பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஆரூர் - பழமொழி
வ.எண் பாடல்
1

“ மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே
உய்யல் ஆம்” என்று எண்ணி, உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு,
கொய் உலா மலர்ச்சோலைக் குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரைக்
கையினால்-தொழாது ஒழிந்து,-கனி இருக்கக் காய் கவர்ந்த கள்வனேனே!

2

என்பு இருத்தி, நரம்பு தோல் புகப் பெய்திட்டு, என்னை ஓர் உருவம் ஆக்கி,
இன்பு இருத்தி, முன்பு இருந்த வினை தீர்த்திட்டு, என் உள்ளம் கோயில் ஆக்கி,
அன்பு இருத்தி, அடியேனைக் கூழ் ஆட்கொண்டு அருள் செய்த ஆரூரர் தம்
முன்பு இருக்கும் விதி இன்றி,-முயல் விட்டுக் காக்கைப்பின் போன ஆறே!

3

பெருகுவித்து என் பாவத்தை, பண்டு எலாம் குண்டர்கள் தம் சொல்லே கேட்டு
உருகுவித்து, என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி,
அருகுவித்து, பிணி காட்டி, ஆட்கொண்டு, பிணி தீர்த்த ஆரூரர் தம்
அருகு இருக்கும் விதி இன்றி,-அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்ட ஆறே!

4

குண்டனாய்த் தலை பறித்து, குவிமுலையார் நகை காணாது, உழிதர் வேனை-
பண்டமாப் படுத்து, என்னைப் பால் தலையில்-தெளித்து, தன் பாதம் காட்டி,
தொண்டு எலாம் இசை பாட- தூமுறுவல் அருள் செய்யும் ஆரூரரைப்
பண்டு எலாம் அறியாதே,-பனி நீரால் பரவை செயப் பாவித்தேனே!

5

துன்நாகத்தேன் ஆகி, துர்ச்சனவர் சொல் கேட்டு, துவர் வாய்க்கொண்டு(வ்)
என்னாகத் திரிதந்து, ஈங்கு இருகை ஏற்றிட உண்டேன், ஏழையேன் நான்,
பொன் ஆகத்து அடியேனைப் புகப் பெய்து பொருட்படுத்த ஆரூரரை
என் ஆகத்து இருத்தாதே,-ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே!

6

பப்பு ஓதிப் பவணனாய்ப் பறித்தது ஒரு தலையோடே திரிதர் வேனை
ஒப்பு ஓட ஓதுவித்து, என் உள்ளத்தினுள் இருந்து, அங்கு உறுதி காட்டி,
அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆர் அமுது ஆம் ஆரூரரை
எப்போதும் நினையாதே,-இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே!

7

கதி ஒன்றும் அறியாதே, கண் அழலைத் தலை பறித்து, கையில் உண்டு
பதி ஒன்று நெடுவீதிப் பலர் காண நகை நாணாது உழிதர் வேற்கு
மதி தந்த ஆருரில் வார் தேனை வாய்மடுத்துப் பருகி உய்யும்
விதி இன்றி, மதி இலியேன், விளக்கு இருக்க மின்மினித்தீக் காய்ந்த ஆறே!

8

பூவை ஆய்த் தலை பறித்து, பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு
காவி சேர் கண் மடவார்க் கண்டு ஓடிக் கதவு அடைக்கும் கள்வனேன் தன்
ஆவியைப் போகாமே தவிர்த்து, என்னை ஆட்கொண்ட ஆரூரரைப்
பாவியேன் அறியாதே,-பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே!

9

ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின் வாயின் வீழக்
கட்டானை, காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ
அட்டானை, ஆரூரில் அம்மானை, ஆர்வச் செற்றக் குரோதம்
தட்டானை, சாராதே,-தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே!

