பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சீரில் நீடிய செம்பியர் பொன்னி நல் நாட்டுக் காரின் மேவிய களி அளி மலர்ப் பொழில் சூழ்ந்து தேரின் மேவிய செழு மணிவீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமை சேர் பதி பழையாறை.
மன்னும் அப் பதி வணிகர் தம் குலத்தினில் வந்தார்; பொன்னும் முத்தும் நல் மணிகளும் பூந் துகில் முதலா எந் நிலத்தினும் உள்ளன வரும் வளத்து இயல்பால் அந் நிலைக்கண் மிக்கவர் அமர் நீதியார் என்பார்.
சிந்தை செய்வது சிவன் கழல் அல்லது ஒன்று இல்லார் அந்தி வண்ணர் தம் அடியவர்க்கு அமுது செய்வித்துக் கந்தை, கீள் உடை கோவணம் கருத்து அறிந்து உதவி வந்த, செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்.
முக்கண் நக்கர் ஆம் முதல்வனார் அவர் திரு நல்லூர் மிக்க சீர் வளர் திருவிழா விருப்புடன் வணங்கித் தக்க அன்பர்கள் அமுது செய் திருமடம் சமைத்தார்; தொக்க சுற்றமும் தாமும் வந்து அணைந்தனர் தூயோர்.
மருவும் அன்பொடு வணங்கினர் மணி கண்டர் நல்லூர்த் திரு விழா அணி சேவித்துத் திரு மடத்து அடியார் பெருகும் இன்பமோடு அமுது செய்திட அருள் பேணி உருகு சிந்தையின் மகிழ்ந்து உறை நாள் இடை ஒருநாள்.
பிறைத் தளிர்ச் சடைப் பெருந்தகைப் பெரும் திரு நல்லூர்க் கறைக் களத்து இறை கோவணப் பெருமை முன் காட்டி, நிறைத்த அன்பு உடைத் தொண்டர்க்கு நீடு அருள் கொடுப்பான் மறைக் குலத்து ஒரு பிரமசாரியின் வடிவு ஆகி.
செய்ய புன் சடை கரந்தது ஓர் திருமுடிச் சிகையும் சைவ வெண் திரு நீற்று முண்டகத்து ஒளித் தழைப்பும் மெய்யின் வெண் புரி நூலுடன் விளங்கும் மான் தோலும் கையில் மன்னிய பவித்திர மரகதக் கதிரும்.
முஞ்சி நாண் உற முடிந்தது சாத்திய அரையில் தஞ்ச மா மறைக் கோவண ஆடையின் அசைவும் வஞ்ச வல் வினைக் கறுப்பு அறும் மனத்து அடியார்கள் நெஞ்சில் நீங்கிடா அடி மலர் நீள் நிலம் பொலிய.
கண்டவர்க்கு உறு காதலின் மனம் கரைந்து உருகத் தொண்டர் அன்பு எனும் தூநெறி வெளிப் படுப்பார் ஆய்த் தண்டின் மீது இரு கோவணம் நீற்றுப்பை தருப்பை கொண்டு வந்து அமர் நீதியார் திரு மடம் குறுக.
வடிவு காண்டலும் மனத்தினும் மிக முகம் மலர்ந்து கடிது வந்து எதிர் வணங்கி இம் மடத்தினில் காணும் படி இலாத நீர் அணைய முன் பயில் தவம் என்னோ அடியனேன் செய்தது?’ என்றனர் அமர்நீதி அன்பர்.
பேணும் அன்பரை நோக்கி, ‘நீர் பெருகிய அடியார்க்கு ஊணும் மேன்மையில் ஊட்டி, நல் கந்தை, கீள் உடைகள் யாணர் வெண் கிழிக் கோவணம், ஈவது கேட்டுக் காண வந்தனம் என்றனன் கண் நுதல் கரந்தோன்.
என்று தம்பிரான் அருள் செய ‘இத் திரு மடத்தே நன்று நான் மறைப் பெருந்தவர் அமுது செய்து அருளத் துன்று வேதியர் தூய்மையின் அமைப்பதும் உளதால் இன்று நீரும் இங்கு அமுது செய்து அருளும்’ என்று இறைஞ்ச.
