பெறுபயன் மிகப்புவியு ளருளுவன பிற்றைமுறை
பெருநெறி யளிப்பனபல பிறவியை யொழிச்சுவன
உறுதுய ரழிப்பனமு னுமைதிரு வருட்பெருக
உடையன நதிப்புனலி னெதிர்பஃறி யுய்த்தனபுன்
நறுமுறு குரைச்சமணை நிரைகழு நிறுத்தியன
நனிகத வடைத்தனது னருவிட மகற்றியன
துறுபொழில் மதிற்புறவ முதுபதிம னொப்பரிய
தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே.