பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சீர் மன்னு செல்வக்குடி மல்கு சிறப்பின் ஓங்கும் கார் மன்னு சென்னிக் கதிர் மா மணி மாட வைப்பு நார் மன்னு சிந்தைப் பல நல் துறை மாந்தர் போற்றும் பார் மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு.
சாயும் தளிர் வல்லி மருங்குல், நெடும் தடம் கண், வேயும் படு தோளியர் பண்படும் இன்சொல் செய்ய வாயும் படும்; நீள் கரை மண் பொரும் தண் பொருந்தம் பாயும் கடலும் படும்; நீர்மை பணித்த முத்தம்.
மொய் வைத்த வண்டின் செறி சூழல் முரன்ற சந்தின் மை வைத்த சோலை மலயம் தர வந்த மந்த மெய் வைத்த காலும் தரும்; ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழும் தரும் செவ்வி மணம் செய் ஈரம்.
சூழும் இதழ்ப் பங்கயமாக, அத் தோட்டின் மேலாள் தாழ்வு இன்றி என்றும் தனி வாழ்வது அத் தையல் ஒப்பார் யாழின் மொழியின் குழல் இன்னிசையும் சுரும்பும் வாழும் நகரம் மதுராபுரி என்பது ஆகும்.
சால்பு ஆய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர் நூல் பாய் இடத்தும் உள; நோன் தலை மேதி பாயப் பால் பாய் முலை தோய் மதுப் பங்கயம் பாய எங்கும் சேல் பாய் தடத்தும் உள செய்யுள் மிக்கு ஏறு சங்கம்.
மந்தா நிலம் வந்து அசை பந்தரின் மாடம் முன்றில் பந்து ஆடிய மங்கையர் பங்கயச் செங்கை தாங்கும் சந்து ஆர் முலை மேலன; தாழ் குழை வாள் முகப் பொன் செந்தாமரை மேலன; நித்திலம் சேர்ந்த கோவை.
மும்மைப் புவனங்களின் மிக்கது அன்றே; அம் மூதூர் மெய்ம்மைப் பொருளாம் தமிழ் நூலின் விளங்கு வாய்மைச் செம்மைப் பொருளும் தருவார் திரு ஆல வாயில் எம்மைப் பவம் தீர்ப்பவர் சங்கம் இருந்தது என்றால்.
அப் பொன் பதி வாழ் வணிகக் குலத்து ஆன்ற தொன்மைச் செப்பத் தகு சீர்க் குடி செய் தவம் செய்ய வந்தார்; எப் பற்றினையும் அறுத்து, ஏறுஉகைத்து ஏறுவார் தாள் மெய்ப் பற்று எனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார்.
நாளும் பெரும் காதல் நயப்பு உறும் வேட்கை யாலே, கேளும் துணையும் முதல் கேடு இல் பதங்கள் எல்லாம் ஆளும் பெருமான் அடித் தாமரை அல்லது இல்லார்; மூளும் பெருகு அன்பு எனும் மூர்த்தியார்; மூர்த்தியார்தாம்.
அந்திப் பிறை செஞ்சடை மேல் அணி ஆலவாயில் எந்தைக்கு அணி சந்தனக் காப்பு இடை என்றும் முட்டா அந்தச் செயலின் நிலை நின்று, அடியார் உவப்பச் சிந்தைக்கு இனிது ஆய திருப்பணி செய்யும் நாளில்.
கானக் கடி சூழ் வடுகக் கரு நாடர் காவல் மானப் படை மன்னன் வலிந்து நிலம் கொள்வான் ஆய் யானைக் குதிரைக் கருவிப் படை வீரர் திரண்ட சேனைக் கடலும் கொடு தென் திசை நோக்கி வந்தான்.
வந்து உற்ற பெரும் படை மண் புதையப் பரப்பிச் சந்தப் பொதியில் தமிழ் நாடு உடை மன்னன் வீரம் சிந்தச் செரு வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால் கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் கொண்டான்.
வல் ஆண்மையின் வண் தமிழ் நாடு வளம் படுத்து நில்லா நிலை ஒன்றிய இன்மையின் நீண்ட மேரு வில்லான் அடிமைத் திறம் மேவிய நீற்றின் சார்பு செல்லாது அருகந்தர் திறத்தினில் சிந்தை தாழ்ந்தான்.
