பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மைம் மரு பூங்குழல் கற்றை துற்ற, வாள்நுதல் மான்விழி மங்கையோடும், பொய்ம் மொழியா மறையோர்கள் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே! எம் இறையே! இமையாத முக்கண் ஈச! என் நேச! இது என்கொல சொல்லாய் மெய்ம்மொழி நால்மறையோர் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
கழல் மல்கு பந்தொடு அம்மானை முற்றில் கற்றவர், சிற்றிடைக் கன்னிமார்கள், பொழில் மல்கு கிள்ளையைச் சொல் பயிற்றும் புகலி நிலாவிய புண்ணியனே! எழில் மலரோன் சிரம் ஏந்தி உண்டு ஓர் இன்பு உறு செல்வம் இது என் கொல் சொல்லாய் மிழலையுள் வேதியர் ஏத்தி வாழ்த்த, விண் இழி கோயில் விரும்பியதே?
கன்னியர் ஆடல் கலந்து, மிக்க கந்துக வாடை கலந்து, துங்கப் பொன் இயல் மாடம் நெருங்கு செல்வப் புகலி நிலாவிய புண்ணியனே! இன் இசை யாழ் மொழியாள் ஒருபாகத்து எம் இறையே! இது என் கொல் சொல்லாய் மின் இயல் நுண் இடையார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
நாகபணம் திகழ் அல்குல் மல்கும் நன் நுதல் மான்விழி மங்கையோடும் பூக வளம் பொழில் சூழ்ந்த அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே! ஏக பெருந்தகை ஆய பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய் மேகம் உரிஞ்சு எயில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
சந்து அளறு ஏறு தடம் கொள் கொங்கைத் தையலொடும், தளராத வாய்மைப் புந்தியின் நால் மறையோர்கள் ஏத்தும், புகலி நிலாவிய புண்ணியனே! எம் தமை ஆள் உடை ஈச! எம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய் வெந்த வெண் நீறு அணிவார் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
சங்கு, ஒலி இப்பி, சுறா, மகரம், தாங்கி நிரந்து, தரங்கம் மேல்மேல் பொங்கு ஒலி நீர் சுமந்து ஓங்கு செம்மைப் புகலி நிலாவிய புண்ணியனே! எங்கள் பிரான்! இமையோர்கள் பெம்மான்! எம் இறையே! இது என்கொல் சொல்லாய் வெங்கதிர் தோய் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கி, காம்பு அன தோளியொடும் கலந்து, பூ மரு நான்முகன் போல்வர் ஏத்த, புகலி நிலாவிய புண்ணியனே! ஈமவனத்து எரி ஆட்டு உகந்த எம் பெருமான்! இது என்கொல் சொல்லாய் வீ மரு தண் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
இலங்கையர் வேந்து எழில் வாய்த்த திண் தோள் இற்று அலற விரல் ஒற்றி, ஐந்து புலம் களை கட்டவர் போற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே! இலங்கு எரி ஏந்தி நின்று எல்லி ஆடும் எம் இறையே! இது என்கொல் சொல்லாய் விலங்கல் ஒண் மாளிகை சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
செறி முளரித்தவிசு ஏறி ஆறும் செற்று அதில் வீற்றிருந் தானும், மற்றைப் பொறி அரவத்து அணையானும், காணாப் புகலி நிலாவிய புண்ணியனே! எறி மழுவோடு இளமான் கை இன்றி இருந்த பிரான்! இது என்கொல் சொல்லாய் வெறி கமழ் பூம்பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
பத்தர் கணம் பணிந்து ஏத்த வாய்த்த பான்மை அது அன்றியும், பல் சமணும் புத்தரும் நின்று அலர் தூற்ற, அம் தண் புகலி நிலாவிய புண்ணியனே! எத்தவத் தோர்க்கும் இலக்கு ஆய் நின்ற எம்பெருமான்! இது என்கொல் சொல்லாய் வித்தகர் வாழ் பொழில் சூழ் மிழலை விண் இழி கோயில் விரும்பியதே?
"விண் இழி கோயில் விரும்பி மேவும் வித்தகம் என்கொல் இது!" என்று சொல்லி, புண்ணியனை, புகலி நிலாவு பூங்கொடியோடு இருந்தானைப் போற்றி, நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நால்மறை ஞானசம்பந்தன் சொன்ன பண் இயல் பாடல் வல்லார்கள் இந்தப் பாரொடு விண் பரிபாலகரே.
