கொடிநீடு விடையுடைய பெருமானை யடிபரவு
குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்,
அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்
அணியான புகலிநக ரணைவான் கனைகடலின்
முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவனுமர்
முறையேவு பணிபுரிவ னணிதோணி புனைவனவை
படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி
பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே.