பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

இறைகளோடு இசைந்த இன்பம், இன்பத்தோடு இசைந்த வாழ்வு,
பறை கிழித்தனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு,
திறை கொணர்ந்து ஈண்டி, தேவர், செம்பொனும் மணியும் தூவி,
அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

2

ஊன் மிசை உதிரக் குப்பை; ஒரு பொருள் இலாத மாயம்;
மான் மறித்தனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுடப் பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்;
ஆன் நல்வெள் ஏற்ற ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

3

அறுபதும் பத்தும், எட்டும், ஆறினோடு அஞ்சு-நான்கும்,
துறு பறித்தனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆகச் சொல்லார்;
நறு மலர்ப்பூவும் நீரும் நாள் தொறும் வணங்குவார்க்கு(வ்)
அறிவினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

4

சொல்லிடில் எல்லை இல்லை, சுவை இலாப் பேதை வாழ்வு;
நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன் அல்லேன்;
மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும்
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

5

நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லாக்
குரம்பை வாய்க் குடி இருந்து குலத்தினால் வாழ மாட்டேன்;
விரும்பிய கமழும் புன்னை மாதவித் தொகுதி என்றும்
அரும்பு வாய் மலரும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

6

மணம் என மகிழ்வர், முன்னே, மக்கள் தாய் தந்தை சுற்றம்,
பிணம் எனச் சுடுவர், பேர்த்தே; பிறவியை வேண்டேன், நாயேன்;
பணை இடைச் சோலை தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள்
அணை வினைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

7

தாழ்வு எனும் தன்மை விட்டு, தனத்தையே மனத்தில் வைத்து,
வாழ்வதே கருதி, தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்;
ஆழ் குழிப்பட்ட போது, அலக்கணில், ஒருவர்க்கு ஆவர்;
யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

8

உதிரம் நீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்குகை(ம்)மேல்
வருவது ஓர் மாயக் கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்;
கரிய மால், அயனும், தேடிக் கழல் முடி காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

9

பொய்த் தன்மைத்து ஆய மாயப்போர்வையை, மெய் என்று எண்ணும்
வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி, நான் விரும்பகில்லேன்;
முத்தினைத் தொழுது, நாளும் முடிகளால் வணங்குவார்க்கு(வ்)
அத் தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

10

தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன், தடமுலைக்கண்
அம் சொலார் பயிலும் ஆரூர் அப்பனை, ஊரன் அஞ்சி
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்,
நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே .

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

குருகு பாய, கொழுங் கரும்புகள் நெரிந்த சாறு
அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரைப்
பருகும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், நினைந்து
உருகும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .

2

பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்!
அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை
மறக்ககில்லாமையும், வளைகள் நில்லாமையும்,
உறக்கம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? .

3

சூழும் ஓடிச் சுழன்று உழலும் வெண் நாரைகாள்!
ஆளும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரர்க்கு
வாழும் ஆறும், வளை கழலும் ஆறும்(ம்), எனக்கு
ஊழும் மாறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .

4

சக்கிரவாளத்து இளம் பேடைகாள்! சேவல்காள்!
அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு,
வக்கிரம் இல்லாமையும், வளைகள் நில்லாமையும்,
உக்கிரம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? .

5

இலை கொள் சோலைத்தலை இருக்கும் வெண் நாரைகாள்!
அலை கொள் சூலப்படை அடிகள் ஆரூரர்க்கு,
கலைகள் சோர்கின்றதும், கன வளை கழன்றதும்,
முலைகள் பீர் கொண்டதும், மொழிய வல்லீர்களே? .

6

வண்டுகாள்! கொண்டல்காள்! வார் மணல் குருகுகாள்!
அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரைக்
கண்ட ஆறும், காமத்தீக் கனன்று எரிந்து மெய்
உண்ட ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .

7

தேன் நலம் கொண்ட தேன்! வண்டுகாள்! கொண்டல்காள்!
ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு,
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன்
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே? .

8

சுற்று முற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள்!
அற்றம் முற்றப் பகர்ந்து அடிகள் ஆரூரர்க்கு,
பற்று மற்று இன்மையும், பாடு மற்று இன்மையும்,
முற்றும் மற்று இன்மையும், மொழிய வல்லீர்களே? .

9

குரவம் நாற, குயில் வண்டு இனம் பாட, நின்று
அரவம் ஆடும் பொழில் அம் தண் ஆரூரரைப்
பரவி நாடு(ம்)மதும், பாடி நாடு(ம்)மதும்,
உருகி நாடு(ம்)மதும், உணர்த்த வல்லீர்களே? .