வணங்கும் அன்பரை நோக்கி அம் மறையவர் இசைந்தே ‘அணங்கு நீர்ப் பொன்னி ஆடி நான் வர மழை வரினும் உணங்கு கோவணம் வைத்து நீர் தாரும்’ என்று ஒரு வெண் குணம் கொள் கோவணம் தண்டினில் அவிழ்த்து அது கொடுப்பார்.
‘ஓங்கு கோவணப் பெருமையை உள்ளவாறு உமக்கே ஈங்கு நான் சொல வேண்டுவது இல்லை; நீர் இதனை வாங்கி நான் வரும் அளவும் உம்மிடத்து இகழாதே ஆங்கு வைத்து நீர் தாரும்’ என்று அவர் கையில் கொடுத்தார்.
கொடுத்த கோவணம் கைக் கொண்டு கோது இலா அன்பர் ‘கடுப்பில் இங்கு எழுந்து அருளும் நீர் குளித்து’ எனக் கங்கை மடுத்த தும்பிய வளர் சடை மறைத்த அம் மறையோர், அடுத்த தெண் திரைப் பொன்னி நீர் ஆட என்று அகன்றார்.
தந்த கோவணம் வாங்கிய தனிப் பெரும் தொண்டர் முந்தை அந்தணர் மொழி கொண்டு முன்பு தாம் கொடுக்கும் கந்தை, கீள் உடை, கோவணம் அன்றி, ஓர் காப்புச் சிந்தை செய்து வேறு இடத்து ஒரு சேமத்து வைத்தார்.
போன வேதியர் வைத்த கோவணத்தினைப் போக்கிப் பானல் அம் துறைப் பொன்னி நீர் படிந்து வந்தாரோ? தூநறும் சடைக் கங்கை நீர் தோய்ந்து வந்தாரோ? வானம் நீர் மழை பொழிந்திட நனைந்து வந்து அணைந்தார்.
கதிர் இளம் பிறைக் கண்ணியர் நண்ணிய பொழுதில், முதிரும் அன்பு உடைத் தொண்டர் தாம் முறைமையின் முன்னே, அதிக நன்மையின் அறு சுவைத் திரு அமுது ஆக்கி, எதிர் எழுந்து சென்று இறைஞ்சிட, நிறைந்த நூல் மார்பர்.
தொண்டர் அன்பு எனும் தூய நீர் ஆடுதல் வேண்டி, ‘மண்டு தண் புனல் மூழ்கிய ஈரத்தை மாற்றத் தண்டின் மேல் அதும் ஈரம்; நான் தந்த கோவணத்தைக் கொண்டு வாரும்’ என்று உரைத்தனர்; கோவணக் கள்வர்.
ஐயர் கைதவம் அறிவுறாது அவர் கடிது அணுகி, எய்தி, நோக்கு உறக் கோவணம் இருந்த வேறு இடத்தில் மை இல் சிந்தையர் கண்டிலர் ‘வைத்த கோவணம் முன் செய்தது என்?’ என்று திகைத்தனர் தேடுவார் ஆனார்.
பொங்கு வெண் கிழிக் கோவணம் போயின நெறி மேல் சங்கை இன்றியே தப்பினது’ என்று, தம் சரக்கில் எங்கு நாடியும் கண்டிலர் என் செய்வார்; நின்றார்; அங் கண் வேதியர் பெரும் தொடக்கினில் அகப் பட்டார்.
மனைவியாரொடு மன்னிய கிளைஞரும் தாமும் இனையது ஒன்று வந்து எய்தியது என இடர் கூர்ந்து, நினைவது ஒன்று இலர்; வருந்தினர்; நிற்கவும் மாட்டார் புனைய வேறு ஒரு கோவணம் கொடு புறப்பட்டார்.
அத்தர் முன்பு சென்று, ‘அடிகள்! நீர் தந்த கோவணத்தை வைத்த இடத்து நான் கண்டிலன்; மற்றும் ஓர் இடத்தில் உய்த்து ஒளித்தனர் இல்லை; அஃது ஒழிந்தவாறு அறியேன்; இத்தகைத்த வேறு அதிசயம் கண்டிலேன்;’ என்று.
‘வேறு நல்லது ஓர் கோவணம் விரும்பி முன் கொணர்ந்தேன் கீறு கோவணம் அன்று; நெய்து அமைத்தது கிளர் கொள் நீறு சாத்திய நெற்றியீர்! மற்று அது களைந்து மாறு சாத்தி, என் பிழை பொறுப்பீர்!’ என வணங்க.
