பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஒன்பதாம் தந்திரம் / மறைபொருட் கூற்று
வ.எண் பாடல்
1

காயம் பல கை கவறு ஐந்து கண் மூன்றா
ஆயம் பொருவது ஓர் ஐம்பத்து ஓர் அக்கரம்
ஏய பெருமான் இருந்து பொருகின்ற
மாயக் கவற்றின் மறைப்பு அறியேனே.

2

தூறு படர்ந்து கிடந்தது தூ நெறி
மாறிக் கிடக்கும் வகை அறிவார் இல்லை
மாறிக் கிடக்கும் வகை அறிவாளர்க்கு
ஊறிக் கிடந்தது என் உள் அன்பு தானே.

3

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்
சாறு படுவன நான்கு பனை உள
ஏறற்கு அரியது ஓர் ஏணி இட்டு அப்பனை
ஏறல் உற்றேன் கடல் ஏழும் கண்டேனே.

4

வழுதலை வித்து இடப் பாகல் முளைத்தது
புழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்தது
தொழுது கொண்டு ஓடினார் தோட்டக் குடி கள்
முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

5

ஐ என்னும் வித்தினில் ஆனை விளைப்பது ஓர்
செய் உண்டு செய்யின் தெளிவு அறிவார் இல்லை
மை அணி கண்டனன் மனம் பெறின் அந் நிலம்
பொய் ஒன்றும் இன்றிப் புக எளிது ஆமே.

6

பள்ளச் செய் ஒன்று உண்டு பாழச் செய் இரண்டு உள
கள்ளச் செய் அங்கே கலந்து கிடந்தது
உள்ளச் செய் அங்கே உழவு செய்வார் கட்கு
வெள்ளச் செய் ஆகி விளைந்தது தானே.

7

மூ அணை யேரும் உழுவது முக் காணி
தாம் அணி கோலித் தறிஉறிப் பாய்ந்திடு
நாவணை கோலி நடுவில் செறு உழார்
கால் அணை கோலிக் களர் உழுவாரே.

8

ஏற்றம் இரண்டு உள ஏழு துரவு உள
மூத்தான் இறைக்க இளையான் படுத்த நீர்
பாத்தியில் பாயாது பாழ்ப் பாய்ந்து போயிடில்
கூத்தி வளர்த்தது ஓர் கோழிப் புள் ஆமே.

9

பட்டிப் பசுக்கள் இருபத்து நால் உள
குட்டிப் பசுக்கள் ஓர் ஏழு உள ஐந்து உள
குட்டிப் பசுக்கள் குடப் பால் சொரியினும்
பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.

10

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நால் உள
ஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
காற்றுப் பசுக்கள் கறந்து உண்ணும் காலத்து
மாற்றுப் பசுக்கள் வரவு அறியோமே.

11

தட்டான் அகத்தில் தலை ஆன மச்சின் மேல்
மொட்டாய் எழுந்தது செம் பால் மலர்ந்தது
வட்டம் பட வேண்டி வாய்மை மடித்திட்டுத்
தட்டான் அதனைத் தகைந்து கொண்டானே.

12

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனி
திரிக்கின்ற வொட்டம் சிக் கெனக் கட்டி
வரிக்கின்ற நல்லான் கறவையைப் பூட்டில்
விரிக்கின்ற வெள்ளரி வித்து வித்து ஆமே.

13

இடாக் கொண்டு தூவி எரு இட்டு வித்திக்
கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையை
மிடாக் கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார்
கிடாக் கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.

14

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்து அது
விளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்
விளைந்து விளைந்து விளைந்து கொள்வார்க்கு
விளைந்து கிடந்தது மேவு முக் காதமே.

15

களர் உழுவார்கள் கருத்தை அறியோம்
களர் உழுவார்கள் கருதலும் இல்லை
களர் உழுவார்கள் களரின் முளைத்த
வளர் இள வஞ்சியின் மாய்தலும் ஆமே.