10

கூடும் அன்னப் பெடைகாள்! குயில்! வண்டுகாள்!
ஆடும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரரைப்
பாடும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், கூடி
ஊடும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? .

11

நித்தம் ஆக(ந்) நினைந்து உள்ளம் ஏத்தித் தொழும்
அத்தன், அம் பொன்கழல் அடிகள், ஆரூரரைச்
சித்தம் வைத்த புகழ்ச் சிங்கடி அப்பன்-மெய்ப்-
பத்தன், ஊரன்-சொன்ன பாடுமின், பத்தரே! .

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்
பொத்தின நோய் அது இதனைப் பொருள் அறிந்தேன்; போய்த் தொழுவேன்;
முத்தனை, மாமணி தன்னை, வயிரத்தை, மூர்க்கனேன்
எத்தனை நாள் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

2

ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆகச்
செவ்வணம் ஆம் திரு நயனம் விழி செய்த சிவமூர்த்தி,
மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை,
எவ் வணம் நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

3

சங்கு அலக்கும் தடங்கடல் வாய் விடம் சுட வந்து அமரர் தொழ,
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை,
இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி
எங்கு உலக்கப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

4

இங்ஙனம் வந்து இடர்ப் பிறவிப் பிறந்து அயர்வேன்; அயராமே
அங்ஙனம் வந்து எனை ஆண்ட அரு மருந்து, என் ஆரமுதை,
வெங்கனல் மா மேனியனை, மான் மருவும் கையானை,
எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

5

செப்ப(அ)ரிய அயனொடு மால் சிந்தித்தும் தெளிவு அரிய
அப் பெரிய திருவினையே, அறியாதே அரு வினையேன்-
ஒப்பு அரிய குணத்தானை, இணை இலியை, அணைவு இன்றி
எப் பரிசு பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

6

வல்-நாகம் நாண், வரை வில், அங்கி கணை, அரி பகழி,
தன் ஆகம் உற வாங்கிப் புரம் எரித்த தன்மையனை,
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து
என் ஆகப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

7

வன் சயம் ஆய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய
முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி தனை,
மின் செயும் வார்சடையானை, விடையானை, அடைவு இன்றி
என் செய நான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

8

முன் நெறி வானவர் கூடித் தொழுது ஏத்தும் முழு முதலை,
அந் நெறியை, அமரர் தொழும் நாயகனை, அடியார்கள்
செந் நெறியை, தேவர் குலக் கொழுந்தை, மறந்து இங்ஙனம் நான்
என் அறிவான் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

9

கற்று உள வான் கனி ஆய கண்ணுதலை, கருத்து ஆர
உற்று உளன் ஆம் ஒருவனை, முன் இருவர் நினைந்து இனிது ஏத்தப்-
பெற்றுளன் ஆம் பெருமையனை, பெரிது அடியேன் கை அகன்றிட்டு
எற்று உளனாய்ப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

10

ஏழ் இசை ஆய், இசைப் பயன் ஆய், இன் அமுது ஆய், என்னுடைய
தோழனும் ஆய், யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி,
மாழை ஒண் கண் பரவையைத் தந்து ஆண்டானை, மதி இல்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

11

வங்கம் மலி கடல் நஞ்சை, வானவர்கள் தாம் உய்ய,
நுங்கி, அமுது அவர்க்கு அருளி, நொய்யேனைப் பொருள் படுத்துச்
சங்கிலியோடு எனைப் புணர்த்த தத்துவனை, சழக்கனேன்
எங்கு உலக்கப் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?

12

பேர் ஊரும் மதகரியின் உரியானை, பெரியவர் தம்
சீர் ஊரும் திரு ஆரூர்ச் சிவன், அடியே திறம் விரும்பி
ஆரூரன்-அடித்தொண்டன், அடியன்-சொல் அகலிடத்தில்
ஊர் ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே.

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை,
பின்னை என் பிழையைப் பொறுப்பானை, பிழை எலாம் தவிரப் பணிப்பானை,
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை, எளி வந்த பிரானை,
அன்னம் வைகும் வயல்-பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

2

கட்டமும் பிணியும் களைவானை; காலற் சீறிய கால் உடையானை;
விட்ட வேட்கை வெந்நோய் களைவானை; விரவினால் விடுதற்கு அரியானை;
பட்ட வார்த்தை, பட நின்ற வார்த்தை, வாராமே தவிரப் பணிப்பானை;
அட்ட மூர்த்தியை; மட்டு அவிழ் சோலை ஆரூரானை; மறக்கலும் ஆமே? .