சடை ஆர் புனல் உடையான், ஒரு சரி கோவணம் உடையான், படை ஆர் மழு உடையான், பல பூதப்படை உடையான், மடமான் விழி உமைமாது இடம் உடையான், எனை உடையான், விடை ஆர் கொடி உடையான், இடம் வீழிமிழலையே.
ஈறு ஆய், முதல் ஒன்று ஆய், இரு பெண் ஆண், குணம் மூன்று ஆய், மாறா மறை நான்கு ஆய், வரு பூதம் அவை ஐந்து ஆய், ஆறு ஆர் சுவை, ஏழ் ஓசையொடு எட்டுத்திசை தான் ஆய், வேறு ஆய், உடன் ஆனான், இடம் வீழிமிழலையே.
வம்மின், அடியீர், நாள்மலர் இட்டுத் தொழுது உய்ய! உம் அன்பினொடு எம் அன்பு செய்து, ஈசன் உறை கோயில் மும்மென்று இசை முரல் வண்டுகள் கெண்டித் திசை எங்கும் விம்மும் பொழில் சூழ் தண்வயல் வீழிமிழலையே.
பண்ணும், பதம் ஏழும், பல ஓசைத் தமிழ் அவையும், உள் நின்றது ஒரு சுவையும், உறு தாளத்து ஒலி பலவும், மண்ணும், புனல், உயிரும், வரு காற்றும், சுடர் மூன்றும், விண்ணும், முழுது ஆனான் இடம் வீழிமிழலையே.
ஆயாதன சமயம் பல அறியாதவன், நெறியின் தாய் ஆனவன், உயிர் கட்கு முன் தலை ஆனவன், மறை முத் தீ ஆனவன், சிவன், எம் இறை, செல்வத் திரு ஆரூர் மேயான் அவன், உறையும் இடம் வீழிமிழலையே.
“கல்லால் நிழல் கீழாய்! இடர் காவாய்!” என வானோர் எல்லாம் ஒரு தேர் ஆய், அயன் மறை பூட்டி நின்று உய்ப்ப, வல்லாய் எரி காற்று ஈர்க்கு, அரி கோல், வாசுகி நாண், கல் வில்லால், எயில் எய்தான் இடம் வீழிமிழலையே.
கரத்தால் மலி சிரத்தான்; கரி உரித்து ஆயது ஒரு படத்தான்; புரத்தார் பொடிபட, தன் அடி பணி மூவர்கட்கு ஓவா வரத்தான் மிக அளித்தான்; இடம் வளர் புன்னை முத்து அரும்பி, விரைத் தாது பொன் மணி ஈன்று, அணி வீழிமிழலையே.
முன் நிற்பவர் இல்லா முரண் அரக்கன், வடகயிலை தன்னைப் பிடித்து எடுத்தான், முடி தடந்தோள் இற ஊன்றி, பின்னைப் பணிந்து ஏத்த, பெரு வாள் பேரொடும் கொடுத்த மின்னின் பொலி சடையான் இடம் வீழிமிழலையே.
பண்டு ஏழ் உலகு உண்டான், அவை கண்டானும், முன் அறியா ஒண் தீ உரு ஆனான் உறை கோயில் நிறை பொய்கை வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில, வெண் தாமரை செந் தாது உதிர் வீழிமிழலையே.
மசங்கல் சமண், மண்டைக் கையர், குண்டக் குணம் இலிகள், இசங்கும் பிறப்பு அறுத்தான் இடம் இருந்தேன் களித்து இரைத்து, பசும் பொன்கிளி களி மஞ்ஞைகள் ஒளி கொண்டு எழு பகலோன் விசும்பைப் பொலிவிக்கும் பொழில் வீழிமிழலையே.
வீழிமிழலை மேவிய விகிர்தன்தனை, விரை சேர் காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ்பத்தும் யாழின் இசை வல்லார், சொலக் கேட்டார், அவர் எல்லாம் ஊழின் மலி வினை போயிட, உயர்வான் அடைவாரே.
தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு, அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும் மிகு சின விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்; உறை பதி திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை திரு மிழலையே.
தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்; உரை மலிதரு சுரநதி, மதி, பொதி சடையவன்; உறை பதி மிகு திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர் திரு மிழலையே.