16

கூப்பிடு கொள்ளாக் குறுநரிக் கொட்டகத்து
ஆப்பு இடு பாசத்தை அங்கி உள் வைத்து இட்டு
நாள் பட நின்று நலம் புகுந்து ஆய் இழை
ஏற்பட இல்லத்து இனிது இருந்தானே.

17

மலை மேல் மழை பெய்ய மான் கன்று துள்ளக்
குலை மேல் இருந்த கொழும் கனி வீழ
உலை மேல் இருந்த உறுப்பு எனக் கொல்லன்
முலை மேல் அமிர்தம் பொழிய வைத்தானே.

18

பார்ப்பான் அகத்திலே பால் பசு ஐந்து உண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலாச் சொரியுமே.

19

ஆ மாக்கள் ஐந்தும் அரி ஏறு முப்பதும்
தே மா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்
தாமாக் குரங்கு கொளில் தம் மனத்து உள்ளன
மூவாக் கடா விடின் மூட்டு கின்றாரே.

20

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்
தெருளாத கன்னி தெளிந்து இருந்து ஓத
மலராத பூவின் மணத்தின் மதுவைப்
பிறவாத வண்டு மணம் உண்ட வாறே.

21

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய் வித்தும்
கூகின்ற நாவலின் கூழைத் தரும் கனி
ஆகின்ற பைங்கூழ் அவை உண்ணும் ஐவரும்
வேகின்ற கூரை விருத்தி பெற்றாரே.

22

மூங்கில் முளையில் எழுந்தது ஓர் வேம்பு உண்டு
வேம்பினில் சார்ந்து கிடந்த பனையில் ஓர்
பாம்பு உண்டு பாம்பைத் துரத்தின் பார் இன்றி
வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.

23

பத்துப் பரும் புலி யானை பதினைந்து
வித்தகர் ஐவர் வினோதகர் ஈர் எண்மர்
அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்
அத்தலை ஐவர் அமர்ந்து நின்றாரே.

24

இரண்டு கடா உண்டு இவ்வூரின் உள்ளே
இரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்
இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்
இரண்டு கடாவும் ஒரு கடா ஆமே.

25

ஒத்த மனக் கொல்லை உள்ளே சமன் கட்டிப்
பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்
முத்தக் கயிறு ஆக மூவர்கள் ஊரின் உள்
நித்தம் பொருது நிரம்ப நின்றாரே.

26

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுகல் உறுதலும்
கூகையைக் கண்டு எலி கூப்பிடும் ஆறே.

27

குலைக்கின்ற நல் நகை ஆம் கொங்கு உழக்கின்
நிலைக்கின்ற வெள் எலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறம் எனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற ஆறே.

28

காடுபுக்கு ஆர் இனிக் காணார் கடு வெளி
கூடு புக்கான் அவை ஐந்து குதிரையும்
மூடுபுக்கு ஆனவை ஆறு உள ஒட்டகம்
மூடு புகா விடின் மூவணை ஆமே.

29

கூறையும் சோறும் குழாய் அகத்து எண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையில் உற்ற பறக்கின்ற சீலை போல்
ஆறைக் குழியில் அழுந்து கின்றாரே.

30

துருத்தியுள் அக்கரை தோன்று மலைமேல்
விருத்தி கண் காணிக்கப் போவார் முப்போதும்
வருத்தி உள் நின்ற மலையைத் தவிர்ப்பான்
ஒருத்தி உள்ளாள் அவர் ஊர் அறியோமே.

31

பருந்தும் கிளியும் படு பறை கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெரும் தவப் பூதம் பெறல் உரு ஆகும்
இருந்திய பேற்றினில் இன்புறுவாரே.

32

கூடும் பறவை இரை கொத்தி மற்று அதன்
ஊடு புக்கு உண்டி அறுக்குறில் என் ஒக்கும்
சூடு எறி நெய் உண்டு மை கான்றிடு கின்ற
பாடு அறிவார்க்குப் பயன் எளிது ஆமே.

33

இலை இல்லை பூ உண்டு இன வண்டு இங்கு இல்லை
தலை இல்லை வேர் உண்டு தாள் இல்லை பூவின்
குலை இல்லை கொய்யும் மலர் உண்டு சூடும்
தலை இல்லை தாழ்ந்த கிளை புலராதே.

34

அக்கரை நின்றது ஓர் ஆல மரம் கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன் கொள்வார்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டு போய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.

35

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பு இடு கள்ளர் கலந்து நின்றார் உளர்
காப்பு இடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்து இட்டுக்
கூப்பிடு மீண்டது ஓர் கூரை கொண்டாரே.

36

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்து இடை
எட்டியும் வேம்பும் இனியது ஓர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்து உண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே.

37

பெடை வண்டும் ஆண் வண்டும் பீடிகை வண்ணக்
குடை கொண்ட பாசத்துக் கோலம் உண்டானும்
கடை வண்டு தான் உண்ணும் கண் கலந்து இட்ட
பெடை வண்டு தான் பெற்றது இன்பமும் ஆமே.

38

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்க வல்லார் கட்குக்
குட்டத்தில் இட்டது ஓர் கொம்மட்டி ஆமே.

39

ஆறு பறவைகள் ஐந்து அகத்து உள்ளன
நூறு பறவை நுனிக் கொம்பின் மேலன
ஏறும் பெரும் பதி ஏழும் கடந்த பின்
மாறுதல் இன்றி மனை புகல் ஆமே.

40

கொட்டனம் செய்து குளிக்கின்ற கூவல் உள்
வட்டனப் பூமி மருவி வந்து ஊறிடும்
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமி உள்
ஒட்டணம் செய்து ஒளி யாவர்க்கும் ஆமே.

41

ஏழு வளை கடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழை வளி
தாழும் இரு நிலம் தன்மை அது கண்டு
வாழ நினைக்கில் அது ஆலயம் ஆமே.

42

ஆலிங்கனம் செய்து அகம் சுடச் சூலத்துச்
சால் இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோல் இங்கு அமைத்த பின் கூபப் பறவை கண்
மால் இங்கன் வைத்தது முன் பின் வழியே.

43

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிது என்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிது என்பர் ஈசன் அருளே.

44

கயல் ஒன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயல் ஒன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறை ஒன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறை ஒன்று கண்ட துருவம் பொன் ஆமே.

45

கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படுகின்றாற் போல் அல்ல நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாறே.

46

கொல்லை முக் காதமும் காடு அரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இரு நெறி
எல்லை மயங்காது இயங்க வல்லார்கட்கு
ஒல்லை கடந்து சென்று ஊர் புகல் ஆமே.

47

உழவு ஒன்று வித்து ஒருங்கின காலத்து
எழு மழை பெய்யாது இரு நிலச் செவ்வி
தழுவி வினை சென்று தான் பய வாது
வழுவாது போவன் வளர் சடையோனே.

48

பதுங்கிலும் பாய் புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண் கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார் களியார் அமுது ஊறப்
பொதுங்கிய ஐவரைப் போய் வளைத் தானே.

49

தோணி ஒன்று ஏறித் தொடர்ந்து கடல் புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர் மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலை தளர்ந்து
ஆலிப் பழம் போல் அளிக்கின்ற அப்பே.

50

முக் காதம் ஆற்றிலே மூன்று உள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு மலர் உண்டு நடுவு நின்றாரே.

51

அடியும் முடியும் அமைந்தது ஓர் ஆத்தி
முடியும் நுனியும் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐ ஐந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ்வாறே.

52

பன்றியும் பாம்பும் பசு முசு வானரம்
தென்றி கிடந்த சிறு நரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்த பின்
குன்றி நிறையைக் குறைக் கின்ற வாறே.