நின்ற வேதியர் வெகுண்டு, ‘அமர் நீதியார் நிலைமை நன்று; சாலவும் நாள் இடை கழிந்ததும் அன்று ஆல்; இன்று நான் வைத்த கோவணம் கொண்டு அதற்கு எதிர் ‘வேறு ஒன்று கொள்க’ என உரைப்பதே நீர்’ என உரையா.
‘நல்ல கோவணம் கொடுப்பன்’ என்று உலகின் மேல் நாளும் சொல்லு வித்தது என் கோவணம் கொள்வது துணிந்தோ? ஒல்லை ஈங்கு உறு வாணிபம் அழகிதே உமக்கு? என்று எல்லை இல்லவன் எரி துள்ளினால் என வெகுண்டான்.
மறி கரந்து தண்டு ஏந்திய மறைவர் வெகுளப் பொறி கலங்கிய உணர்வினர் ஆய் முகம் புலர்ந்து ‘சிறிய என் பெரும் பிழை பொறுத்து அருள் செய்வீர்; அடியேன் அறிய வந்தது ஒன்று அன்று’ என அடி பணிந்து அயர்வார்.
‘செயத்தகும் பணி செய்வன்; இக் கோவணம் அன்றி, நயத் தகுந்தன நல்ல பட்டு ஆடைகள், மணிகள், உயர்த்த கோடி கொண்டு அருளும்’ என்று உடம்பினில் அடங்காப் பயத்தொடும் குலைந்து அடி மிசைப் பல முறை பணிந்தார்.
பணியும் அன்பரை நோக்கி அப் பரம் பொருள் ஆனார் தணியும் உள்ளத்தார் ஆயினார் போன்று, ‘நீர் தந்த மணியும் பொன்னும் நல் ஆடையும் மற்றும் என் செய்ய? அணியும் கோவணம் நேர் தர அமையும்’ என்றருள்.
உடுத்த கோவணம் ஒழிய, நாம் உம் கையில் தர நீர் கெடுத்தது ஆக முன் சொல்லும் அக் கிழிந்த கோவணம் நீர் அடுத்த கோவணம் இது என்று தண்டினில் அவிழா எடுத்து, ‘மற்று இதன் எடை இடும் கோவணம்’ என்றார்.
‘நன்று சால’ என்று அன்பரும் ஒரு துலை நாட்டக் குன்ற வில்லியார் கோவணம் ஒரு தட்டில் இட்டார்; நின்ற தொண்டரும் கையினில் நெய்த கோவணம் தட்டு ஒன்றிலே இட, நிறை நிலாது ஒழிந்தமை கண்டார்.
நாடும் அன்பொடு நாயன்மார்க்கு அளிக்க முன் வைத்த நீடு கோவணம் அடைய நேராக, ஒன்றாக் கோடு தட்டின் மீது இடக் கொண்டு எழுந்தது கண்டு ஆடு சேவடிக்கு அடியரும் அற்புதம் எய்தி.
‘உலகில் இல்லது ஓர் மாயை இக் கோவணம் ஒன்றுக்கு அலகில் கோவணம் ஒத்தில’ என்று அதிசயத்துப் பலவும் மென் துகில் பட்டுடன் இட இட உயர இலகு பூந் துகில் பொதிகளை எடுத்து மேல் இட்டார்.
முட்டில் அன்பர் தம் அன்பு இடும் தட்டுக்கு முதல்வர் மட்டு நின்ற தட்டு அருளொடும் தாழ்வு உறும் வழக்கால் பட்டொடும் துகில் அநேக கோடிகள் இடும் பத்தர் தட்டு மேல் படத் தாழ்ந்தது கோவணத் தட்டு.
ஆன தன்மை கண்டு அடியவர் அஞ்சி அந்தணர் முன் தூ நறும் துகில் வர்க்கம் நூல் வர்க்கமே முதலா மானம் இல்லன குவிக்கவும் தட்டின் மட்டு இதுவால் ஏனை என் தனம் இடப்பெற வேண்டும்? என்று இறைஞ்ச.
மங்கை பாகராம் மறையவர் மற்று அதற்கு இசைந்தே, ‘இங்கு நாம் இனி வேறு ஒன்று சொல்வது என் கொல் அங்கு மற்று உங்கள் தனங்களில் ஆகிலும் இடுவீர் எங்கள் கோவணம் நேர் நிற்க வேண்டுவது’ என்றார்.
