பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

மானக்கஞ்சாற நாயனார் புராணம்
வ.எண் பாடல்
1

மேல் ஆறு செஞ்சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது
நூலாறு நன்கு உணர்வார் தாம் பாடும் நோன்மையது;
கோல் ஆறு தேன் பொழியக் கொழுங் கனியின் சாறு ஒழுகும்
கால் ஆறு வயல் கரும்பின் கழழ் சாறூர் கஞ்சாறூர்.

2

கண் நீலக் கடைசியர்கள் கடுங் களையில் பிழைத்து ஒதுங்கி,
உண்ணீர்மைப் புணர்ச்சிக் கண் உறைத்து மலர்க்கண் சிவக்கும்
தண்ணீர் மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலை வணங்கும்
மண் நீர்மை நலம் சிறந்த வள வயல்கள் உள அயல்கள்.

3

புயல் காட்டும் கூந்தல் சிறு புறம் காட்டப் புன மயிலின்
இயல் காட்டி இடை ஒதுங்க இனம் காட்டும் உழத்தியர்கண்
முயல் காட்டும் மதி தோற்கும் முகம் காட்டக் கண் மூரிக்
கால் காட்டும் தடங்கள் பல; கதிர்காட்டும் தடம் பணைகள்.

4

சேறு அணி தண் பழன வயல் செழுநெல்லின் கொழுங் கதிர் போய்
வேறு அருகு மிடை வேலிப் பைங்கமுகின் மிடறு உரிஞ்சி,
மாறு எழு திண் குலை வளைப்ப வண்டலை தண் தலை உழவர்
தாறு அரியும் நெடும் கொடுவாள் அனைய வுள தனி இடங்கள்.

5

பாங்கு மணிப் பல வெயிலும் சுல வெயிலும் உள மாடம்
ஞாங்கர் அணி துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம்
ஓங்கு நிலைத் தோரணமும் பூரண கும்பமும் உளவால்
பூங்கணை வீதியில் அணைவோர் புலம் மறுகும் சில மறுகு.

6

மனை சாலும் நிலை அறத்தின் வழிவந்து வளம் பெருகும்
வினை சாலும் உழவு தொழில் மிக்க பெரும் குடி துவன்றிப்
புனை சாயல் மயில் அனையார் நடம் புரியப் புகல் முழவம்
கனை சாறு மிடை வீதிக் கஞ்சாறு விளங்கியதால்.

7

அப் பதியில் குலப் பதியாய் அரசர் சேனா பதியாம்
செப்ப வரும் குடி விளங்கத் திரு அவதாரம் செய்தார்;
மெய்ப் பொருளை அறிந்து உணர்ந்தார்; விழுமிய வேளாண் குடிமை
வைப்பு அனைய மேன்மையினார்; மானக்கஞ் சாறனார்.

8

பணிவு உடைய வடிவு உடையார்; பணியின் ஒடும் பனி மதியின்
அணி உடைய கடை முடியார்க்கு ஆளாகும் பதம் பெற்ற
தணிவுஇல் பெரும் பேறுடையார்; தம் பெருமான் கழல் சார்ந்த
துணிவு உடைய தொண்டர்க்கே ஏவல் செயும் தொழில் பூண்டார்.

9

மாறு இல் பெரும் செல்வத்தின் வளம் பெருக மற்றது எலாம்
ஆறு உலவும் சடைக் கற்றை அந்தணர் தம் அடியாராம்
ஈறு இல் பெருந்திரு உடையார் உடையார் என்று யாவையும் நேர்
கூறுவதன்முன் அவர் தம் குறிப்பு அறிந்து கொடுத்துள்ளார்.

10

விரி கடல் சூழ் மண் உலகை விளக்கிய இத் தன்மையர் ஆம்
பெரியவர்க்கு முன் சில நாள் பிள்ளைப் பேறு இன்மையினால்,
அரி அறியா மலர்க் கழல்கள் அறியாமை அறியாதார்
வரு மகவு பெறல் பொருட்டு மனத்து அருளால் வழுத்தினார்.

11

குழைக் கலையும் வடி காதில் கூத்தனார் அருளாலே
மழைக்கு உதவும் பெரும் கற்பின் மனைக் கிழத்தியார் தம்பால்
இழைக்கும் வினைப் பயன் சூழ்ந்த இப் பிறவிக் கொடும் சூழல்
பிழைக்கும் நெறி தமக்கு உதவப் பெண் கொடியைப் பெற்று எடுத்தார்.

12

பிறந்த பெரு மகிழ்ச்சியினால் பெரு மூதூர் களி சிறப்பச்
சிறந்த நிறை மங்கல தூரியம் முழங்கத் தேவர் பிரான்
அறம் தலை நின்று அவர்க் கெல்லாம் அளவு இல் வளத்து அருள் பெருக்கிப்
புறந் தருவார் போற்றி இசைப்பப் பொன் கொடியை வளர்க்கின்றார்.