தாழும் சமண் கையர் தவத்தை மெய் என்று சார்ந்து வீழும் கொடியோன் அது அன்றியும் வெய்ய முன்னைச் சூழும் வினையால் அரவம் சுடர்த் திங்கேளாடும் வாழும் சடையான் அடியாரையும் வன்மை செய்வான்
செக்கர்ச் சடையார் விடையார் திரு ஆல வாயுள் முக்கண் பரனார் திருத் தொண்டரை மூர்த்தியாரை, மைக்கல்புரை நெஞ்சு உடை வஞ்சகன் வெஞ்ச மண் போர் எக்கர்க்கு உடனாக, இகழ்ந்தன செய்ய எண்ணி.
அந்தம் இலவாம் மிறை செய்யவும் அன்பனார் தாம் முந்தை தம் முறைமைப் பணி முட்டலர் செய்து வந்தார்; தம் தம் பெருமைக்கு அளவாகிய சார்பில் நிற்கும் எம் தம் பெரு மக்களை யாவர் தடுக்க வல்லார்?
எள்ளும் செயல் வன்மைகள் எல்லை இல்லாத செய்யத் தள்ளும் செயல் இல்லவர் சந்தனக் காப்புத் தேடிக் கொள்ளும் துறையும் அடைத்தான்; கொடுங்கோன்மை செய்வான் தெள்ளும் புனல் வேணியர்க்கு அன்பரும் சிந்தை நொந்து.
புன்மைச் செயல் வல் அமண் குண்டரின் போது போக்கும் வன்மைக் கொடும் பாதகன் மாய்ந்திட, வாய்மை வேத நன்மைத் திரு நீற்று உயர் நன்னெறி தாங்கும் மேன்மைத் தன்மைப் புவி மன்னரைச் சார்வது என்று? சார்வார்.
காய்வு உற்ற செற்றம் கொடு கண்டகன் காப்பவும், சென்று ஆய்வு உற்ற கொட்பில் பகல் எல்லை அடங்க நாடி, ஏய் உற்ற நல் சந்தனம் எங்கும் பெறாது சிந்தை சாய் உற்றிட வந்தனர்; தம்பிரான் கோயில் தன்னில்.
நட்டம் புரிவார் அணி நல் திரு மெய்ப் பூச்சு இன்று முட்டும் பரிசு ஆயினும் தேய்க்கும் கை முட்டாது என்று, வட்டம் திகழ் பாறையின் வைத்து முழங்கை தேய்த்தார்; கட்டும் புறம் தோல் நரம்பு என்பு கரைந்து தேய.
கல்லின் புறம் தேய்த்த முழங்கை கலுழ்ந்து சோரி செல்லும் பரப்பு எங்கணும் என்பு திறந்து மூளை புல்லும்படி கண்டு, பொறுத்திலர் தம்பிரான் ஆனார்; அல்லின் கண் எழுந்தது உவந்து அருள் செய்த வாக்கு.
அன்பின் துணிவால் இது செய்திடல்; ஐய! உன்பால் வன்புன்கண் விளைத்தவன் கொண்ட மண் எல்லாம் கொண்டு, முன்பு இன்னல் புகுந்தன முற்றவும் நீத்துக் காத்துப் பின்பு உன் பணி செய்து நம் பேர் உலகு எய்துக என்ன.
இவ் வண்ணம் எழுந்தது கேட்டு எழுந்து அஞ்சி, முன்பு செய் வண்ணம் ஒழிந்திடத் தேய்ந்த புண் ஊறு தீர்ந்து, கை வண்ணம் நிரம்பின; வாசம் எல்லாம் கலந்து மொய் வண்ண விளங்கு ஒளி எய்தினர் மூர்த்தியார் தாம்.
அந் நாள் இரவின் கண் அமண் புகல் சார்ந்து வாழும் மன் ஆகிய போர் வடுகக் கருநாடர் மன்னன் தன் நாளும் முடிந்தது; சங்கரன் சார்பு இலோர்க்கு மின் ஆம் என நீடிய மெய்ந் நிலையாமை வெல்ல.
இவ்வாறு உலகத்தின் இறப்ப உயர்ந்த நல்லோர் மெய் வாழ் உலகத்து விரைந்து அணைவார்களே போல், அவ்வாறு அரனார் அடியாரை அலைத்த தீயோன் வெவ்வாய் நிரயத்து இடை வீழ விரைந்து வீந்தான்.