10

மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்-ஐந்து முடியினொடு தோளும் தாளும்
இறுத்தானை, எழில் முளரித்த விசின் மிசை இருந்தான் தன் தலையில் ஒன்றை
அறுத்தானை, ஆரூரில் அம்மானை, ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை, கருதாதே,-கரும்பு இருக்க இரும்பு கடித்து எயத்த ஆறே!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவாரூர்
வ.எண் பாடல்
1

சூலப் படை யானை; சூழ் ஆக வீழ் அருவி
கோலத் தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை;
பால் ஒத்த மென் மொழியாள் பங்கனை; பாங்கு ஆய
ஆலத்தின் கீழானை;-நான் கண்டது ஆரூரே.

2

பக்கமே பாரிடங்கள் சூழ, படுதலையில்
புக்க ஊர்ப் பிச்சை ஏற்று, உண்டு, பொலிவு உடைத்து ஆய்க்
கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த, கோவணத்தோடு
அக்கு அணிந்த, அம்மானை-நான் கண்டது ஆரூரே.

3

சேய உலகமும் செல் சார்வும் ஆனானை,
மாயப் போர் வல்லானை, மாலை தாழ் மார்பானை,
வேய் ஒத்த தோளியர் தம் மென் முலை மேல்-தண் சாந்தின்
ஆயத்து இடையானை,-நான் கண்டது ஆரூரே.

4

ஏறு ஏற்றமா ஏறி, எண் கணமும் பின் படர,
மாறு ஏற்றார் வல் அரணம் சீறி, மயானத்தின்
நீறு ஏற்ற மேனியனாய், நீள் சடை மேல் நீர் ததும்ப
ஆறு ஏற்ற அந்தணனை-நான் கண்டது ஆரூரே.

5

தாம் கோல வெள் எலும்பு பூண்டு, தம் ஏறு ஏறி,
பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார்
தேம் காவி நாறும் திரு ஆரூர்த் தொல்-நகரில்
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே.

6

எம் பட்டம் பட்டம் உடையானை, ஏர் மதியின்
நும் பட்டம் சேர்ந்த நுதலானை, அந்திவாய்ச்
செம்பட்டு உடுத்துச் சிறு மான் உரி ஆடை
அம் பட்டு அசைத்தானை,-நான் கண்டது ஆரூரே.

7

போழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு
வேழத்து உரி போர்த்தான், வெள் வளையாள் தான் வெருவ,
ஊழித் தீ அன்னானை, ஒங்கு ஒலிமாப் பூண்டது ஓர்
ஆழித் தேர் வித்தகனை,-நான் கண்டது ஆரூரே.

8

வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை,
துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை, தன் தொண்டர்
நெஞ்சின் இருள் கூரும்பொழுது நிலாப் பாரித்து
அம் சுடர் ஆய் நின்றானை,-நான் கண்டது ஆரூரே.

9

கார முது கொன்றை கடி நாறு தண் என்ன
நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன்,
பேர் அமுதம் உண்டார்கள் உய்யப் பெருங் கடல் நஞ்சு
ஆர் அமுதா உண்டானை, -நான் கண்டது ஆரூரே.

10

தாள் தழுவு கையன், தாமரைப் பூஞ்சேவடியன்,
கோள் தால வேடத்தன், கொண்டது ஓர் வீணையினான்,
ஆடு அரவக் கிண்கிணிக் கால் அன்னான் ஓர் சேடனை,
ஆடும் தீக் கூத்தனை,-நான் கண்டது ஆரூரே.

11

மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி, மணி விரலால்,
துஞ்சாப் போர் வாள் அரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்-
செஞ் சாந்து அணிவித்து, தன் மார்பில் பால் வெண் நீற்று-
அம்சாந்து அணிந்தானை-நான் கண்டது ஆரூரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவாரூர்
வ.எண் பாடல்
1

காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய்; கழல் அடி
பூண்டு கொண்டொழிந்தேன்; புறம் போயினால் அறையோ?-
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகைமேல் எழு கொடி வான் இள (ம்) மதி
தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே!

