பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருநகரச் சிறப்பு
வ.எண் பாடல்
001

சொன்ன நாட்டு இடைத் தொன்மையில் மிக்கது
மன்னும் மா மலராள் வழி பட்டது;
வன்னி ஆறு மதி பொதி செம் சடைச்
சென்னியார் திருவாரூர்த் திருநகர்.

002

வேத ஓசையும் வீணையின் ஓசையும்
சோதி வானவர் தோத்திர ஓசையும்
மாதர் ஆடல் மணி முழவு ஓசையும்
கீத ஓசையு மாய்க் கிளர்வு உற்றவே.

003

பல் இயங்கள் பரந்த ஒலியுடன்
செல்வ வீதிச் செழு மணித் தேர் ஒலி,
மல்லல் யானை ஒலியுடன் மா ஒலி்,
எல்லை இன்றி எழுந்துஉள; எங்கணும்.

004

மாட மாளிகை, சூளிகை மண்டபம்,
கூட சாலைகள், கோபுரம், தெற்றிகள்,
நீடு சாளரம் நீடு அரங்கு எங்கணும்
ஆடல் மாதர் அணி சிலம்பு ஆர்ப்பன.

005

அங்கு உரைக்கு என் அளவு? அப் பதி இலார்
தங்கள் மாளிகையின் ஒன்று, சம்புவின்
பங்கினாள் திருச் சேடி பரவை ஆம்
மங்கையார் அவதாரம் செய் மாளிகை.

006

படர்ந்த பேர் ஒளிப் பன் மணி வீதி, பார்
இடந்த ஏனமும் அன்னமும் தேடுவார்
தொடர்ந்து கொண்ட வன்தொண்டர்க்குத் தூது போய்
நடந்த செம் தாமரை அடி நாறும் ஆல்.

007

செம் கண் மாதர் தெருவில் தெளித்த செம்
குங்குமத்தின் குழம்பை, அவர் குழல்
பொங்கு கோதையின் பூந் துகள் வீழ்ந்து உடன்
அம்கண் மேவி அளறு புலர்த்தும் ஆல்.

008

உள்ளம் ஆர் உருகாதவர்? ஊர் விடை
வள்ளல் ஆர் திருவாரூர் மருங்கு எலாம்
தெள்ளும் ஓசைத் திருப் பதிகங்கள், பைம்
கிள்ளை பாடுவ; கேட்பன பூவைகள்.

009

விளக்கம் மிக்க கலன்கள் விரவலால்
துளக்கு இல் பேர் ஒலியால் துன்னு பண்டங்கள்
வளத் தொடும் பலஆறு மடுத்தலால்
அளக்கர் போன்றன ஆவண வீதிகள்.

010

ஆரணங்களே அல்ல; மறுகு இடை
வாரணங்களும் மாறி முழங்கும் ஆல்;
சீர் அணங்கிய தேவர்களே அலால்,
தோரணங்களில் தாமமும் சூழும் ஆல்.

011

தாழ்ந்த வேணியர், சைவர், தபோதனர்,
வாழ்ந்த சிந்தை முனிவர், மறையவர்
வீழ்ந்த இன்பத் துறையுள் விரவுவார்
சூழ்ந்த பல் வேறு இடத்தது அத் தொல் நகர்.

012

நில மகட்கு அழகு ஆர் திரு நீள் நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ் பதி
மலர் மகட்கு வண் தாமரை போல் மலர்ந்து
அலகுஇல் சீர்த் திருவாரூர் விளங்கும் ஆல்.

013

அன்ன தொல் நகருக்கு அரசு ஆயினான்;
துன்னு செம் கதிரோன் வழித் தோன்றினான்;
மன்னு சீர் அநபாயன் வழி முதல்;
மின்னும் மா மணிப் பூண் மனு வேந்தனே.

014

மண்ணில் வாழ் தரு மன் உயிர்கட்கு எலாம்
கண்ணும் ஆவியும் ஆம் பெரும் காவலான்;
விண் உளார் மகிழ்வு எய்திட வேள்விகள்
எண் இலாதன மாண இயற்றினான்.

015

கொற்ற ஆழி குவலயம் சூழ்ந்திடச்
சுற்றும் மன்னர் திறை கடை சூழ்ந்திடச்
செற்றம் நீக்கிய செம்மையின் மெய்ம் மனுப்
பெற்ற நீதியும் தன் பெயர் ஆக்கினான்.

016

பொங்கு மா மறைப் புற்று இடம் கொண்டவர்
எங்கும் ஆகி இருந்தவர் பூசனைக்கு
அம் கண் வேண்டும் நிபந்தம் ஆராய்ந்து உளான்
துங்க ஆகமம் சொன்ன முறைமை ஆல்.