மலைமகள் தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர் தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன் உறை பதி கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு, சிலை மலி மதில் புடை தழுவிய, திகழ் பொழில் வளர், திரு மிழலையே.
மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய பெரு வலியினன், நலம் மலிதரு கரன், உரம் மிகு பிணம் அமர் வன இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன், இனிது உறை பதி தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே.
அணி பெறு வட மர நிழலினில், அமர்வொடும் அடி இணை இருவர்கள் பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல் அணி, திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல், திரு மிழலையே.
வசை அறு வலி வனசர உரு அது கொடு, நினைவு அருதவம் முயல் விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல்கொடு செய்து, அசைவு இல படை அருள் புரிதருமவன் உறை பதி அது மிகு தரு திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு திரு மிழலையே.
நலம் மலிதரு மறைமொழியொடு, நதி உறுபுனல், புகை, ஒளி முதல், மலர் அவைகொடு, வழிபடு திறல் மறையவன் உயிர் அது கொள வரு சலம் மலிதரு மறலிதன் உயிர்கெட, உதைசெய்த அரன் உறை பதி "திலகம் இது!" என உலகுகள் புகழ்தரு, பொழில் அணி, திரு மிழலையே.
அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்; வரல் முறை உலகு அவை தரு, மலர் வளர், மறையவன் வழி வழுவிய சிரம் அதுகொடு பலி திரிதரு சிவன்; உறை பதி திரு மிழலையே.
அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன், அளவிடல் ஒழிய, ஒரு பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர, வரல்முறை, "சய சய!" என மிகு துதிசெய, வெளி உருவிய அவன் உறை பதி செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே.
இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி சமண்விரகினர், திகழ் துவர் உடை உடல் பொதிபவர், கெட, அடியவர் மிக அருளிய புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய புவி திகழ் சுரர்தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ் திரு மிழலையே.
சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை, மிகு தன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும் மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள், சய மகள், இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே.
அரை ஆர் விரி கோவண ஆடை, நரை ஆர் விடை ஊர்தி, நயந்தான், விரை ஆர் பொழில், வீழி மிழலை உரையால் உணர்வார் உயர்வாரே.
புனைதல் புரி புன்சடை தன் மேல் கனைதல் ஒரு கங்கை கரந்தான், வினை இல்லவர், வீழி மிழலை நினைவு இல்லவர் நெஞ்சமும் நெஞ்சே?
அழ வல்லவர், ஆடியும் பாடி எழ வல்லவர், எந்தை அடிமேல் விழ வல்லவர், வீழி மிழலை தொழ வல்லவர், நல்லவர்; தொண்டே!
உரவம் புரி புன் சடை தன்மேல் அரவம் அரை ஆர்த்த அழகன், விரவும் பொழில், வீழி மிழலை பரவும்(ம்) அடியார் அடியாரே!
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன், வரிது ஆகிய வண்டு அறை கொன்றை விரி தார் பொழில், வீழி மிழலை உரிதா நினைவார் உயர்வாரே.
சடை ஆர் பிறையான், சரி பூதப் படையான், கொடி மேலது ஒரு பைங்கண் விடையான், உறை வீழி மிழலை அடைவார் அடியார் அவர் தாமே.
செறி ஆர் கழலும் சிலம்பு ஆர்க்க நெறி ஆர் குழலாளொடு நின்றான், வெறி ஆர் பொழில், வீழி மிழலை அறிவார் அவலம் அறியாரே.
உளையா வலி ஒல்க, அரக்கன், வளையா விரல் ஊன்றிய மைந்தன், விளை ஆர் வயல், வீழி மிழலை அளையா வருவார் அடியாரே.
மருள் செய்து இருவர் மயல் ஆக அருள் செய்தவன், ஆர் அழல் ஆகி வெருள் செய்தவன், வீழி மிழலை தெருள் செய்தவர் தீவினை தேய்வே.
துளங்கும் நெறியார் அவர் தொன்மை வளம் கொள்ளன்மின், புல் அமண் தேரை! விளங்கும் பொழில் வீழி மிழலை உளம் கொள்பவர் தம் வினை ஓய்வே.
நளிர் காழியுள் ஞானசம்பந்தன் குளிர் ஆர் சடையான் அடி கூற, மிளிர் ஆர் பொழில், வீழி மிழலை கிளர் பாடல் வல்லார்க்கு இலை, கேடே.