2

கடம் பட(ந்) நடம் ஆடினாய்; களைகண் நினைக்கு ஒரு காதல் செய்து, அடி
ஒடுங்கி வந்து அடைந்தேன்; ஒழிப்பாய், பிழைப்ப எல்லாம்!-
முடங்கு இறா, முது நீர் மலங்கு, இள வாளை, செங்கயல், சேல் வரால், களிறு,
அடைந்த தண் கழனி, அணி ஆரூர் அம்மானே!

3

அரு மணித் தடம் பூண் முலை அரம்பையரொடு அருளிப்பாடியர்
உரிமையில்- தொழுவார், உருத்திர பல் கணத்தார்
விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள்
தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே!

4

பூங்கழல் தொழுதும் பரவியும், புண்ணியா! புனிதா! உன் பொன் கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன்; என்ன குறை உடையேன்?-
ஓங்கு தெங்கு, இலை ஆர் கமுகு, இள வாழை, மாவொடு, மாதுளம், பல-
தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே!

5

நீறு சேர் செழு மார்பினாய்; நிரம்பா மதியொடு நீள்சடை இடை
ஆறு பாய வைத்தாய்; அடியே அடைந்தொழிந்தேன்
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற, விண்ட மலர் இதழ் வழி
தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே!

6

“அளித்து வந்து அடி கைதொழுமவர்மேல் வினை கெடும்” என்று இ(வ்) வையகம்
களித்து வந்து உடனே கலந்து ஆடக் காதல் ஆய்க்
குளித்தும், மூழ்கியும், தூவியும், குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புகத்
தெளிக்கும் தீர்த்தம் அறாத் திரு ஆரூர் அம்மானே!

7

திரியும் மூ எயில் தீ எழச் சிலை வாங்கி நின்றவனே! என் சிந்தையுள
பிரியும் ஆறு எங்ஙனே? பிழைத்தேயும் போகல் ஒட்டேன்
பெரிய செந்நெல், பிரம்புரி, கெந்தசாலி, திப்பியம் என்று இவை அகத்து
அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே!

8

பிறத்தலும், பிறந்தால் பிணிப் பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று
இறக்கும் ஆறு உளதே; இழித்தேன், பிறப்பினை நான்;
அறத்தையே புரிந்த மனத்தனாய், ஆர்வச்செற்றக்குரோதம் நீக்கி, உன்
திறத்தனாயொழிந்தேன் -திரு ஆரூர் அம்மானே!

9

முளைத்த வெண்பிறை மொய் சடை உடையாய்! எப்போதும் என் நெஞ்சு இடம் கொள
வளைத்துக் கொண்டிருந்தேன்; வலி செய்து போகல் ஒட்டேன்
அளைப் பிரிந்த அலவன் போய்ப் புகு தந்த காலமும் கண்டு தன் பெடை
திளைக்கும் தண் கழனித் திரு ஆரூர் அம்மானே!

10

நாடினார், -கமலம்மலர் அயனோடு, இரணியன் ஆகம் கீண்டவன்,
நாடிக் காணமாட்டாத் தழல் ஆய நம்பானை,
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு
தேடிக் கண்டு கொண்டேன்; திரு ஆரூர் அம்மானே!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவாரூர் -திரு ஆதிரைத் திருப்பதிகம்
வ.எண் பாடல்
1

முத்து விதானம்; மணி பொன் கவரி; முறையாலே
பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே
வித்தகக் கோல வெண்தலைமாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

2

நணியார் சேயார், நல்லார் தீயார், நாள்தோறும்
பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்;-
“மணியே! பொன்னே! மைந்தா! மணாளா!” என்பார்கட்கு
அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

3

வீதிகள் தோறும் வெண் கொடியோடு விதானங்கள்
சோதிகள் விட்டுச் சுடர் மா மணிகள்; ஒளி தோன்றச்
சாதிகள் ஆய பவளமும் முத்துத் தாமங்கள்
ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

4

குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள்
பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார்
வணங்கி நின்று வானவர் வந்து வைகலும்
அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

