தனமும், துகிலும், சாலிக் குலையும் கோலக் கனமாடச்
சண்பைத் திகழ்மா மறையோர் அதிபன், தவமெய்க் குலதீபன்
கனவண் கொடைநீ(டு) அருகாசனிதன் கமலக் கழல்பாடிக்
கண்டார் நிறையக் கொள்ளப், பசியைக் கருதா(து) எண்பாணர்
புனைதண் தமிழின் இசைஆர் புகலிக் கரசைப் புகழ்பாடிப்
‘புலையச் சேரிக் காளை புகுந்தால்’ என்சொல் புதிதாக்கிச்
சினவெங் கதமாக் களிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார்
சேரிக் குடிலும் இழந்தார்; இதனைச் செய்குவ(து) அறியாரே