இரும் பொன்மலை வில்லா, எரி அம்பா, நாணில்,- திரிந்த புரம் மூன்றும் செற்றான் உறை கோயில் தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் விரும்பி எதிர்கொள்வார் வீழி மிழலையே.
வாதைப்படுகின்ற வானோர் துயர் தீர, ஓதக்கடல் நஞ்சை உண்டான் உறை கோயில் கீதத்து இசையோடும் கேள்விக் கிடையோடும் வேதத்து ஒலி ஓவா வீழி மிழலையே.
பயிலும் மறையாளன் தலையில் பலி கொண்டு, துயிலும் பொழுது ஆடும் சோதி உறை கோயில் மயிலும் மடமானும் மதியும் இள வேயும் வெயிலும் பொலி மாதர் வீழி மிழலையே.
இரவன் பகலோனும் எச்சத்து இமையோரை நிரவிட்டு, அருள் செய்த நிமலன் உறை கோயில் குரவம், சுரபுன்னை, குளிர் கோங்கு, இள வேங்கை, விரவும் பொழில் அம் தண் வீழி மிழலையே.
கண்ணின் கனலாலே காமன் பொடி ஆக, பெண்ணுக்கு அருள்செய்த பெருமான் உறை கோயில் மண்ணில் பெரு வேள்வி வளர் தீப்புகை நாளும் விண்ணில் புயல் காட்டும் வீழி மிழலையே.
மால் ஆயிரம் கொண்டு மலர்க்கண் இட, ஆழி ஏலா வலயத்தோடு ஈந்தான் உறை கோயில் சேல் ஆகிய பொய்கைச் செழு நீர்க் கமலங்கள் மேலால் எரி காட்டும் வீழி மிழலையே.
மதியால் வழிபட்டான் வாழ்நாள் கொடுபோவான், கொதியா வரு கூற்றைக் குமைத்தான் உறை கோயில் நெதியால் மிகு செல்வர் நித்தம் நியமங்கள் விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே.
எடுத்தான் தருக்கினை இழித்தான், விரல் ஊன்றி; கொடுத்தான், வாள்; ஆளாக் கொண்டான்; உறை கோயில் படித்தார், மறை வேள்வி பயின்றார், பாவத்தை விடுத்தார், மிக வாழும் வீழி மிழலையே.
கிடந்தான் இருந்தானும், கீழ் மேல் காணாது, தொடர்ந்து ஆங்கு அவர் ஏத்தச் சுடர் ஆயவன் கோயில் படம் தாங்கு அரவு அல்குல், பவளத்துவர் வாய், மேல் விடம் தாங்கிய கண்ணார் வீழி மிழலையே.
சிக்கு ஆர் துவர் ஆடை, சிறு தட்டு, உடையாரும் நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் தக்கார், மறை வேள்வித் தலை ஆய் உலகுக்கு மிக்கார் அவர் வாழும் வீழி மிழலையே.
மேல் நின்று இழி கோயில் வீழி மிழலையுள் ஏனத்து எயிற்றானை, எழில் ஆர் பொழில் காழி ஞானத்து உயர்கின்ற நலம் கொள் சம்பந்தன் வாய்மைத்து இவை சொல்ல, வல்லோர் நல்லோரே.
வாசி தீரவே, காசு நல்குவீர்! மாசு இல் மிழலையீர்! ஏசல் இல்லையே.
இறைவர் ஆயினீர்! மறை கொள் மிழலையீர்! கறை கொள் காசினை முறைமை நல்குமே!
செய்யமேனியீர்! மெய் கொள் மிழலையீர்! பை கொள் அரவினீர்! உய்ய, நல்குமே!
நீறு பூசினீர்! ஏறு அது ஏறினீர்! கூறு மிழலையீர்! பேறும் அருளுமே!
காமன் வேவ, ஓர் தூமக் கண்ணினீர்! நாம மிழலையீர்! சேமம் நல்குமே!
பிணி கொள் சடையினீர்! மணி கொள் மிடறினீர்! அணி கொள் மிழலையீர்! பணிகொண்டு அருளுமே!
மங்கை பங்கினீர்! துங்க மிழலையீர்! கங்கை முடியினீர்! சங்கை தவிர்மினே!
அரக்கன் நெரிதர, இரக்கம் எய்தினீர்! பரக்கும் மிழலையீர்! கரக்கை தவிர்மினே!