017

அறம் பொருள் இன்பம் ஆன அறநெறி வழாமல் புல்லி,
மறம் கடிந்து அரசர் போற்ற, வையகம் காக்கும் நாளில்,
சிறந்த நல் தவத்தால் தேவி திரு மணி வயிற்றின் மைந்தன்
பிறந்தனன்; உலகம் போற்றப் பேர் அரிக் குருளை அன்னான்.

018

தவம் முயன்று அரிதில் பெற்ற தனி இளங் குமரன் நாளும்
சிவம் முயன்று அடையும் தெய்வக் கலை பல திருந்த ஓதிக்
கவன வாம் புரவி யானை தேர் படைத் தொழில்கள் கற்றுப்
பவ முயன்று அதுவும் பேறே எனவரும் பண்பின் மிக்கான்.

019

அளவுஇல் தொல் கலைகள் முற்றி, அரும் பெறல் தந்தை மிக்க
உளம் மகிழ் காதல் கூர ஓங்கிய குணத்தால் நீடி,
இளவரசு என்னும் தன்மை எய்துதற்கு அணியன் ஆகி,
வளர் இளம் பரிதி போன்று வாழும் நாள் ஒருநாள் மைந்தன்.

020

திங்கள் வெண் கவிகை மன்னன் திரு வளர் கோயில் நின்று,
மங்குல் தோய் மாட வீதி மன் இளங் குமரர் சூழக்
கொங்கு அலர் மாலை தாழ்ந்த குங்குமம் குவவுத் தோளான்;
பொங்கிய தானை சூழத் தேர் மிசைப் பொலிந்து போந்தான்.

021

பரசு வந்தியர் முன், சூதர் மாகதர் ஒருபால், பாங்கர்
விரை நறுங் குழலார் சிந்தும் வெள் வளை ஒருபால், மிக்க
முரசொடு சங்கம் ஆர்ப்ப முழங்கு ஒலி ஒருபால், வென்றி
அரசு இளங் குமரன் போதும் அணி மணி மாட வீதி்.

022

தனிப் பெருந் தருமம் தான் ஓர் தயா இன்றித் தானை மன்னன்
பனிப்பு இல் சிந்தையினில் உண்மைப் பான்மை சோதித்தால் என்ன,
மனித்தர் தன் வரவு காணா வண்ணம் ஓர் வண்ணம் நல் ஆன்
புனிற்று இளம் கன்று துள்ளிப் போந்தது அம் மறுகின் ஊடே.

023

அம்புனிற்று ஆவின் கன்று ஓர் அபாயத்தின் ஊடு போகிச்
செம் பொனின் தேர்க்கால் மீது விசையினால் செல்லப் பட்டே
உம்பரின் அடையக் கண்டு அங்கு உருகுதாய் அலமந்து ஓடி
வெம்பிடும் அலறும் சோரும் மெய்ந் நடுக்குற்று வீழும்.

024

மற்று அது கண்டு மைந்தன் ‘வந்தது இங்கு அபாயம்’ என்று
சொல் தடுமாறி நெஞ்சில் துயர் உழந்து அறிவு அழிந்து,
‘பெற்றமும் கன்றும் இன்று என் உணர்வு எனும் பெருமை மாளச்
செற்ற, என் செய்கேன்?’ என்று தேரில் நின்று இழிந்து வீழ்ந்தான்.

025

அலறு பேர் ஆவை நோக்கி ஆர் உயிர் பதைத்துச் சோரும்;
நிலமிசைக் கன்றை நோக்கி நெடிது உயிர்த்து இரங்கி நிற்கும்;
‘மலர் தலை உலகம் காக்கும் மனுவெனும் என் கோமானுக்கு
உலகில் இப் பழி வந்து எய்தப் பிறந்தவா! ஒருவன்’ என்பான்.

026

வந்த இப் பழியை மாற்றும் வகையினை மறை நூல் வாய்மை
அந்தணர் விதித்த ஆற்றால் ஆற்றுவது அறமே ஆகில்,
எந்தை ஈது அறியா முன்னம் இயற்றுவன்’ என்று மைந்தன்,
சிந்தை வெம் துயரம் தீர்ப்பான் திரு மறையவர் முன் சென்றான்.

027

தன்உயிர்க் கன்று வீயத் தளர்ந்த ஆத் தரியாது ஆகி
முன் நெருப்பு உயிர்த்து விம்மி முகத்தினில் கண்ணீர் வார
மன் உயிர் காக்கும் செம்கோல் மனுவின் பொன் கோயில் வாயில்
பொன் அணி மணியைச் சென்று கோட்டினால் புடைத்தது அன்றே.