3

கார்க்குன்ற(ம்) மழை ஆய்ப் பொழிவானை, கலைக்கு எலாம் பொருள் ஆய் உடன்கூடிப்
பார்க்கின்ற(வ்) உயிர்க்குப் பரிந்தானை, பகலும் கங்குலும் ஆகி நின்றானை,
ஓர்க்கின்ற(ச்) செவியை, சுவை தன்னை, உணரும் நாவினை, காண்கின்ற கண்ணை,
ஆர்க்கின்ற(க்) கடலை, மலை தன்னை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

4

செத்த போதினில் முன் நின்று நம்மைச் சிலர்கள் கூடிச் சிரிப்பதன் முன்னம்,
வைத்த சிந்தை உண்டே; மனம் உண்டே; மதி உண்டே; விதியின் பயன் உண்டே!
“முத்தன், எங்கள் பிரான்” என்று வானோர் தொழ நின்ற(த்) திமில் ஏறு உடையானை,
அத்தன், எந்தைபிரான், எம்பிரானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

5

செறிவு உண்டேல், மனத்தால்-தெளிவு உண்டேல், தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல்,
மறிவு உண்டேல், மறுமைப் பிறப்பு உண்டேல், வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல்,
பொறிவண்டு யாழ் செய்யும் பொன்மலர்க் கொன்றை பொன் போலும் சடைமேல் புனைந்தானை
அறிவு உண்டே; உடலத்து உயிர் உண்டே; ஆரூரானை மறக்கலும் ஆமே? .

6

பொள்ளல் இவ் உடலைப் பொருள் என்று, பொருளும் சுற்றமும் போகமும் ஆகி,
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை,
“வள்ளல்! எம்தமக்கே துணை!” என்று நாள் நாளும்(ம்) அமரர் தொழுது ஏத்தும்
அள்ளல் அம் கழனிப் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே? .

7

கரி-யானை உரி கொண்ட கையானை, கண்ணின் மேல் ஒரு கண் உடையானை,
வரியானை, வருத்தம் களைவானை, மறையானை, குறை மாமதி சூடற்கு
உரியானை, உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை, உகந்து உள்கி நண்ணாதார்க்கு
அரியானை, அடியேற்கு எளியானை, ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

8

வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப் பெறும் வார்த்தையைக் கேட்டும்
நாள் நாளும் மலர் இட்டு வணங்கார்; நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்;
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன், கிளைக்கு எலாம் துணை ஆம் எனக் கருதி;
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன்; ஆரூரானை மறக்கலும் ஆமே? .

9

விடக்கையே பெருக்கிப் பலநாளும் வேட்கையால் பட்ட வேதனை தன்னைக்
கடக்கிலேன்; நெறி காணவும் மாட்டேன்; கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும்
இடக்(க்)கிலேன்; பரவைத் திரைக் கங்கைச் சடையானை, உமையாளை ஓர் பாகத்து
அடக்கினானை, அம் தாமரைப் பொய்கை ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

10

ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை, நச்சு அரவு ஆர்த்த
பட்டியை, பகலை, இருள் தன்னை, பாவிப்பார் மனத்து ஊறும் அத் தேனை,
கட்டியை, கரும்பின் தெளி தன்னை, காதலால் கடல் சூர் தடிந்திட்ட
செட்டி அப்பனை, பட்டனை, செல்வ ஆரூரானை, மறக்கலும் ஆமே? .

11

ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருள் ஆய் உடன் கூடி,
கார் ஊரும் கமழ் கொன்றை நல்மாலை முடியன், காரிகை காரணம் ஆக
ஆரூரை(ம்) மறத்தற்கு அரியானை, அம்மான் தன் திருப்பேர் கொண்ட தொண்டன்-
ஆரூரன்(ன்) அடிநாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர் தாமே .

