அலையார்ந்த கடலுலகத்(து) அருந்திசைதோ(று) அங்கங்கே
நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க்(கு) இனி தியற்றி
ஈங்கருளி யெம்போல்வார்க்(கு) இடர்கெடுத்தல் காரணமா
ஓங்குபுகழ்ச் சண்பையெனு மொண்பதியு ளுதித்தனையே.
செஞ்சடைவெண் மதியணிந்த சிவனெந்தை திருவருளால்
வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை
நற்கண்ணி யளவிறந்த ஞானத்தை யமிர் தாக்கிப்
பொற்கிண்ணத்(து) அருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே
தோடணிகா தினனென்றுந் தொல்மரர்க் கெஞ்ஞான்றும்
தேடரிய பராபரனைச் செழுமறையின் அரும்பொருளை
அந்திச்செம் மேனியனை யடையாளம் பலசொல்லி
உந்தைக்குக் காண,வர னுவனாமென்(று) உரைத்தனையே
அராகம்
வளம்மலி தமிழிசை வடகலை மறைவல
முளரிநன் மலரணி தருதிரு முடியினை.
(1)
கடல்படுவிடமடை கறைமணி மிடறுடை
அடல்கரி யுரியனை யறிவுடை யளவினை.
(2)
பெயர்த்தும் தாழிசை
கரும்பினுமிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண் ணவன்அடிமேல்
பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.
(1)
பன்மறையோர் செய்தொழிலும், பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.
(2)
நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்
அணிதவத் தவர்களுக்(கு) அதிகவித் தகனும்நீ; (1)
தணிமனத் தருளுடைத் தவநெறித் கமிர்தம்நீ; (2)
அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனும்நீ: (3)
தமிழ்நலத் தொகையினில் தகுகவைப் பவனும்நீ; (4)
மூச்சீர் ஓரடி அம்போதரங்கம்
மறையவர்க் கொருவன் நீ: (1)
மருவலர்க் குருமு நீ; (2)
நிறைகுணத் தொருவன் நீ; (3)
நிகரில்உத் தமனும் நீ; (4)
இருசீர் ஓரடி அம்போதரங்கம்
அரியை நீ; (1)
அறவன் நீ; (3) எளியை நீ; (2)
துறவன் நீ; (4)
பெரியை நீ; (5)
பிள்ளை நீ; (7) உரியை நீ; (6)
வள்ளல் நீ; (8)
தனிச்சொல்
எனவாங்(கு)
சுரிதகம்
அருந்தமிழ் விரக! நிற் பரசுதும் திருந்திய
நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்
உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர்
சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்
5. தார்கெழு தண்டலை தண்பணை தழீஇ
கற்றொகு புரிசைக் காழியர் நாத!
நற்றொகு சீர்த்தி ஞானசம் பந்த!
நின்பெருங் கருணையை, நீதிநின்
அன்புடை அடியவர்க்(கு) அருளுவோய் எனவே.