028

பழிப்பறை முழக்கோ? ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ? வேந்தன்
வழித் திரு மைந்தன் ஆவி கொள வரும் மறலி ஊர்திக்
கழுத்து அணி மணியின் ஆர்ப்போ? என்னத் தன் கடைமுன் கோளாத்
தெழித்து எழும் ஓசை மன்னன் செவிப்புலம் புக்க போது.

029

ஆங்கு அது கேட்ட வேந்தன் அரி யணை இழிந்து போந்து
பூங் கொடி வாயில் நண்ணக் காவலர் எதிரே போற்றி,
‘ஈங்கு இது ஓர் பசு வந்து எய்தி, இறைவ! நின் கொற்ற வாயில்
தூங்கிய மணியைக் கோட்டால் துளக்கியது’ என்று சொன்னார்.

030

மன்னவன் அதனைக் கேளா வருந்திய பசுவை நோக்கி,
‘என் இதற்கு உற்றது’ என்பான் அமைச்சரை இகழ்ந்து நோக்கி
முன் உற நிகழ்ந்த எல்லாம் அறிந்துளான் முதிர்ந்த கேள்வி்த்
தொல் நெறி அமைச்சன், மன்னன் தாள் இணை தொழுது சொல்வான்.

031

வளவ! நின் புதல்வன் ஆங்கு ஓர் மணி நெடுந் தேர்மேல் ஏறி,
அளவுஇல் தேர்த் தானை சூழ அரசு உலாந் தெருவில் போங்கால்
இளைய ஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்தது ஆகத்
தளர்வு உறும் இத் தாய் வந்து விளைத்தது இத் தன்மை’ என்றான்.

032

அவ்வுரை கேட்ட வேந்தன் ஆ உறு துயரம் எல்லாம்,
வெவ் விடம் தலைக் கொண்டாற் போல் வேதனை அகத்து மிக்கு, ‘இங்கு
இவ் வினை விளைந்தவாறு?’ என்று இடர் உறும்; இரங்கும்; ஏங்கும்;
‘செவ்விது என் செங்கோல்’ என்னும்; தெருமரும்; தெளியும்; தேறான்.

033

‘மன் உயிர் புரந்து வையம் பொதுக் கடிந்து அறத்தில் நீடும்
என் நெறி நன்று ஆல்’ என்னும்; ‘என்செய்தால் தீரும்’ என்னும்;
தன் இளம் கன்று காணாத் தாய் முகம் கண்டு சோரும்;
அந் நிலை அரசன் உற்ற துயரம் ஓர் அளவிற்று அன்று ஆல்.

034

மந்திரிகள் அது கண்டு மன்னவனை அடி வணங்கிச்
‘சிந்தை தளர்ந்து அருளுவது மற்று இதற்குத் தீர்வு அன்றால்;
கொந்து அலர் தார் மைந்தனை முன் கோ வதை செய்தார்க்கு மறை
அந்தணர்கள் விதித்த முறை வழி நிறுத்தல் அறம்’ என்றார்.

035

வழக்கு என்று நீர் மொழிந்தால் மற்று அது தான் வலிப்பட்டுக்
குழக்கன்றை இழந்து அலறும் கோ உறு நோய் மருந்துஆமோ?
“இழக்கின்றேன் மைந்தனை” என்று எல்லீரும் சொல்லிய இச்
சழக்கு இன்று நான் இசைந்தால் தருமம் தான் சலியாதோ?

036

மா நிலம் காவலன் ஆவான் மன் உயிர் காக்கும் காலைத்
தான் அதனக்கு இடையூறு தன்னால், தன் பரிசனத்தால்,
ஊனம் மிகு பகைத் திறத்தால், கள்வரால், உயிர் தம்மால்,
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லன் ஓ?

037

என் மகன் செய் பாதகத்துக்கு இரும்தவங்கள் செய இசைந்தே
அன்னியன் ஓர் உயிர் கொன்றால் அவனைக் கொல்வேன் ஆனால்,
“தொன் மனு நூல் தொடை மனுவால் துடைப்பு உண்டது” எனும் வார்த்தை
மன்உலகில் பெற மொழிந்தீர்! மந்திரிகள்! வழக்கு! என்றான்.

038

என்று அரசன் இகழ்ந்து உரைப்ப எதிர் நின்ற மதி அமைச்சர்
‘நின்ற நெறி உலகின் கண் இது போல் முன் நிகழ்ந்தது ஆல்;
பொன்று வித்தல் மரபு அன்று; மறை மொழிந்த அறம் புரிதல்
தொன்று தொடு நெறி யன்றோ? தொல் நிலம் காவல!’ என்றார்.