அயனும் மாலும் ஆய் முயலும் முடியினீர்! இயலும் மிழலையீர்! பயனும் அருளுமே!
பறிகொள் தலையினார் அறிவது அறிகிலார்; வெறி கொள் மிழலையீர்! பிரிவு அது அரியதே.
காழி மா நகர் வாழி சம்பந்தன் வீழிமிழலைமேல்-தாழும் மொழிகளே.
அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர் மலர் மலி குழல் உமைதனை இடம் மகிழ்பவர், நலம் மலி உரு உடையவர், நகர் மிகு புகழ் நிலம் மலி மிழலையை நினைய வல்லவரே.
இரு நிலம் இதன் மிசை எழில் பெறும் உருவினர் கரு மலிதரு மிகு புவி முதல் உலகினில் இருள் அறு மதியினர், இமையவர் தொழுது எழு நிருபமன், மிழலையை நினைய வல்லவரே.
“கலைமகள் தலைமகன், இவன்” என வருபவர் அலை மலிதரு புனல், அரவொடு, நகுதலை, இலை மலி இதழியும், இசைதரு சடையினர் நிலை மலி மிழலையை நினைய வல்லவரே.
மாடு அமர் சனம் மகிழ்தரு மனம் உடையவர் காடு அமர் கழுதுகள் அவை முழவொடும் இசை பாடலின் நவில்பவர் மிகுதரும் உலகினில் நீடு அமர் மிழலையை நினைய வல்லவரே.
புகழ்மகள் துணையினர் புரிகுழல் உமைதனை இகழ்வு செய்தவன் உடை எழில் மறைவழி வளர் முகம் அது சிதைதர முனிவு செய்தவன் மிகு நிகழ்தரு மிழலையை நினைய வல்லவரே.
அன்றினர் அரி என வருபவர்-அரிதினில் ஒன்றிய திரிபுரம் ஒருநொடியினில் எரி சென்று கொள் வகை சிறு முறுவல்கொடு ஒளி பெற நின்றவன் மிழலையை நினைய வல்லவரே.
கரம் பயில் கொடையினர் கடிமலர் அயனது ஒர் சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர், வரம் பயில் கலைபல மறை முறை அறநெறி நிரம்பினர், மிழலையை நினைய வல்லவரே.
ஒருக்கிய உணர்வினொடு ஒளிநெறி செலுமவர் அரக்கன் நல்மணி முடி ஒருபதும் இருபது- கரக்கனம் நெரிதர, மலர் அடிவிரல் கொடு நெருக்கினன் மிழலையை நினைய வல்லவரே.
அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர் கடிமலர் அயன் அரி கருத(அ)ரு வகை தழல்- வடிவு உரு இயல் பினொடு உலகுகள் நிறைதரு நெடியவன் மிழலையை நினைய வல்லவரே.
மன்மதன் என ஒளி பெறுமவர் மருது அமர் வன் மலர் துவர் உடையவர்களும், மதி இலர் துன்மதி அமணர்கள், தொடர்வு அரு மிகு புகழ் நின்மலன் மிழலையை நினைய வல்லவரே.
நித்திலன் மிழலையை, நிகர் இலி புகலியுள் வித்தகமறை மலி தமிழ்விரகன மொழி பத்தியில் வருவன பத்து இவை பயில்வொடு கற்று வல்லவர் உலகினில் அடியவரே.
ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து, அங்கு ஈர்-இருவர்க்கு இரங்கி நின்று, நேரிய நால்மறைப்பொருளை உரைத்து, ஒளி சேர் நெறி அளித்தோன் நின்றகோயில் பார் இசையும் பண்டிதர்கள் பல்-நாளும் பயின்று ஓதும் ஓசை கேட்டு, வேரி மலி பொழில், கிள்ளை வேதங்கள் பொருள் சொல்லும் மிழலை ஆமே.
பொறி அரவம் அது சுற்றி, பொருப்பே மத்து ஆக, புத்தேளிர் கூடி, மறி கடலைக் கடைந்திட்ட விடம் உண்ட கண்டத்தோன் மன்னும் கோயில் செறி இதழ்த் தாமரைத்தவிசில்-திகழ்ந்து ஓங்கும் இலைக் குடைக் கீழ், செய் ஆர்செந்நெல் வெறி கதிர்ச்சாமரை இரட்ட, இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே.