5

நில வெண் சங்கும் பறையும்(ம்) ஆர்ப்ப, நிற்கில்லாப்
பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்து, எங்கும்
கலவ மஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து
அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

6

விம்மா, வெருவா, விழியா, தெழியா, வெருட்டுவார்;
தம் மாண்பு இலராய்த் தரியார், தலையான் முட்டுவார்
“எம்மான், ஈசன், எந்தை, என் அப்பன்” என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

7

செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பாா
மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார்
இந்திரன் ஆதி வானவர், சித்தர், எடுத்து ஏத்தும்
அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

8

முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல,
வடி கொள் வேய்த்தோள் வான் அரமங்கையர் பின் செல்ல,
பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ,
அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

9

“துன்பம், நும்மைத் தொழாத நாள்கள்” என்பாரும்,
“இன்பம், நும்மை ஏத்தும் நாள்கள்” என்பாரும்,
“நுன்பின் எம்மை நுழையப் பணியே!” என்பாரும்;
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்!

10

பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்து ஏத்த,
சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து,
ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும்
ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவாரூர்
வ.எண் பாடல்
1

படு குழிப் பவ்வத்து அன்ன பண்டியைப் பெய்த ஆற்றால்
கெடுவது இம் மனிதர் வாழ்க்கை; காண் தொறும் கேதுகின்றேன்;
முடுகுவர், இருந்து உள் ஐவர் மூர்க்கரே; இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!

2

புழுப் பெய்த பண்டி தன்னைப் புறம் ஒரு தோலால் மூடி
ஒழுக்கு அறா ஒன்பது(வ்) வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை;
சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய,
அழிப்பனாய் வாழ மாட்டேன்-ஆரூர் மூலட்டனீரே!

3

பஞ்சின் மெல் அடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று
நெஞ்சில் நோய் பலவும் செய்து, நினையினும் நினைய ஒட்டார்
நஞ்சு அணி மிடற்றினானே! நாதனே! நம்பனே! நான்
அஞ்சினேற்கு, “அஞ்சல்!” என்னீர்-ஆரூர் மூலட்டனீரே!

4

கெண்டை அம் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரி தந்து ஐவர் குலைத்து இடர்க் குழியில் நூக்கக்
கண்டு நான் தரிக்ககில்லேன்; காத்துக் கொள்! கறை சேர் கண்டா!
அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே!

5

தாழ் குழல் இன் சொல் நல்லார் தங்களைத் தஞ்சம் என்று(வ்)
ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன்? எந்தை பெம்மான்!
வாழ்வ தேல் அரிது போலும்; வைகலும் ஐவர் வந்து(வ்)
ஆழ் குழிப் படுக்க ஆற்றேன்-ஆரூர் மூலட்டனீரே!

6

மாற்றம் ஒன்று அருள கில்லீர்; மதி இலேன் விதி இலாமை
சீற்றமும் தீர்த்தல் செய்யீர்; சிக்கனவு உடையர் ஆகிக்
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய,
ஆற்றவும் கில்லேன், நாயேன் ஆரூர் மூலட்டனீரே!

7

உயிர் நிலை உடம்பே காலா, உள்ளமே தாழி ஆக,
துயரமே ஏற்றம் ஆக, துன்பக் கோல் அதனைப் பற்றி,
பயிர் தனைச் சுழிய விட்டு, பாழ்க்கு நீர் இறைத்து, மிக்க
அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே!

8

கற்ற தேல் ஒன்றும் இல்லை; காரிகையாரோடு ஆடிப்
பெற்ற தேல் பெரிதும் துன்பம்; பேதையேன் பிழைப்பினாலே
முற்றினால் ஐவர் வந்து முறை முறை துயரம் செய்ய
அற்று நான் அலந்து போனேன் ஆரூர் மூலட்டனீரே!

9

பத்தனாய் வாழ மாட்டேன், பாவியேன்; பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய் வினை பலவும் செய்ய,
மத்து உறு தயிரே போல மறுகும், என் உள்ளம் தானும்
அத்தனே! அமரர்கோவே! ஆரூர் மூலட்டனீரே!