நல்ல பொன்னொடும் வெள்ளியும் நவ மணித் திரளும் பல் வகைத் திறத்து உலோகமும் புணர்ச்சிகள் பலவும் எல்லை இல் பொருள் சுமந்து அவர் இட இடக் கொண்டே மல்கு தட்டு மீது எழுந்தது; வியந்தனர் மண்ணோர்.
தவம் நிறைந்த நான் மறைப் பொருள் நூல்களால் சமைந்த சிவன் விரும்பிய கோவணம் இடும் செழும் தட்டுக்கு அவனி மேல் அமர் நீதியார் தனம் எலாம் அன்றிப் புவனம் யாவையும் நேர் நிலா என்பது புகழோ!
நிலைமை மற்று அது நோக்கிய நிகர் இலார் நேர் நின்று ‘உலைவில் பல்தனம் ஒன்று ஒழியாமை உய்த்து ஒழிந்தேன்; தலைவ! யானும் என் மனைவியும் சிறுவனும் தகுமேல் துலையில் ஏறிடப் பெறுவது உன் அருள்’ எனத் தொழுதார்.
பொச்சம் இல் அடிமைத்திறம் புரிந்தவர் எதிர் நின்று அச்சம் முன்பு உற உரைத்தலும் அங்கணர் அருளால் நிச்சயித்தவர் நிலையினைத் துலை எனும் சலத்தால் இச் சழக்கின் நின்று ஏற்றுவார்; ஏறுதற்கு இசைந்தார்.
மனம் மகிழ்ந்து அவர் மலர்க்கழல் சென்னியால் வணங்கிப் புனை மலர்க் குழல் மனைவியார் தம்மொடு புதல்வன் தனை, இடக் கொடு தனித் துலை வலம் கொண்டு தகவால் இனைய செய்கையில் ஏறுவார், கூறுவார் எடுத்து.
‘இழைத்த அன்பினில் இறை திருநீற்று மெய் அடிமை பிழைத்திலோம் எனில், பெரும் துலை நேர் நிற்க’ என்று மழைத் தடம் பொழில் திரு நல்லூர் இறைவரை வணங்கித் தழைத்த அஞ்சு எழுத்து ஓதினார்; ஏறினார் தட்டில்.
மண்டு காதலின் மற்று அவர் மகிழ்ந்து உடன் ஏற, அண்டர் தம்பிரான் திரு அரைக் கோவணம் அதுவும் கொண்ட அன்பினில் குறைபடா அடியவர் அடிமைத் தொண்டும் ஒத்தலால் ஒத்து நேர் நின்றது அத் துலைதான்.
மதி விளங்கிய தொண்டர் தம் பெருமையை மண்ணோர் துதி செய்து எங்கணும் அதிசயம் உற எதிர் தொழுதார்; கதிர் விசும்பு இடைக் கரந்திட நிரைந்த கற்பகத்தின் புதிய பூமழை இமையவர் மகிழ்வுடன் பொழிந்தார்.
அண்டர் பூமழை பொழிய மற்று அதன் இடை ஒளித்த முண்ட வேதியர் ஒரு வழியான் முதல் நல்லூர்ப் பண்டு தாம் பயில் கோலமே விசும்பினில் பாகம் கொண்ட பேதையும் தாமும் ஆய்க் காட்சி முன் கொடுத்தார்.
தொழுது போற்றி அத் துலை மிசை நின்று நேர் துதிக்கும் வழுஇல் அன்பரும் மைந்தரும் மனைவியார் தாமும் முழுதும் இன் அருள் பெற்றுத் தம் முன் தொழுது இருக்கும் அழிவு இல் வான் பதம் கொடுத்து எழுந்து அருளினார் ஐயர்.
நாதர் தம் திரு அருளினால் நல் பெரும் துலையே மீது கொண்டு எழு விமானம் அது ஆகி மேல் செல்லக் கோதில் அன்பரும் குடும்பமும் குறைவு அறக் கொடுத்த ஆதி மூர்த்தியார் உடன் சிவ புரியினை அணைந்தார்.
மலர் மிசை அயனும் மாலும் காணுதற்கு அரிய வள்ளல் பலர் புகழ் வெண்ணெய் நல்லூர் ஆவணப் பழமை காட்டி உலகு உய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித் தலை மிசை வைத்து வாழும் தலைமை நம் தலைமை ஆகும்.