை மா நகர்ச்
சேரும் ஈசனைச் சிந்தை செய்பவர் தீவினை கெடுமே.

8

இரக்கம் இல்-தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான்,
மிகு மிழலையான், அடி
சிரக் கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும், நீள்
புவியே.

9

துன்று பூமகன், பன்றி ஆனவன், ஒன்றும் ஓர்கிலா
மிழலையான் அடி
சென்று பூம்புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே.

10

புத்தர், கைச் சமண்பித்தர், பொய்க் குவை வைத்த வித்தகன்
மிழலை மா நகர்
சித்தம் வைத்தவர் இத் தலத்தினுள் மெய்த் தவத்தவரே.

11

சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனைச் சண்பை
ஞானசம்பந்தன் வாய் நவில்
பந்தம் ஆர் தமிழ்பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே.

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவீழிமிழலை - திருஇயமகம்
வ.எண் பாடல்
1

துன்று கொன்றை நம் சடையதே; தூய கண்டம் நஞ்சு
அடையதே;
கன்றின்மான் இடக் கையதே; கல்லின்மான் இடக்கை அதே;
என்றும் ஏறுவது இடவமே; என் இடைப் பலி இட வ(ம்)மே!
நின்றதும் மிழலையுள்ளுமே; நீர் எனைச் சிறிதும் உள்ளுமே!

2

ஓதி வாயதும் மறைகளே; உரைப்பதும் பலமறைகளே
பாதி கொண்டதும் மாதையே; பணிகின்றேன், மிகும் மாதையே;
காது சேர் கனம் குழையரே; காதலார் கனம் குழையரே;
வீதிவாய் மிகும் வேதியா; மிழலை மேவிய வேதியா!

3

பாடுகின்ற பண் தாரமே; பத்தர் அன்ன பண்டாரமே;
சூடுகின்றது மத்தமே; தொழுத என்னை உன்மத்தமே
நீடு செய்வதும் தக்கதே? நின் அரைத் திகழ்ந்தது அக்கு
அதே;
நாடு சேர் மிழலை, ஊருமே; நாகம் நஞ்சு அழலை ஊருமே.

4

கட்டுகின்ற கழல் நாகமே; காய்ந்ததும் மதனன் ஆகமே;
இட்டம் ஆவது இசை பாடலே; இசைந்த நூலின் அமர்பு
ஆடலே;
கொட்டுவான் முழவம், வாணனே; குலாய சீர் மிழலை
வாணனே!
நட்டம் ஆடுவது சந்தியே; நான் உய்தற்கு இரவு சந்தியே!

5

ஓவு இலாது இடும் கரணமே, உன்னும் என்னுடைக் கரணமே;
ஏவு சேர்வும் நின் ஆணையே; அருளில் நின்ன பொற்று
ஆணையே;
பாவியாது உரை மெய் இலே; பயின்ற நின் அடி மெய்யிலே
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே!

6

வாய்ந்த மேனி எரிவண்ணமே; மகிழ்ந்து பாடுவது வண்ணமே;
காய்ந்து வீழ்ந்தவன் காலனே; கடு நடம் செயும் காலனே;
போந்தது எம் இடை இரவிலே; உம் இடைக் கள்வம்
இரவிலே;
ஏய்ந்ததும் மிழலை என்பதே; விரும்பியே அணிவது என்பு
அதே.

7

அப்பு இயன்ற கண் அயனுமே, அமரர்கோமகனும், அயனுமே,
ஒப்பு இல் இன்று, அமரர், தருவதே, ஒண் கையால் அமரர்
தரு அதே;
மெய்ப் பயின்றவர், இருக்கையே, மிழலை ஊர் உமது
இருக்கையே;
செப்புமின்(ன்), எருது மேயுமே! சேர்வு உமக்கு எருதும்
ஏயுமே.

8

தானவக் குலம் விளக்கியே, தாரகைச் செலவு இளக்கியே,
வான் அடர்த்த கயில் ஆயமே, வந்து மேவு கயிலாயமே
தான் எடுத்த வல் அரக்கனே, தட முடித்திரள் அரக்கனே,
மேல் நடைச் செல இருப்பனே; மிழலை நன் பதி
விருப்பனே.

9

காயம் மிக்கது ஒரு பன்றியே, கலந்த நின்ன உருபு
அன்றியே,
ஏய இப் புவி மயங்கவே, இருவர்தாம் மனம் அயங்கவே,
தூய மெய்த்திரள் அகண்டனே! தோன்றி நின்ற
மணிகண்டனே!
மேய இத் துயில் விலக்கு, அ(ண்)ணா! மிழலை மேவிய
இலக்கணா!

10

கஞ்சியைக் குலவு கையரே, கலக்கம் ஆர் அமணர்கையரே,
அஞ்ச, வாதில் அருள் செய்யநீ, அணைந்திடும் பரிசு செய்ய,
நீ
வஞ்சனே! வரவும் வல்லையே, மதித்து, எனைச் சிறிதும்
வல்லையே?
வெஞ்சல் இன்றி வரு இவ் தகா மிழலை சேரும் விறல்
வித்தகா!

11

மேய செஞ்சடையின் அப்பனே! மிழலை மேவிய என்
அப்பனே!
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே!
காய வர்க்க(அ) சம்பந்தனே! காழி ஞானசம்பந்தனே
வாய் உரைத்த தமிழ்பத்துமே வல்லவர்க்கும் இவை
பத்துமே.

திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
திருவீழிமிழலை
வ.எண் பாடல்
1

“புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்; பூசு சாந்தம்
பொடி-நீறு;
கொள்ளித்தீ விளக்கு; கூளிகள் கூட்டம்; காளியைக் குணம்
செய் கூத்து உடையோன்-
அள்ளல் கார் ஆமை அகடு வான்மதியம் ஏய்க்க,
முள்-தாழைகள் ஆனை
வெள்ளைக்கொம்பு ஈனும் விரி பொழில் வீழிமிழலையான்”
என, வினை கெடுமே.

2

“இசைந்த ஆறு அடியார் இடு துவல், வானோர் இழுகு
சந்தனத்து இளங் கமலப்
பசும்பொன் வாசிகைமேல் பரப்புவாய்; கரப்பாய், பத்தி
செய்யாதவர் பக்கல்;
அசும்பு பாய் கழனி அலர் கயல் முதலோடு அடுத்து
அரிந்து எடுத்த வான் சும்மை
விசும்பு தூர்ப்பன போல் விம்மிய வீழிமிழலையான்!”
என, வினை கெடுமே.

3

“நிருத்தன், ஆறு அங்கன், நீற்றன், நால்மறையன், நீலம்
ஆர் மிடற்றன், நெற்றிக்கண்
ஒருத்தன், மற்று எல்லா உயிர்கட்கும் உயிர் ஆய் உளன்,
இலன், கேடு இலி, உமைகோன்-
திருத்தம் ஆய் நாளும் ஆடு நீர்ப் பொய்கை, சிறியவர்
அறிவினின் மிக்க
விருத்தரை அடி வீழ்ந்து இடம் புகும் வீழிமிழலையான்”
என, வினை கெடுமே.

4

“தாங்க(அ)ருங் காலம் தவிர வந்து இருவர் தம்மொடும்
கூடினார் அங்கம்
பாங்கினால்-தரித்துப் பண்டு போல் எல்லாம் பண்ணிய
கண்நுதல் பரமர்
தேம் கொள் பூங் கமுகு, தெங்கு, இளங் கொடி, மா,
செண்பகம், வண் பலா, இலுப்பை,
வேங்கை, பூ மகிழால், வெயில் புகா வீழிமிழலையான்”
என, வினை கெடுமே.

5

“கூசு மா மயானம் கோயில் வாயில்கண் குடவயிற்றன
சிலபூதம்,
பூசு மா சாந்தம் பூதி, மெல்லோதி பாதி, நன் பொங்கு
அரவு அரையோன்-
வாசம் ஆம் புன்னை, மௌவல், செங்கழுநீர், மலர்
அணைந்து எழுந்த வான் தென்றல்
வீசு மாம்பொழில் தேன் துவலை சேர்-வீழிமிழலையான்”
என, வினை கெடுமே.

6

“பாதி ஓர் மாதர், மாலும் ஓர்பாகர், பங்கயத்து அயனும்
ஓர் பாலர்
ஆதிஆய் நடு ஆய் அந்தம் ஆய் நின்ற அடிகளார்,
அமரர்கட்கு அமரர்,
போது சேர் சென்னிப் புரூரவாப் பணி செய் பூசுரர், பூமகன்
அனைய
வேதியர், வேதத்து ஒலி அறா வீழிமிழலையான்” என,
வினை கெடுமே.

7

‘“தன் தவம் பெரிய சலந்தரன் உடலம் தடிந்த சக்கரம்
எனக்கு அருள்!” என்று
அன்று அரி வழிபட்டு இழிச்சிய விமானத்து இறையவன்,
பிறை அணி சடையன்-
நின்ற நாள் காலை, இருந்த நாள் மாலை, கிடந்த
மண்மேல் வரு கலியை
வென்ற வேதியர்கள் விழா அறா வீழிமிழலையான்’ என,
வினை கெடுமே.

8

“கடுத்த வாள் அரக்கன் கயிலை அன்று எடுத்த கரம் உரம்
சிரம் நெரிந்து அலற,
அடர்த்தது ஓர்விரலால், அஞ்சுஎழுத்து உரைக்க அருளினன்,
தட மிகு நெடுவாள்
படித்த நால்மறை கேட்டு இருந்த பைங்கிளிகள் பதங்களை
ஓத, பாடு இருந்த
விடைக்குலம் பயிற்றும் விரிபொழில் வீழிமிழலையான்” என,
வினை கெடுமே.

9

“அளவு இடல் உற்ற அயனொடு மாலும் அண்டம் மண்
கிண்டியும் காணா
முளை எரி ஆய மூர்த்தியை, தீர்த்தம் முக்கண் எம்
முதல்வனை, முத்தை,
தளை அவிழ் கமலத்தவிசின் மேல் அனனம் தன்
இளம்பெடையோடும் புல்கி,
விளை கதிர்க்கவரி வீச, வீற்றிருக்கும் மிழலையான்” என,
வினை கெடுமே.

10

“கஞ்சிப் போது உடையார், கையில் கோசாரக் கலதிகள்,
கட்டுரை விட்டு
அஞ்சித் தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு
அமரர்க்கு அமுது அருளி
இஞ்சிக்கே கதலிக்கனி விழ, கமுகின் குலையொடும் பழம்
விழ, தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான்” என,
வினை கெடுமே.

11

வேந்தர் வந்து இறைஞ்ச, வேதியர், வீழிமிழலையுள், விண்
இழிவிமானத்து
ஏய்ந்த தன் தேவியோடு உறைகின்ற ஈசனை, எம்பெருமானை,
தோய்ந்த நீர்த் தோணிபுரத்து உறை மறையோன்-தூ மொழி
ஞானசம்பந்தன்-
வாய்ந்த பாமாலை வாய் நவில்வாரை வானவர் வழிபடுவாரே.