10

தடக்கை நால்-ஐந்தும் கொண்டு தட வரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க, ஓடி இரிந்தன, பூதம் எல்லாம்;
முடித் தலை பத்தும் தோளும் முறி தர இறையே ஊன்றி
அடர்த்து, அருள் செய்தது என்னே? ஆரூர் மூலட்டனீரே!

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவாரூர்
வ.எண் பாடல்
1

குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல் கண்ணி தன்னைக்
கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்கள்; அக் கணங்கள் ஆர
அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல், வலம் கொண்டல், செய்வான் தோன்றினார் தோன்றினாரே.

2

நாகத்தை நங்கை அஞ்ச; நங்கையை மஞ்ஞை என்று
வேகத்தைத் தவிர, நாகம்; வேழத்தின் உரிவை போர்த்துப்
பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி
ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும், ஆரூரனார்க்கே.

3

தொழுது அகம் குழைய மேவித் தொட்டிமை உடைய தொண்டர்
அழுத(அ)அகம் புகுந்து நின்றார், அவர் அவாப் போலும்-ஆரூர்
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும், ஏர் கொள் வேலிப்
பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே.

4

நஞ்சு இருள் மணி கொள் கண்டர்; நகை இருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன
அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே.

5

“எம் தளிர் நீர்மை கோல மேனி” என்று இமையோர் ஏத்த,
பைந்தளிர்க் கொம்பர் அன்ன படர்கொடி பயிலப் பட்டு,
தம் சடைத் தொத்தினாலும் த(ம்)மது ஓர் நீர்மையாலும்
அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே.

6

வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடித்
தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும்,
ஊன் அகம் கழிந்த ஓட்டில்; உண்பதும், ஒளி கொள் நஞ்சம்-
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே.

7

அஞ்சு அணை கணையினானை அழல் உற அன்று நோக்கி,
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு(வ்),
அஞ்சு அணை அஞ்சும் ஆடி, ஆடு அரவு ஆட்டுவார் தாம்,
அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம் கொண்டாரே.

8

வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீரப்
பிணங்கு உடைச் சடையில் வைத்த பிறை உடைப் பெருமை அண்ணல்,
மணம் கமழோதி பாகர்-மதி நிலா வட்டத்து ஆடி
அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே.

9

நகல் இடம் பிறர்கட்கு ஆக, நால்மறையோர்கள் தங்கள்
புகல் இடம் ஆகி வாழும் புகல் இலி-இருவர் கூடி
இகல் இடம் ஆக, நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி,
அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே.

10

ஆயிரம் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி,
ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ
ஆயிரம் தோளும் மட்டித்து, ஆடிய அசைவு தீர,
ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே.

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவாரூர்
வ.எண் பாடல்
1

குலம் பலம் பாவரு குண்டர்முன்னே நமக்கு உண்டுகொலோ-
அலம்பு அலம்பா வரு தண்புனல் ஆரூர் அவிர்சடையான்,
சிலம்பு அலம்பா வரு சேவடியான், திரு மூலட்டானம்
புலம்பு அலம்பா வரு தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

2

மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர்
சொல்-திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டுகொலோ-
வில்-திடம் வாங்கி, விசயனொடு அன்று ஒரு வேடுவனாய்,
புற்று இடம்கொண்டான்தன் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

3

ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர்முன் நமக்கு உண்டுகொலோ-
செரு வடி வெஞ்சிலையால் புரம் அட்டவன், சென்று அடையாத்
திரு உடையான், திரு ஆரூர்த் திருமூலட்டானன், செங்கண்
பொரு விடையான், அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

4

மாசினை ஏறிய மேனியர், வன்கண்ணர், மொண்ணரை விட்டு
ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டுகொலோ-
தேசனை, ஆரூர்த் திருமூலட்டானனை, சிந்தைசெய்து
பூசனைப் பூசுரர்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