எழுந்து உலகை நலிந்து உழலும் அவுணர்கள் தம் புரம் மூன்றும், எழில் கண்ணாடி உழுந்து உருளும் அளவையின், ஒள் எரி கொள, வெஞ்சிலை வளைத்தோன் உறையும் கோயில் கொழுந் தரளம் நகை காட்ட, கோகநதம் முகம் காட்ட, குதித்து நீர்மேல் விழுந்த கயல் விழி காட்ட, வில் பவளம் வாய் காட்டும் மிழலை ஆமே.
உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம் நிரை சேரப் படைத்து, அவற்றின் உயிர்க்கு உயிர் ஆய், அங்கு அங்கே நின்றான்கோயில் வரை சேரும் முகில் முழவ, மயில்கள் பல நடம் ஆட, வண்டு பாட, விரை சேர் பொன் இதழி தர, மென்காந்தள் கை ஏற்கும் மிழலை ஆமே.
காணும் ஆறு அரிய பெருமான் ஆகி, காலம் ஆய், குணங்கள் மூன்று ஆய், பேணு மூன்று உருஆகி, பேர் உலகம் படைத்து அளிக்கும் பெருமான் கோயில் "தாணு ஆய் நின்ற பரதத்துவனை, உத்தமனை, இறைஞ்சீர்!" என்று வேணு வார்கொடி விண்ணோர்தமை விளிப்ப போல் ஓங்கு மிழலை ஆமே.
அகன் அமர்ந்த அன்பினராய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானப் புகல் உடையோர்தம் உள்ளப் புண்டரிகத்துள் இருக்கும் புராணர் கோயில் தகவு உடை நீர் மணித்தலத்து, சங்கு உள வர்க்கம் திகழ, சலசத்தீயுள், மிக உடைய புன்கு மலர்ப்பொரி அட்ட, மணம் செய்யும் மிழலை ஆமே.
ஆறு ஆடு சடைமுடியன், அனல் ஆடு மலர்க்கையன், இமயப்பாவை கூறு ஆடு திரு உருவன், கூத்து ஆடும் குணம் உடையோன், குளிரும் கோயில் சேறு ஆடு செங்கழுநீர்த் தாது ஆடி, மது உண்டு, சிவந்த வண்டு வேறு ஆய உருஆகி, செவ்வழி நல்பண் பாடும் மிழலை ஆமே.
கருப்பம் மிகும் உடல் அடர்த்து, கால் ஊன்றி, கை மறித்து, கயிலை என்னும் பொருப்பு எடுக்கல் உறும் அரக்கன் பொன் முடி தோள் நெரித்த விரல் புனிதர்கோயில் தருப்பம் மிகு சலந்தரன் தன் உடல் தடிந்த சக்கரத்தை வேண்டி, ஈண்டு விருப்பொடு மால் வழிபாடு செய்ய, இழி விமானம் சேர் மிழலை ஆமே.
செந்தளிர் மா மலரோனும் திருமாலும், ஏனமொடு அன்னம் ஆகி, அந்தம் அடி காணாதே, அவர் ஏத்த, வெளிப்பட்டோன் அமரும் கோயில் புந்தியின் நால்மறைவழியே புல் பரப்பி, நெய் சமிதை கையில் கொண்டு, வெந்தழலின் வேட்டு, உலகில் மிக அளிப்போர் சேரும் ஊர் மிழலை ஆமே.
எண் இறந்த அமணர்களும், இழி தொழில் சேர் சாக்கியரும், என்றும் தன்னை நண்ண (அ)ரிய வகை மயக்கி, தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில் பண் அமரும் மென்மொழியார் பாலகரைப் பாராட்டும் ஓசை கேட்டு, விண்ணவர்கள் வியப்பு எய்தி, விமானத்தோடும் இழியும் மிழலை ஆமே.
மின் இயலும் மணி மாடம் மிடை வீழி மிழலையான் விரை ஆர் பாதம் சென்னிமிசைக் கொண்டு ஒழுகும் சிரபுரக் கோன்-செழுமறைகள் பயிலும் நாவன், பன்னிய சீர் மிகு ஞானசம்பந்தன்-பரிந்து உரைத்த பத்தும் ஏத்தி, இன் இசையால் பாட வல்லார், இருநிலத்தில் ஈசன் எனும் இயல்பினோரே.