முழுதும் பழுதே புரி மூர்க்கன் உலந்த போதின் எழுதும் கொடி போல்பவர் உட்பட ஏங்கு சுற்றம் அழுதும் புலர் உற்றது; மற்று அவன் அன்ன மாலைப் பொழுதும் புலர் உற்றது; செங்கதிர் மீது போத.
அவ் வேலையில் அங்கண் அமைச்சர்கள் கூடித் தங்கள் கை வேறு கொள் ஈம அருங்கடன் காலை முற்றி, வை வேலவன் தன் குல மைந்தரும் இன்மை யாலே, செய் வேறு வினைத் திறம் சிந்தனை செய்து தேர்வார்.
தாழும் செயல்இன்று ஒரு மன்னவன் தாங்க வேண்டும்; கூழும் குடியும் முதல் ஆயின கொள்கைத்தேனும் சூழும் படை மன்னவன் தோள் இணைக் காவல் இன்றி வாழும் தகைத்து அன்று இந்த வையகம் என்று சொன்னார்.
பல் முறை உயிர்கள் எல்லாம் பாலித்து ஞாலம் காப்பான் தன் நெடும் குடைக் கீழ்த் தம் தம் நெறிகளில் சரித்து வாழும் மன்னரை இன்றி வைகும் மண் உலகு எண்ணும் காலை இன்னுயிர் இன்றி வாழும் யாக்கையை ஒக்கும் என்பார்.
இவ் வகை பலவும் எண்ணி இங்கு இனி அரசர் இல்லை; செய்வகை இதுவே என்று தெளிபவர், சிறப்பின் மிக்க மை வரை அனைய வேழம் கண் கட்டி விட்டால் மற்றுஅக் கை வரை கைக் கொண்டார் மண் காவல் கைக் கொள்வார் என்று.
செம் மாண் வினை அர்ச்சனை நூல் முறை செய்து, தோளால் இம் மாநிலம் ஏந்தும் ஓர் ஏந்தலை ஏந்துக என்று பெய்ம் மா முகில் போல் மதம் பாய் பெருகு ஓடை நெற்றிக் கைம் மாவை, நறுந் துகில் கொண்டு கண் கட்டி விட்டார்.
கண் கட்டி விடும் களி யானை அக் காவல் மூதூர், மண் கொள் புற வீதி மருங்கு திரிந்து போகித் திண் பொன் தட மா மதில் சூழ் திரு ஆல வாயில் விண் பின் பட ஓங்கிய கோபுரம் முன்பு மேவி.
நீங்கும் இரவின் கண் நிகழ்ந்தது கண்ட தொண்டர், ஈங்கு எம் பெருமான் அருளாம் எனில், இந்த வையம் தாங்கும் செயல் பூண்பன் என்று உள்ளம் தளர்வு நீங்கிப் பூம் கொன்றை மிலைந்தவர் கோயில் புறத்து நிற்ப.
வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று, வாழ்வு உற்று உலகம் செய் தவத்தினின், வள்ளலாரைச் சூழ் பொன் சுடர் மா மணி மா நிலம் தோய, முன்பு தாழ்வு உற்று எடுத்துப் பிடர் மீது தரித்தது அன்றே.
மாதங்கம் எருத்தினில் வைத்தவர் தம்மைக் காணா, ஏதம் கெட எண்ணிய திண்மை அமைச்சர் எல்லாம் பாதங்களின் மீது பணிந்து எழுந்தார்கள்; அப்போது ஓதம் கிளர் வேலையை ஒத்து ஒலி மிக்கது அவ்வூர்.
சங்கங்கள் முரன்றன தாரைகள் பேரி யோடும் எங்கு எங்கும் இயம்பின பல் இயம் எல்லை இல்ல அங்கு அங்கு மலிந்தன வாழ்த்து ஒலி; அம் பொன் கொம்பின் பங்கன் அருளால் உலகு ஆள்பவர் பாங்கர் எங்கும்.
வெங்கண் களிற்றின் மிசை நின்றும் இழிச்சி, வேரித் தொங்கல் சுடர் மாலைகள் சூழ் முடி சூடு சாலை அங்கண் கொடு புக்கு, அரியாசனத்து ஏற்றி, ஒற்றைத் திங்கள் குடைக் கீழ், உரிமைச் செயல் சூழ்ந்து செய்வார்.