5

அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று,
வருந்தி நினைந்து, “அரனே!” என்று வாழ்த்துவேற்கு உண்டுகொலோ-
திருந்திய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொருந்தும் தவம் உடைத் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

6

வீங்கிய தோள்களும் தாள்களும் ஆய் நின்று, வெற்று அரையே
மூங்கைகள் போல் உண்ணும் மூடர்முன்னே நமக்கு உண்டு கொலோ-
தேம் கமழ் சோலைத் தென் ஆரூர்த் திருமூலட்டானன், செய்ய-
பூங்கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

7

பண்ணிய சாத்திரப் பேய்கள் பறி தலைக் குண்டரை விட்டு
எண் இல் புகழ் ஈசன்தன் அருள் பெற்றேற்கும் உண்டுகொலோ-
திண்ணிய மா மதில் ஆரூர்த் திருமூலட்டானன், எங்கள்
புண்ணியன் தன் அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

8

கரப்பர்கள், மெய்யை; “தலை பறிக்கச் சுகம்” என்னும் குண்டர்
உரைப்பன கேளாது, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
திருப் பொலி ஆரூர்த் திருமூலட்டானன், திருக்கயிலைப்-
பொருப்பன், விருப்பு அமர் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

9

கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு,
உய்யும் நெறி கண்டு, இங்கு உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
ஐயன், அணி வயல் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்
பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

10

குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு,
உற்ற கருமம் செய்து, உய்யப் போந்தேனுக்கும் உண்டுகொலோ-
மல் பொலி தோளான், இராவணன்தன் வலி வாட்டுவித்த
பொன் கழலான், அடித் தொண்டர்க்குத் தொண்டர் ஆம் புண்ணியமே?

திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருவாரூர்
வ.எண் பாடல்
1

வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி, வினை பெருக்கி,
தூம்பினைத் தூர்த்து, அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர், தொண்டீர்!
ஆம்பல் அம்பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழல் கீழ்,
சாம்பலைப் பூசி, சலம் இன்றி, தொண்டுபட்டு உய்ம்மின்களே!

2

ஆராய்ந்து, அடித்தொண்டர் ஆணிப் பொன், ஆரூர் அகத்து அடக்கிப்
பார் ஊர் பரப்பத் தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான்,
நார் ஊர் நறுமலர் நாதன், அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால்-திருவிளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே!

3

பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால்
ஆம் படிமக் கலம் ஆகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார்-
தாம் படிமக் கலம் வேண்டு வரேல்,-தமிழ் மாலைகளால்
நாம் படிமக்கலம் செய்து தொழுதும், மட நெஞ்சமே!

4

துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து, துளங்கா மதி அணிந்து,
முடித் தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி,
பொடிக்கொண்டு பூசிக் புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால்
அடித்தொண்டன் நந்தி என்பான் உளன், ஆரூர் அமுதினுக்கே.

5

கரும்பு பிடித்தவர் காயப்பட்டார்; அங்கு ஓர் கோடலியால்
இரும்பு பிடித்தவர் இன்பு உறப்பட்டார்; இவர்கள் நிற்க,
அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான்
விரும்பு மனத்தினை, “யாது ஒன்று?” நான் உன்னை வேண்டுவனே.

6

கொடி, கொள் விதானம், கவரி, பறை, சங்கம், கைவிளக்கோடு,
இடிவு இல் பெருஞ் செல்வம் எய்துவர்; எய்தியும் ஊனம் இல்லா
அடிகளும் ஆரூர் அகத்தினர் ஆயினும், அம் தவளப்-
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும், நந்தி புறப்படினே.

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

சங்கு ஒலிப்பித்திடுமின், சிறுகாலைத் தடவு அழலில்
குங்கிலியப்புகைக்கூட்டு என்றும் காட்டி! இருபதுதோள்
அங்கு உலம் வைத்தவன் செங்குருதிப்புனல் ஓட அஞ் ஞான்று
அங்குலி வைத்தான் அடித்தாமரை என்னை ஆண்டனவே.