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

கரையும், கடலும், மலையும், காலையும், மாலையும், எல்லாம்
உரையில் விரவி வருவான்; ஒருவன்; உருத்திரலோகன்;
வரையின் மடமகள் கேள்வன்; வானவர் தானவர்க்கு எல்லாம்
அரையன்; இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

2

“தனியன்” என்று எள்கி அறியேன்; தம்மைப் பெரிதும் உகப்பன்;
முனிபவர் தம்மை முனிவன்; முகம் பல பேசி மொழியேன்;
கனிகள் பல உடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

3

சொல்லில் குலா அன்றிச் சொல்லேன்; தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்;
கல்லில் வலிய மனத்தேன்; கற்ற பெரும் புலவாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான், அருமறை ஆறு அங்கம் ஓதும்
எல்லை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

4

நெறியும், அறிவும், செறிவும், நீதியும், நான் மிகப் பொல்லேன்;
மிறையும் தறியும் உகப்பன்; வேண்டிற்றுச் செய்து திரிவேன்;
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

5

நீதியில் ஒன்றும் வழுவேன்; நிட்கண்டகம் செய்து வாழ்வேன்;
வேதியர் தம்மை வெகுளேன்; வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்;
சோதியில் சோதி எம்மானை, சுண்ண வெண் நீறு அணிந்திட்ட
ஆதி, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

6

அருத்தம் பெரிதும் உகப்பேன்; அலவலையேன்; அலந்தார்கள்
ஒருத்தர்க்கு உதவியேன் அல்லேன்; உற்றவர்க்குத் துணை அல்லேன்;
பொருத்த மேல் ஒன்றும் இலாதேன்; புற்று எடுத்திட்டு இடம் கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

7

சந்தம் பல அறுக்கில்லேன்; சார்ந்தவர் தம் அடிச் சாரேன்;
முந்திப் பொரு விடை ஏறி மூ உலகும் திரிவானே,
கந்தம் கமழ் கொன்றை மாலைக் கண்ணியன், விண்ணவர் ஏத்தும்
எந்தை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

8

நெண்டிக் கொண்டேயும் கிலாய்ப்பன்; நிச்சயமே; இது திண்ணம்;
மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன்; மெய்ப்பொருள் அன்றி உணரேன்;
பண்டு அங்கு இலங்கையர் கோனைப் பருவரைக் கீழ் அடர்த்திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

9

நமர், பிறர், என்பது அறியேன்; நான் கண்டதே கண்டு வாழ்வேன்;
தமரம் பெரிதும் உகப்பன்; தக்க ஆறு ஒன்றும் இலாதேன்;
குமரன், திருமால், பிரமன் கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

10

ஆசை பல அறுக்கில்லேன்; ஆரையும் அன்றி உரைப்பேன்;
பேசில் சழக்கு அலால் பேசேன்; பிழைப்பு உடையேன், மனம் தன்னால்;
ஓசை பெரிதும் உகப்பேன்; ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்!

11

“எந்தை இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? என்று
சிந்தை செயும் திறம் வல்லான், திரு மருவும் திரள் தோளான்,
மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவல் ஆரூரன்
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே.

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருஆரூர்
வ.எண் பாடல்
1

அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி,
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்,
சிந்தை பராமரியா தென்திரு ஆரூர் புக்கு,
எந்தை பிரானாரை என்றுகொல் எய்துவதே?

2

நின்ற வினைக் கொடுமை நீங்க இருபொழுதும்
துன்று மலர் இட்டு, சூழும் வலம் செய்து,
தென்றல் மணம் கமழும் தென்திரு ஆரூர் புக்கு,
என் தன் மனம் குளிர என்றுகொல் எய்துவதே?

3

முன்னை முதல் பிறவி மூதறியாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுறவும்(ம்) ஒழிய,
செந்நெல் வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு,
என் உயிர்க்கு இன்னமுதை என்றுகொல் எய்துவதே?

4

நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆர் உயிரைக்
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய,
செல்வ வயல்-கழனித் தென்திரு ஆரூர் புக்கு,
எல்லை மிதித்து, அடியேன் என்றுகொல் எய்துவதே?

5

கடு வரி மாக் கடலுள் காய்ந்தவன் தாதையை, முன்;
சுடுபொடி மெய்க்கு அணிந்த சோதியை; வன்தலை வாய்
அடு புலி ஆடையனை; ஆதியை;-ஆரூர் புக்கு-
இடு பலி கொள்ளியை; நான் என்றுகொல் எய்துவதே?

6

சூழ் ஒளி, நீர், நிலம், தீ, தாழ் வளி, ஆகாசம்,
வான் உயர் வெங்கதிரோன், வண்தமிழ் வல்லவர்கள்
ஏழ் இசை, ஏழ் நரம்பின் ஓசையை;-ஆரூர் புக்கு-
ஏழ் உலகு ஆளியை; நான் என்றுகொல் எய்துவதே;

7

கொம்பு அன நுண் இடையாள் கூறனை, நீறு அணிந்த
வம்பனை, எவ் உயிர்க்கும் வைப்பினை, ஒப்பு அமராச்
செம்பொனை, நல்மணியை,-தென்திரு ஆரூர் புக்கு-
என்பொனை, என் மணியை, என்றுகொல் எய்துவதே?