மன்னும் திசை வேதியில் மங்கல ஆகுதிக் கண் துன்னும் சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல் சூழ் பொன்னின் கலசங்கள் குடங்கள் பூரித்த தூ நீர், உன்னும் செயல் மந்திர யோகர் நிறுத்தி னார்கள்.
வந்து உற்று எழு மங்கல மாந்தர்கள் தம்மை நோக்கிச் சிந்தைச் சிவமே தெளியும் திரு மூர்த்தியார் தாம் முந்தைச் செயலாம் அமண் போய் முதல் சைவம் ஓங்கில் இந்தப் புவி தாங்கி இவ் விண்ணரசு ஆள்வன் என்றார்.
அவ்வாறு மொழிந்தது கேட்ட அமைச்சரோடு மெய் வாழ் தரு நூல் அறிவின் மிகு மாந்தர் தாமும் எவ்வாறு அருள் செய்தனை? மற்று, அவை அன்றி யாவர் செய்வார் பெரியோய்! எனச் சேவடி தாழ்ந்து செப்ப.
வையம் முறை செய்குவன் ஆகில், வயங்கு நீறே செய்யும் அபிடேகமும் ஆக, செழும் கலன்கள் ஐயன் அடையாளமும் ஆக அணிந்து, தாங்கும் மொய் புன் சடை மா முடியே, முடி ஆவது; என்றார்.
என்று இவ்வுரை கேட்டலும், எல்லை இல் கல்வி யோடும் வன் திண் மதி நூல் வளர் வாய்மை அமைச்சர் தாமும் நன்று இங்கு அருள் தான் என நல் தவ வேந்தர் சிந்தை ஒன்றும் அரசு ஆள் உரிமைச் செயல் ஆன உய்த்தார்.
மாடு எங்கும் நெருங்கிய மங்கல ஓசை மல்கச் சூடும் சடை மௌலி அணிந்தவர் தொல்லை ஏனம் தேடும் கழலார் திரு ஆல வாய் சென்று தாழ்ந்து, நீடும் களிற்றின் மிசை நீள் மறுகு ஊடு போந்தார்.
மின்னும் மணி மாளிகை வாயிலின் வேழம் மீது தன்னின்றும் இழிந்து, தயங்கு ஒளி மண்டபத்தில், பொன்னின் அரி மெல்லணைச் சாமரைக் காமர் பூங்கால் மன்னும் குடை நீழல் இருந்தனர்; வையம் தாங்கி.
குலவும் துறை நீதி அமைச்சர் குறிப்பின் வைகக் கலகம் செய் அமண் செயல் ஆயின கட்டு நீங்கி, நிலவும் திரு நீற்று நெறித் துறை நீடு வாழ, உலகுஎங்கும் நிரம்பிய சைவம் உயர்ந்து மன்ன.
நுதலின் கண் விழித்தவர் வாய்மை நுணங்கு நூலின் பதம் எங்கும் நிறைந்து விளங்கப் பவங்கள் மாற, உதவும் திருநீறு உயர் கண்டிகை கொண்ட வேணி முதன் மும்மையினால் உலகு ஆண்டனர் மூர்த்தியார் தாம்.
ஏலம் கமழ் கோதையர் தம் திறம் என்றும் நீங்கும் சீலம் கொடு, வெம் புலன் தெவ்வுடன் வென்று நீக்கி, ஞாலம் தனி நேமி நடாத்தி, நலம் கொள் ஊழிக் காலம் உயிர்கட்கு இடர் ஆன கடிந்து, காத்து.
பாதம் பர மன்னவர் சூழ்ந்து பணிந்து போற்ற ஏதம் பிணியா வகை இவ் உலகு ஆண்டு, தொண்டின் பேதம் புரியா அருள் பேர் அரசுஆளப் பெற்று நாதன் கழல் சேவடி நண்ணினர் அண்ணலாரே.
அகல் பாறையில் வைத்து முழங் கையை அன்று தேய்த்த இகல்ஆர் களிற்று அன்பரை ஏத்தி, முருக னார் ஆம் முகில் சூழ் நறும் சோலையின் மொய் ஒளி மாட வீதிப் புகலூர் வரும் அந்தணர் தம் திறம் போற்றல் உற்றாம்.