13

காப்பு அணியும் இளம் குழவிப் பதம் நீங்கிக் கமழ் சுரும்பின்
பூப் பயிலும் சுருள் குழலும் பொலம் குழையும் உடன் தாழ,
யாப்பு உறும் மென் சிறு மணிமேகலை அணி சிற்றாடை உடன்,
கோப்பு அமை கிண்கிணி அசையக் குறும் தளிர் மெல் அடி ஒதுங்கி.

14

புனை மலர் மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண்
மனை அகத்து மணிமுன்றில் மணல் சிற்றில் இழைத்து, மணிக்
கனை குரல் நூபுரம் அலையக் கழல் முதலாப் பயின்று, முலை
நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அப் பெண் அமுதம்.

15

உறு கவின் மெய்ப் புறம் பொலிய ஒளி நுசுப்பை முலை வருத்த,
முறுவல் புறம் அலராத முகில் முத்த நகை என்னும்,
நறு முகை மென் கொடி மருங்குல் நளிர்ச் சுருள் அந்தளிர்ச் செங்கை
மறு இல் குலக்கொழுந்தினுக்கு மணப் பருவம் வந்து அணைய

16

திருமகட்கு மேல் விளங்கும் செம்மணியின் தீபம் எனும்
ஒரு மகளை, மண் உலகில் ஓங்கு குல மரபினராய்க்
கரு மிடற்று மறையவனார் தமர் ஆய கழல் ஏயர்
பெரு மகற்கு மகள் பேச வந்து அணைந்தார் பெரு முதியோர்.

17

வந்த மூது அறிவோரை மானக்கஞ் சாறனார்
முந்தை முறைமையின் விரும்பி, மொழிந்த மணத் திறம் கேட்டே,
எம் தமது மரபினுக்குத் தரும் பரிசால் ஏயும் எனச்
சிந்தை மகிழ்வு உற உரைத்து மணம் நேர்ந்து செலவிட்டார்.

18

சென்றவரும் கஞ்சாறர் மணம் இசைந்தபடி செப்பக்
குன்று அனைய புயத்து ஏயர் கோனாரும் மிக விரும்பி,
நின்ற நிலைமையின் இரண்டு திறத்தார்க்கும் நேர்வு ஆய
மன்றல் வினை மங்கல நாள் மதிநூல் வல்லவர் வகுத்தார்.

19

மங்கலம் ஆம் செயல் விரும்பி, மகள் பயந்த வள்ளலார்
தம் குலம் நீள் சுற்றம் எலாம் தயங்கு பெரும் களி சிறப்பப்
பொங்கிய வெண் முளைப் பெய்து, பொலம் கலங்கள் இடை நெருங்கக்
கொங்கு அலர் தண் பொழில் மூதூர் வதுவை முகம் கோடித்தார்.

20

கஞ்சாறர் மகள் கொடுப்பக் கைப் பிடிக்க வருகின்ற
எஞ்சாத புகழ்ப் பெருமை ஏயர் குலப் பெருமானும்
தம் சால்பு நிறை சுற்றம் தலை நிறைய, முரசு இயம்ப,
மஞ்சு ஆலும் மலர்ச் சோலைக் கஞ்சாற்றின் மருங்கு அணைய.

21

வள்ளலார் மணம் அவ் ஊர் மருங்கு அணையா முன் மலர்க்கண்
ஒள் இழையைப் பயந்தார் தம் திரு மனையில் ஒரு வழியே,
தெள்ளுதிரை நீர் உலகம் உய்வதற்கு, மற்று அவர்தம்
உள்ள நிலைப் பொருளாய உம்பர் பிரான் தாம் அணைவார்.

22

முண்டம் நிறை நெற்றியின் மேல் முண்டித்த திருமுடியில்
கொண்ட சிகை முச்சியின் கண் கோத்து அணிந்த என்பு மணி
பண்டு ஒருவன் உடல் அங்கம் பரித்த நாள் அது கடைந்த
வெண் தரளம் எனக் காதின் மிசை அசையும் குண்டலமும்.

23

அவ் என்பின் ஒளி மணிக் கோத்து அணிந்த திருத் தாழ்வடமும்
பைவன் பேர் அரவு ஒழியத் தோளில் இடும் பட்டிகையும்
மை வந்த நிறக் கேச வடப் பூணும் நூலும் மனச்
செவ் அன்பர் பவம் மாற்றும் திரு நீற்றுப் பொக்கணமும்.

24

ஒரு முன் கைத் தனி மணி கோத்து அணிந்த ஒளிர் சூத்திரமும்
அரு மறை நூல் கோவணத்தின் மிசை அசையும் திரு உடையும்
இரு நிலத்தின் மிசை தோய்ந்த எழுத அரிய திருவடியும்
திருவடியில் திருப் பஞ்ச முத்திரையும் திகழ்ந்து இலங்க

25

பொடி மூடு தழல் என்னத் திரு மேனி தனில் பொலிந்த
படி நீடு திருநீற்றின் பரப்பு அணிந்த பான்மையர் ஆய்க்
கொடி நீடு மறுகு அணைந்து, தம்முடைய குளிர் கமலத்து
அடி நீடும் மனத்து அன்பர் தம் மனையின் அகம் புகுந்தார்.