8

ஆறு அணி நீள் முடிமேல் ஆடு அரவம் சூடிப்
பாறு அணி வெண்தலையில் பிச்சை கொள் நச்சு அரவன்,-
சேறு அணி தண்கழனித் தென்திரு ஆரூர் புக்கு-
ஏறு அணி எம் இறையை, என்றுகொல் எய்துவதே?

9

மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும், மா மலர்மேல்
அண்ணலும், நண்ண(அ)ரிய ஆதியை மாதினொடும்-
திண்ணிய மா மதில் சூழ் தென்திரு ஆரூர் புக்கு-
எண்ணிய கண் குளிர என்றுகொல் எய்துவதே?

10

மின் நெடுஞ்செஞ்சடையன் மேவிய ஆரூரை
நன்நெடுங் காதன்மையால் நாவலர்கோன் ஊரன்
பல்-நெடுஞ் சொல்மலர்கொண்டு இட்டன பத்தும் வல்லார்
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர்; புண்ணியரே.

திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
திருவாரூர்
வ.எண் பாடல்
1

மீளா அடிமை உமக்கே ஆள் ஆய், பிறரை வேண்டாதே,
மூளாத் தீப் போல் உள்ளே கனன்று, முகத்தால் மிக வாடி,
ஆள் ஆய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்
வாளா(ஆ)ங்கு இருப்பீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!

2

விற்றுக் கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு-அடிகேள்!-என் கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால், வாழ்ந்துபோதீரே!

3

அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல,
என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் விழுந்தால், வாழ்ந்துபோதீரே!

4

துருத்தி உறைவீர்; பழனம் பதியா, சோற்றுத்துறை ஆள்வீர்;
இருக்கை திரு ஆரூரே உடையீர்; மனமே என வேண்டா:
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்னக்கால்,
வருத்தி வைத்து, மறுமை பணித்தால், வாழ்ந்துபோதீரே!

5

செந் தண் பவளம் திகழும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
எம்தம் அடிகேள்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது
வந்து, “எம்பெருமான்! முறையோ?” என்றால், வாழ்ந்துபோதீரே!

6

தினைத்தாள் அன்ன செங்கால் நாரை சேரும் திரு ஆரூர்ப்
புனைத் தார் கொன்றைப் பொன் போல் மாலைப் புரிபுன் சடையீரே!
தனத்தால் இன்றி, தாம்தாம் மெலிந்து, தம் கண் காணாது,
மனத்தால் வாடி, அடியார் இருந்தால், வாழ்ந்துபோதீரே!

7

ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே!
ஏ, எம்பெருமான்! இதுவே ஆம் ஆறு, உமக்கு ஆட்பட்டோர்க்கு?
மாயம் காட்டி, பிறவி காட்டி, மறவா மனம் காட்டி,
காயம் காட்டி, கண் நீர் கொண்டால், வாழ்ந்துபோதீரே!

8

கழி ஆய், கடல் ஆய், கலன் ஆய், நிலன் ஆய், கலந்த சொல் ஆகி,-
இழியாக் குலத்தில் பிறந்தோம்-உம்மை இகழாது ஏத்துவோம்;
பழிதான் ஆவது அறியீர்: அடிகேள்! பாடும் பத்தரோம்;
வழிதான் காணாது, அலமந்து இருந்தால், வாழ்ந்துபோதீரே!

9

“பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது” என்பர், பிறர் எல்லாம்;
காய்தான் வேண்டில், கனிதான் அன்றோ, கருதிக் கொண்டக்கால்?
நாய்தான் போல நடுவே திரிந்தும், உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர்; திரு ஆரூரீர்! வாழ்ந்துபோதீரே!

10

செருந்தி செம்பொன்மலரும் சோலை இதுவோ, திரு ஆரூர்?
பொருந்தித் திரு மூலட்டான(ம்)மே இடமாக் கொண்டீரே;
இருந்தும், நின்றும், கிடந்தும், உம்மை இகழாது ஏத்துவோம்;
வருந்தி வந்தும், உமக்கு ஒன்று உரைத்தால், வாழ்ந்துபோதீரே!

11

கார் ஊர் கண்டத்து எண்தோள் முக்கண் கலைகள் பல ஆகி,
ஆரூர்த் திரு மூலட்டானத்தே அடிப்பேர் ஆரூரன்,
பார் ஊர் அறிய, என் கண் கொண்டீர்; நீரே பழிப்பட்டீர்;
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர்! வாழ்ந்துபோதீரே!