039

அவ் வண்ணம் தொழுது உரைத்த அமைச்சர்களை முகம் நோக்கி,
மெய் வண்ணம் தெரிந்து உணர்ந்த மனு என்னும் விறல் வேந்தன்,
‘இவ் வண்ணம் பழுது உரைத்தீர்’ என்று எரியின் இடைத் தோய்ந்த
செவ் வண்ணக் கமலம் போல் முகம் புலர்ந்து செயிர்த்து உரைப்பான்.

040

அவ்வுரையில் வரும் நெறிகள் அவை நிற்க; அறநெறியி்ன்
செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செயாது உரைக்கின்றீர்;
“எவ் உலகில் எப் பெற்றம் இப் பெற்றித் தாம் இடரால்
வெவ் உயிர்த்துக் கதறி மணி எறிந்து விழுந்தது?” விளம்பீர்!

041

‘போற்றி இசைத்துப் புரந்தரன் மால் அயன் முதலோர் புகழ்ந்து இறைஞ்ச,
வீற்று இருந்த பெருமானார் மேவி உறை திருவாரூர்த்
தோற்றம் உடை உயிர் கொன்றான் ஆதலினால், துணி பொருள் தான்
ஆற்றவும் மற்று அவற் கொல்லும் அதுவேயாம் என நினைமின்’.

042

என மொழிந்து ‘மற்று இதனுக்கு இனி இதுவே செயல்; இவ் ஆன்
மனம் அழியும் துயர் அகற்ற மாட்டாதேன் வருந்தும் இது
தனது உறு பேர் இடர் யானும் தாங்குவதே கருமம்’ என
அனகன் அரும் பொருள் துணிந்தான்; அமைச்சரும் அஞ்சினர், அகன்றார்.

043

மன்னவன் தன் மைந்தனை அங்கு அழைத்து ஒரு மந்திரி தன்னை,
‘முன் இவனை அவ்வீதி முரண் தேர்க்கால் ஊர்க’ என
அன்னவனும் அது செய்யாது அகன்று தன் ஆர்உயிர் துறப்பத்
தன்னுடைய குல மகனைத் தான் கொண்டு மறுகு அணைந்தான்.

044

ஒரு மைந்தன் தன் குலத்துக்கு உள்ளான் என்பதும் உணரான்;
‘தருமம், தன் வழிச்செல்கை கடன்’ என்று தன் மைந்தன்
மருமம், தன் தேர் ஆழி உற ஊர்ந்தான் மனு வேந்தன்;
அருமந்த அரசாட்சி அரிதோ? மற்று எளிதோ தான்?

045

தண் அளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
மண்ணவர் கண் மழை பொழிந்தார்; வானவர் பூமழை சொரிந்தார்
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதி விடங்கப் பெருமான்.

046

சடை மருங்கில் இளம் பிறையும் தனி விழிக்கும் திருநுதலும்
இடம் மருங்கில் உமையாளும் எம் மருங்கும் பூத கணம்
புடை நெருங்கும் பெருமையும் முன் கண்டு அரசன் போற்றி இசைப்ப
விடை மருவும் பெருமானும் விறல் வேந்தற்கு அருள் கொடுத்தான்.

047

அந் நிலையே உயிர் பிரிந்த ஆன் கன்றும் அவ் அரசன்
மன் உரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன் எழலும்,
இன்ன பரிசு ஆனான் என்று அறிந்திலன் வேந்தனும்; யார்க்கும்
முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

048

அடி பணிந்த திருமகனை ஆகம் உற எடுத்து அணைத்து
நெடிது மகிழ்ந்து அரும் துயரம் நீங்கினான் நில வேந்தன்
மடி சுரந்து பொழி தீம் பால், வரும் கன்று மகிழ்ந்து உண்டு
படி நனைய வரும் பசுவும் பருவரல் நீங்கியது அன்றே.

049

பொன் தயங்கு மதில் ஆரூர்ப் பூங்கோயில் அமர்ந்தபிரான்,
வென்றி மனு வேந்தனுக்கு வீதியிலே அருள் கொடுத்துச்
சென்று அருளும் பெரும் கருணைத் திறம் கண்டு தன் அடியார்க்கு
என்றும் எளிவரும் பெருமை ஏழ் உலகும் எடுத்து ஏத்தும்.

050

இனைய வகை அற நெறியில் எண் இறந்தோர்க்கு அருள் புரிந்து
முனைவர் அவர் மகிழ்ந்து அருளப் பெற்று உடைய மூதூர் மேல்
புனையும் உரை நம் அளவில் புகலல்ஆம் தகைமை அதோ?
அனைய தனுக்கு அக மலராம் அறவனார் பூங் கோயில்.