26

வந்து அணைந்த மா விரத முனிவரைக் கண்டு எதிர் எழுந்து
சிந்தை களி கூர்ந்து மகிழ் சிறந்த பெருந் தொண்டனார்,
எந்தை பிரான் புரி தவத்தோர் இவ் இடத்தே எழுந்து அருள,
உய்ந்து ஒழிந்தேன் அடியேன்! உன்று உருகிய அன்பொடு பணிந்தார்.

27

நற்றவர் ஆம் பெருமானார் நலம் மிகும் அன்பரை நோக்கி,
உற்ற செயல் மங்கலம் இங்கு ஒழுகுவது என் என அடியேன்
பெற்றது ஒரு பெண் கொடி தன் வதுவை எனப் பெருந்தவரும்
மற்று உமக்குச் சோபனம் ஆகுவது என்று வாய் மொழிந்தார்.

28

ஞானம் செய்தவர் அடி மேல் பணிந்து மனை அகம் நண்ணி,
மானக்கஞ் சாறனார் மணக் கோலம் புனைந்து இருந்த
தேன் நக்க மலர்க் கூந்தல் திரு மகளைக் கொண்டு அணைந்து,
பானல் கந்தரம் மறைத்து வரும் அவரைப் பணிவித்தார்.

29

தம் சரணத்து இடைப் பணிந்து தாழ்ந்து எழுந்த மடக் கொடி தன்
மஞ்சு தழைத்து என வளர்ந்த மலர்க் கூந்தல் புறம் நோக்கி,
அஞ்சலி மெய்த் தொண்டரைப் பார்த்து, அணங்கு இவள் தன் மயிர் நமக்குப்
பஞ்ச வடிக்கு ஆம் என்றார்; பரவ அடித் தலம் கொடுப்பார்.

30

அருள் செய்த மொழி கேளா, அடல் சுரிகைதனை உருவிப்
பொருள் செய்தாம் எனப் பெற்றேன் எனக் கொண்டு, பூங்கொடி தன்
இருள் செய்த கரும் கூந்தல் அடியில் அரிந்து, எதிர் நின்ற
மருள் செய்த பிறப்பு அறுப்பார் மலர்க் கரத்தின் இடை நீட்ட.

31

வாங்குவார் போல் நின்ற மறைப் பொருளாம் அவர் மறைந்து,
பாங்கின் மலை வல்லியுடன் பழைய மழவிடை யேறி,
ஓங்கிய விண் மிசை வந்தார்; ஒளி விசும்பின் நிலம் நெருங்கத்
தூங்கிய பொன் மலர் மாரி; தொழும்பர் தொழுது எதிர் விழுந்தார்.

32

விழுந்து எழுந்து மெய்ம் மறந்த மெய் அன்பர் தமக்கு, மதிக்
கொழுந்து அலைய விழும் கங்கை குதித்த சடைக் கூத்தனார்
எழும் பரிவு நம் பக்கல் உனக்கு இருந்த பரிசு இந்தச்
செழும் புவனங்களில் ஏறச் செய்தோம் என்று அருள் செய்தார்.

33

மருங்கு பெரும் கண நாதர் போற்றி இசைப்ப, வானவர்கள்
நெருங்க, விடை மேல் கொண்டு நின்றவர் முன் நின்றவர்தாம்
ஒருங்கிய நெஞ்சொடு கரங்கள் உச்சியின் மேல் குவித்து, ஐயர்
பெரும் கருணைத் திறம் போற்றும் பெரும் பேறு நேர் பெற்றார்.

34

தொண்டனார் தமக்கு அருளிச் சூழ்ந்து இமையோர் துதி செய்ய,
இண்டை வார் சடை முடியார் எழுந்து அருளிப் போயினார்;
வண்டுவார் குழல் கொடியைக் கைப் பிடிக்க மணக் கோலம்
கண்டவர்கள் கண் களிப்பக் கலிக் காமனார் புகுந்தார்.

35

வந்து அணைந்த ஏயர் குல மன்னவனார் மற்று அந்தச்
சிந்தை நினைவு அரிய செயல் செறிந்தவர் பால் கேட்டருளிப்
புந்தியினில் மிக உவந்து, புனிதனார் அருள் போற்றிச்
சிந்தை தளர்ந்து அருள் செய்த திருவாக்கின் திறம் கேட்டு.

36

மனம் தளரும் இடர் நீங்கி, வானவர் நாயகர் அருளால்
புனைந்த மலர்க் குழல் பெற்ற பூங்கொடியை மணம் புணர்ந்து,
தனம் பொழிந்து பெரு வதுவை உலகெலாம் தலை சிறப்ப
இனம் பெருகத் தம்முடைய எயின் மூதூர் சென்று அணைந்தார்.

37

ஒரு மகள் கூந்தல் தன்னை வதுவை நாள் ஒருவர்க்கு ஈந்த
பெருமையார் தன்மை போற்றும் பெருமை என் அளவிற்று ஆமே?
மருவிய கமரில் புக்க மா வடு விடேல் என் ஓசை
உரிமையால் கேட்க வல்லார் திறம் இனி உரைக்கல் உற்றேன்.