53

மொட்டித்து எழுந்தது ஓர் மொட்டு உண்டு மொட்டினைக்
கட்டு விட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்று விட்டு அம்மனை பாழ் பட நோக்கினால்
கட்டு விட்டார்க்கு அன்றிக் காண ஒண்ணாதே.

54

நீர் இன்றிப் பாயும் நிலத்தினில் பச்சை ஆம்
யாவரும் என்றும் அறிய வல்லார் இல்லை
கூரு மழை பொழியாது பொழி புனல்
தேரின் இந் நீர்மை திடரில் நில்லாதே.

55

கூகை குருந்தம் அது ஏறிக் குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.

56

வாழையும் சூரையும் வந்து இடம் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிது என்பர்
வாழையும் சூரையும் வன் துண்டம் செய்திட்டு
வாழை இடம் கொண்டு வாழ்கின்ற வாறே.

57

நிலத்தைப் பிளந்து நெடும் கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழு மீன்
விலக்குமின் யாவர்க்கும் வேண்டில் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.

58

தளிர்க்கும் ஒரு பிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பது ஓர் சங்கு உண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்து ஒன்று ஆய்ந்து கொள்வார்க்கே.

59

குடை விட்டுப் போந்தது கோயில் எருமை
படை கண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடும் கடை ஐந்தொடு நான்கே.

60

போகின்ற எட்டும் புகுகின்ற பத்து எட்டும்
ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடா விடில் பன்றியும் ஆமே.

61

பாசி படர்ந்து கிடந்த குளத்து இடைக்
கூசி இருக்கும் குருகு இரை தேர்ந்து உண்ணும்
தூசி மறவன் துணை வழி எய்திடப்
பாசம் கிடந்து பதைக்கின்ற வாறே.

62

கும்ப மலைமேல் எழுந்தது ஓர் கொம்பு உண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பது ஓர் காற்று உண்டு
வம்பாய் மலர்ந்தது ஓர் பூ உண்டு அப் பூவுக்குள்
வண்டாய்க் கிடந்து மணம் கொள்வன் ஈசனே.

63

வீணையும் தண்டும் விரவி இசை முரல்
தாணுவும் மேவித் தகு தலைப் பெய்தது
வாணிபம் சிக் என்று அது அடையா முன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே.

64

கொங்கு புக்காரொடு வாணிபம் செய்தது
அங்கு புக்கால் அன்றி ஆய்ந்து அறிவார் இல்லை
திங்கள் புக்கால் இருள் ஆவது அறிந்திலர்
தங்கு புக்கார் சிலர் தாபதர் தாமே.

65

போதும் புலர்ந்தது பொன் நிறம் கொண்டது
தாது அவிழ் புன்னை தயங்கும் இரு கரை
ஏதம் இல் ஈசன் இயங்கு நெறி இது
மாதர் இருந்தோர் மண்டலம் தானே.

66

கோம் உற்று அமரும் குடிகளும் தம்மிலே
காம் உற்று அகத்து இடுவர் கடை தொறும்
ஈவற்ற எல்லை விடாது வழி காட்டி
யாம் உற்ற தட்டினால் ஐந்து உண்ணலாமே.

67

தோட்டத்தில் மாம் பழம் தொண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரி அழைத்து என் செய்யும்
மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்
காட்டிக் கொடுத்தவர் கை விட்ட வாறே.

68

புலர்ந்தது போது என்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போது என்று பூங்கொடி புல்லிப்
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே.

69

போது இரண்டு ஓதிப் புரிந்து அருள் செய்திட்டு
மாது இரண்டு ஆகி மகிழ்ந்து உடனே நிற்கும்
தாது இரண்டு ஆகிய தண்ணம் பறவைகள்
வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறு அன்றே.

70

தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்து நின்று ஐவர் கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழி இடை ஆற்று இடை
ஆணி கலங்கில் அது இது ஆமே.